தோழர் தியாகு எழுதுகிறார் : சென்னை-‘ஐ’ வந்தாலும் வரலாம், காங்கிரசு-‘ஐ’ வந்து விடக் கூடாது!
(தோழர் தியாகு எழுதுகிறார் : இன உரிமை இலட்சிய மாநாடு-தொடர்ச்சி)
இனிய அன்பர்களே!
நவம்பர் புரட்சி நாள் வாழ்த்து! சென்ற ஆண்டு இதே நவம்பர் புரட்சி நாளில்தான் தாழி மடல் எழுதத் தொடங்கினேன். இன்றும் அதே ஊக்கத்துடன் எழுத விரும்புகிறேன். உடல்நிலைதான் நலிந்துள்ளது. பெரிதாக ஒன்றுமில்லை. கண்வலிதான், ஆனால் காலையில் வந்து மாலையில் போவதாக இல்லை. மூன்று நாளாக வதைக்கிறது. இந்தக் கண்வலிக்கு ‘சென்னைக் கண் (மெட்ராசு-ஐ)’ என்ற பெயர் எப்படி வந்ததோ தெரியவில்லை. ஆனால் இந்தப் பெயரை வைத்து நடந்த ஒரு கூத்தை உங்களுக்குச் சொல்கிறேன். –
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சென்னை – ‘ஐ’ வந்தாலும் வரலாம்,
காங்கிரசு- ‘ஐ’ வந்து விடக் கூடாது!
1979ஆம் ஆண்டு இறுதிப் பகுதியாக இருக்க வேண்டும். கோவை மத்தியச் சிறையின் 10ஆம் தொகுதியில் வள்ளுவன், கோபால், குமார், தமிழரசன், கந்தசாமி, கிருட்டிணசாமி, பஞ்சலிங்கம் ஆகியோருடன் நானும் அடைக்கப்பட்டிருந்தேன். மொத்தம் 9 அல்லது 10 பேர்! ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக் கொட்டடி. முதல் மூன்று கொட்டடிகளில் வள்ளுவன், கோபால், நான்! மாலை அடைப்பு முடிந்த பின் அன்றைய செய்திகள் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம்! அவரவர் கொட்டடியில் இருந்த படி பேசுவதால் உரத்த குரலில் பேச வேண்டியிருக்கும்.
அப்போதெல்லாம் அண்ணா என்ற பெயரில் ஒரு நாளேடு வந்து கொண்டிருந்தது. அதிமுக ஆட்சிக் காலம் என்பதால் அரசு செலவில் சிறைக் கைதிகள் படிப்பதற்கு வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த நாளேட்டில் திரு காளிமுத்து “குன்றத்து விளக்கு” என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அவர் எழுதுவதை நாங்கள் நாள்தோறும் படித்துச் சுவைத்துப் பேசிக் கொண்டிருப்போம். குறிப்பாக இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசு-ஐ பற்றிய அவரது எள்ளல் சிறப்பாக இருக்கும்.
குறிப்பிட்ட நாளில் காளிமுத்து தன் கட்டுரைக்குத் தந்திருந்த தலைப்பு: மெட்ராசு-ஐ வந்தாலும் வரலாம், காங்கிரசு-ஐ வந்து விடக் கூடாது!
கட்டுரையை மூவரும் படித்து முடித்த பின் கோபால், “தோழர் தியாகு, எப்படி எழுதியிருக்கிறார் காளிமுத்து?” என்று கேட்டார்! நான்: “நன்றாகத்தான் எழுதியுள்ளார்! வள்ளுவன், நீங்கள் படிச்சுட்டீங்களா?”
வள்ளுவன் சொன்னார்: “நடையும் கூட நல்லாத்தான் இருக்கு!”
நாங்கள் உரக்கப் பேசிச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த போதே, சிறை அலுவலர் (செயிலர்), முதன்மைத் தலைமைக் காவலர் உள்ளிட்ட அதிகாரிகள் எங்கள் தொகுதியை ஒட்டியிருந்த சாலையில் அன்றைய கணக்கு முடித்து விட்டுச் சிறை வாயில் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். இது அன்றாடம் நடப்பதுதான்!
இரு நாள் கழித்து சிறைக் கண்காணிப்பாளர் பகவதி முருகனை அவரது அலுவலக அறையில் பார்த்துப் பத்தாம் தொகுதியில் அடைக்கப்பட்டிருந்த எங்கள் சில கோரிக்கைகள் பற்றிப் பேசப் போயிருந்தேன். சுமுகமாகப் பேசி முடித்த பின் கண்காணிப்பாளர், “உங்களிடம் வேறு ஒரு செய்தி பேச வேண்டும், காத்திருங்கள்(வெயிட் பண்ணுங்க)” என்றார். அடுத்த சில நிமிடத்தில் சிறை அலுவலர் அங்கு வந்து விட்டார்.
கண்காணிப்பாளர் சொன்னார்: “தியாகராசன், இதை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.” நீங்கள் சொல்வது புரியவில்லை, விளக்கமாகச் சொல்லுங்கள் என்றேன்.
சிறை அலுவலர் ஆழ்வார் நாகையா எங்கள் மீது முறைப்பாடு செய்திருந்தார்: நாங்கள் அவரைக் கேலி செய்தோம் என்று. நான் இல்லவே இல்லை என்றேன். உடனே சிறை அலுவலர் நேரில் அழைக்கப்பட்டார். இரண்டு நாள் முன்பு தானும் மற்ற அதிகாரிகளும் பத்தாம் தொகுதியை ஒட்டிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது நானும் வள்ளுவனும் அவரது நடையைக் கேலி செய்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம் என்பது குற்றச்சாட்டு.
நினைவைக் கொஞ்சம் குடைந்த போது விளங்கி விட்டது. குன்றத்து விளக்கில் காளிமுத்துவின் நடையை (மொழி நடையை) முன்வைத்து நாங்கள் பேசியதை ஆழ்வார் நாகையா தன் நடை (சாலையில் நடக்கும் விதத்தை) குறித்துப் பேசியதாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று புரிந்து விட்டது. அதற்கொரு காரணம் உண்மையிலேயே அவர் நடப்பது சற்றே மாறுபட்டதாக (கெந்திக் கெந்தி நடப்பது போல்) இருக்கும். உண்மையில் நடந்தது என்ன என்பதை விளங்கிக் கொண்ட பின் அனைவரும் சிரித்து விட்டனர். “வள்ளுவனோ தியாகுவோ மற்றத் தோழர்களோ அப்படிப் பேசக் கூடியவர்கள் அல்ல என்றுதான் நானும் நினைத்தேன்” என்று பகவதி முருகன் சொல்லி முடித்தார். “வேண்டுமானால் அவர்கள் நேருக்கு நேர் கடுமையாகப் பேசக் கூடியவர்களே தவிர எவர் ஒருவரையும் உருவத்துக்காகவோ நடை உடைக்காகவோ கேலி பேசக் கூடியவர்கள் அல்ல” என்றார்!
அதிகாரிகளை நாங்கள் எங்களுக்குள் கேலியாகப் பேசி மகிழ்வது உண்டுதான். ஆனால் எப்போதுமே ஆழ்வார் நாகையா மீது எனக்கொரு மதிப்பு இருந்தது. அவர் பகுத்தறிவாளர். சிறைக் கைதிகளைச் சோதனையிடும் போது பணம் பிடிபட்டால் விடுதலை, உண்மை போன்ற ஏடுகளுக்கு உறுப்புக் கட்டணம் (சந்தா) கட்டச் சொல்வார் என்று கேள்விப்பட்டிருந்தேன்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 367
Leave a Reply