(தோழர் தியாகு எழுதுகிறார் : வலியறிதல் – தொடர்ச்சி)

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்” என்ற தலைப்பில் செந்தழல் வலைப்பக்கத்தில் அன்பர் குமணன் எழுதியிருப்பதை தாழி மடல் 452இல் பகிர்ந்திருந்தேன். அதற்கான என் மறுமொழி:–
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

உருநிலைச் சிக்கல்களுக்கு உருநிலைத் தீர்வுகள் (concrete solutions for concrete issues) என்பதுதான் என் அணுகுமுறை. இங்கே சிக்கல்: 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாம் செய்ய வேண்டியது என்ன? இதற்கு நான் முன்வைக்கும் உரு நிலைத் தீர்வு: பாசக கூட்டணியைத் தோற்கடிக்க வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும். அதாவது பாசக கூட்டணியைத் தோற்கடிக்கும் வலிமையுள்ள கட்சி அல்லது அணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே.

அன்பர் குமணன் 2024 பொதுத் தேர்தல் என்ற உருநிலைச் சிக்கலை அவ்வாறு அணுகவே இல்லை. எனவே அதற்கொரு உருநிலைத் தீர்வை முன்வைக்கவே இல்லை. அவரது கட்டுரை முழுக்க அருநிலைக் கோட்பாடுகளே (abstract theories) நிறைந்துள்ளன. 2024 பொதுத் தேர்தல் குறித்து அவர் சொல்வது என்ன?

”இந்திய ஆளும் வருக்கத்தின் சார்பாளராக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல்” என்கிறார். குறிப்பான ஒரு தேர்தல் பற்றிய இந்தப் பொத்தம் பொதுவான கூற்று பாசக மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வர முயல்வதால் எழும் தனித் தன்மைகளைக் கண்டு கொள்ளவில்லை. இடதுசாரி இயக்கங்கள் இந்தத் தேர்தல் போராட்டத்தில் எங்கு நிற்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? மக்கள் தமது வாக்குரிமையை எவ்வாறு பயன்படுத்த வழிகாட்ட வேண்டும்? அல்லது இந்தத் தேர்தல் போராட்டத்தை அலட்சியம் செய்து விட வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு அன்பர் குமணனிடம் விடையே இல்லை. அருநிலைக் கோட்பாடுகளை அள்ளித் தெளிப்பதோடு அவர் நிறைவடைந்து கொள்கிறார்.

இந்திய முதலியத்தின் (முதலாளித்துவத்தின்) வளர்ச்சியில் காங்கிரசு ஆட்சியின் வகிபாகம் குறித்து அவர் சொல்வதை நான் மறுக்கவில்லை. மொத்தத்தில் அது சரியானதே. அதே போது இந்திய முதலியத்தின் வளர்ச்சிக் கட்டங்கள் – தொழில் முதல், நிதி முதல், புதுத் தாராளியம், ஒட்டுமுதல் (crony capital), வல்லரசியம் – என்பன குறித்தும் ஆளும் வகுப்பிலும் அரசிலும் இவற்றின் தாக்கம் குறித்தும் – எவ்விதமான உருநிலைப் பகுத்தாய்வும் இல்லாமல் பாசிசத்தின் வளர்ச்சியையும், பாசக ஆட்சியையும், அது தொடர்வதால் வரும் கேட்டையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியாது. முதலாளித்துவம் என்ற ஒரு சொல்லுக்குள் இவை அனைத்தையும் அடக்கி நிறைவு கொள்ள முடியாது.

பாசக எவ்வகையில் காங்கிரசு முதலான பிற ஆளும் வகுப்புக் கட்சிகளிடமிருந்து அடிப்படையில் வேறுபட்டு நிற்கிறது? என்ற முகன்மையான வினாவிற்கு விடை காணாமல், பாசக பாசிசக் கேட்டினை நம்மால் துல்லியமாக இனங்காண முடியாது. பாசக, காங்கிரசு இரண்டின் பொருளியல் கொள்கைகளும் ஒன்றுதான் என்பது இந்த வினாவிற்கு நேர் விடை ஆகாது.

குமணன் சொல்கிறார்:
ஆட்சியைக் கைப்பற்றிய பாசக கட்சி தொடர்ந்து ஆட்சிக் கட்டிலைத் தக்க வைத்துக் கொள்ள இந்து மதவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றது. இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை இந்து மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் வாக்கு வங்கிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.”

அவ்வளவுதான், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள இந்து மதவாதம் ஓர் ஆய்தம்! பெரும்பான்மை இந்து மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி வாக்கு வங்கிகளைத் தக்க வைத்துக் கொள்ள பாசக பாடுபடுகிறதாம். இஃது உண்மைதான், ஆனால் அரை உண்மை. ஒரு புலப்பாடு! முழு உண்மை என்ன? இந்தப் புலப்பாட்டின் சாறம் என்ன? ஆர்எசுஎசு, அதன் இந்துத்துவம், பார்ப்பனியம் எதுவுமே உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? எல்லாம் வெறும் தேர்தல் உத்திதான் என்று பார்ப்பது பாசிசத்தையும், அதன் இன்றைய இந்திய (ஓ, பாரத) அவதாரத்தையும் கண்டுகொள்ளாமல் விடுவதும், அவை குறித்து உழைக்கும் மக்களையும் குடியாட்சிய ஆற்றல்களையும் எச்சரிக்கத் தவறுவதும் ஆகும். பாசகவின் இந்து மதவாதம் வெறும் மதவாதமாக மட்டுமே உங்களுக்குத் தெரிகிறது.

இந்து-இந்தி-இந்தியா என்ற ஆர்எசுஎசு கொள்கைதான் இந்துத்துவம்! இதற்குச் செயல்வடிவம் தரும் அரசியல் கட்சியே பாசக! இந்த உண்மைகளின் அடிப்படையில்தான் பாசகவை ஆட்சியிலிருந்து விரட்டுவது உடனடித் தேவை ஆகிறது.

எல்லா மதவாதங்களும் பிற்போக்கானவைதாம். ஆனால் இந்தியச் சூழலில் இந்து மதவாதத்துக்கு மட்டுமே பாசிசமாக உருப்பெற வாய்ப்புண்டு. பாசிசம் அனைத்தும் பிற்போக்கே! ஆனால் பிற்போக்கு அனைத்தும் பாசிசமாகாது! என்ற தெளிவு வேண்டும்.

பெரும்பான்மை மத ஆதிக்கத்திலிருந்து சிறுபான்மை மதத்தினரைக் காப்பது என்றால், அவர்கள் தம்மைத் தாமே காத்துக் கொள்ள நாம் உதவுவதென்றால், உடனே நாம் செய்ய வேண்டியது என்ன? வரும் தேர்தலில் பாசகவுக்குப் பெருந்தோல்வியைப் பரிசளிப்பதுதான்! அது மட்டும் போதும் என்று சொல்லவில்லை. அஃது அவர்களின் போராட்டத்துக்குப் பேரூக்கமாக அமையும் என்பதே. “சோசலிசம் வரட்டும், அது உங்களைக் காக்கும்” என்று அவர்களைப் பார்த்துச் சொல்ல முடியுமா?

இடதுசாரி அமைப்புகள் வலு குன்றி உள்ளன என்று காரணங்காட்டி… பாசிச பாசகவுக்கும் குடியாட்சிய ஆற்றல்களுக்குமான இந்தத் தேர்தல் போராட்டத்திலிருந்து விலகி நின்று வேடிக்கை பார்ப்பதற்குச் சாக்குச் சொல்வதை ஏற்பதற்கில்லை. தமக்கிருக்கும் ஆற்றல் முழுவதையும் திரட்டி பாசகவுக்கு எதிராகக் குடியாட்சியத்தின் பக்கம் நிற்பதன் ஊடாகவே இடதுசாரி ஆற்றல்கள் அரசியலில் வலுப்பெறவும் வலுக்கூடவும் வாய்ப்புண்டு.

”சாகவின் பாசிசத் தன்மைக்குக் காரணமாக இருப்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் நெருக்கடிதான்” என்றும், மதவாதம் அதன் வெளிப்பாடுதான் என்றும் சொல்வது கொச்சைப் பொருண்மியம் (vulgar materialism) சார்ந்த வகுப்புக் குறுக்கியம் (class reductionism) ஆகும். யார் ஆட்சிக்கு வந்தாலும் பாசிசமாகத்தான் இருக்கும் என்பது பாசிசப் போக்குகளைத் தடுத்து நிறுத்தவும் எதிர்த்து முறியடிக்கவும் குடியாட்சிய ஆற்றல்களை எச்சரித்து விழிப்பூட்டும் கடமையைத் தட்டிக்கழித்து விட்டு ஊழ்வினைக் கொள்கையில் வீழ்வதாகும்.

1975-77 நெருக்கடி நிலைக் காலத்தில் என்ன நடந்தது என்பதையும், 1977 பொதுத் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்திராவின் பாசிசக் கொடுங்கோன்மைக்கு மக்கள் எப்படி முடிவு கட்டினார்கள் என்பதையும் பாடமாகக் கொள்ள வேண்டும். அப்போதும் எதிர்க்கட்சிகளில் சனசங்கம், பழைய காங்கிரசுமுதலான முதலியக் கட்சிகள் இணைந்து உருவாக்கிய சனதா தளமும், தேர்தல் அறிவிக்கப்படும் வரை இந்திரா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த செகசூவன் ராம் தலைமையிலான சனநாயகக் காங்கிரசும் (உ)லோக் நாயக் செயபிரகாசு நாராயணன் தலைமையில் ஒன்றுபட்டு நின்று இந்திராவை விரட்டியடித்தன. அப்போது அந்தத் தேர்தலில் இந்திராவை எதிர்த்து செயபிரகாசு நாராயணன் தலைமையிலான அணிக்கு ஆதரவளிப்பதுதான் குடியாட்சிய ஆற்றல்களின் கடமை ஆயிற்று.

இன்று ஒற்றுமை (ஐக்கிய) முன்னணியை முன்னின்று அமைக்கும் வலிமை இடதுசாரிகளிடம் இல்லை என்பதைக் குமணன் ஏற்றுக் கொள்கிறார். பாசிசத்துக்கு எதிராக ஒற்றுமை முன்னணி உத்தியைக் கடைப்பிடிப்பது என்றால் பாசிசத்தை எதிர்த்து அனைத்துச் சமூக ஆற்றல்களையும், அனைத்து அரசியல் ஆற்றல்களையும் ஒன்றுபடுத்திக் களம் காண்பதாகும். இந்த முன்னணியைக் கட்டுதல் ஓர் இயங்கியல் செயல்வழியே தவிர ஏற்கெனவே இருக்கிற ஆற்றல்களை எந்திரத்தனமாகக் கூட்டிச் சேர்ப்பதன்று. இங்கே அரசியல் ஆற்றல்களின் ஒற்றுமை என்பது வடிவம்தான், இந்த அரசியல் ஆற்றல்கள் குறித்திடும் பலவாறான மக்களின் ஒற்றுமை என்பதுதான் உள்ளடக்கம்.

உள்ளடக்கத்திலும் உருவத்திலும் ஒற்றுமை முன்னணி என்பது போராட்டத்தின் மூலவுத்திவகை, தந்திரவுத்திவகைக் கட்டங்களைப் பொறுத்தது. ஒற்றுமை முன்னணி என்றாலே குமுகிய (சோசலிச) ஒற்றுமை முன்னணி மட்டும்தான் என்று அன்பர் குமணனைப் போன்றவர்கள் கருதுவது போல் தெரிகிறது. குடியாட்சிய (சனநாயக) ஒற்றுமை முன்னணி என்ற பார்வையே அவர்களுக்கு உவப்பானதாகத் தெரியவில்லை என்னும் போது, பாசிச எதிர்ப்பு அனைத்தளாவிய ஒற்றுமை முன்னணி (All-in United Front Against Fascism) என்பதை அவர்களால் எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தத் தோழர்களுக்குக் குமுகியம் (சோசலிசம்) ஒரு பெருங்கனவாக இருக்கலாம். எனக்கும்தான்! ஆனால் அந்தக் கனவை நனவாக்கும் நீள்பெரும் பயணத்துக்கு அவர்கள் அணியமாய் இல்லை. ஒரே பாய்ச்சலில் எல்லாக் கட்டங்களையும் தாண்டிக் குதித்துக் குமுகியம் அடைவது என்ற கருத்தியத் திட்டம் மெய்ப்பட வாய்ப்பில்லை.

பாசகவுக்கு எதிரான கட்சிகளைக் குற்றாய்வு செய்யும் உரிமையை யாம் தூக்கியெறிந்து விடவும் இல்லை. அவர்களுக்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. பாசிச பாசகவை எதிர்த்து அணிவகுப்பது பாசிசத்துக்கு எதிரான போரட்டம் மட்டுமன்று, உண்மையாகவும் முரணற்ற வகையிலும் பாசிசத்தை எதிர்ப்பது யார் எனக் காட்டும் போராட்டமும் ஆகும். பாசக கூட்டணிக்கு எதிராக வெல்லத்தக்க கட்சி அல்லது கூட்டணியை ஆதரிப்பதற்கு நேரான கட்டுக்கூறு (நிபந்தனை) விதிப்பதும் ஆதரிக்க மறுப்பதும் ஒன்றுதான். அதே போது நம் ஆதரவு குற்றாய்வு இல்லாத ஒன்றன்று. மக்கள் நலன் காக்கும் கோரிக்கைகள் நாம் சுற்றடியாக முன்வைக்கும் கட்டுக்கூறுகளே ஆகும். புறஞ்சார் பொருளியல் விதிகள் அங்காடியில் இயங்குவது போல் நம் கட்டுக்கூறுகளும் வாக்குக் களத்தில் உணர்த்தப்படும்.

பாசிசத்தை வீழ்த்துவது என்பது ஒரு கட்சியை மட்டும் வீழ்த்துவதோடு தொடர்பு கொண்டதல்ல” என்பது சரிதான். எனவேதான் — இந்தத் தேர்தலில் பாசக தோற்பதோடு பாசிசம் ஒழிந்து விடும் என நாம் கருதவில்லை. ஆனால் பாசகவின் தோல்வி பாசிசத்தின் தோல்வியாக அமைந்து, பாசிச எதிர்ப்புப் போராட்டத்துப் பேரூக்கமாகப் பயன்படும்.
பொறுத்திருந்து பாருங்கள்.