தோழர் தியாகு எழுதுகிறார் 8: கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது!
(தோழர் தியாகு எழுதுகிறார் 7: முனைமுகத்தே துவாலு- இன் தொடர்ச்சி)
கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது!
ஒல்லாந்து (Holland) நாட்டின் வீரச் சிறுவன் பீட்டரின் கதை பள்ளிப் பருவத்தில் ஆங்கிலப் பாடத்தில் படித்த நினைவுள்ளது. நீங்களும் படித்திருக்கலாம்.
அந்தச் சிறுவன் ஒரு நாள் அந்தி சாயும் நேரம் தனியாக நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அந்தக் காட்சியைப் பார்த்தான்: கடல்நீர் ஊருக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காகக் கட்டப்பட்டிருந்த அணையில் சிறிய ஓட்டை வழியாகத் தண்ணீர் பீய்ச்சிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரின் அளவும் வேகமும் கூடிக் கொண்டிருந்தன. இப்படியே போனால் அணை உடைந்து கடல்நீர் ஊரையே (அல்லது நாட்டையே) மூழ்கடித்து விடும். பீட்டர் சுற்றுமுற்றும் பார்த்தான், யாருமில்லை. கத்தினாலும் கேட்காது.
உடனே அவன் ஒன்று செய்தான்: அணையோரத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து அந்த ஓட்டைக்குள் விரலை நுழைத்தான். தண்ணீர் வரத்து நின்று விட்டது. விரலை எடுத்தால்… மீண்டும் வைக்க முடியாது. அதற்குள் வெள்ளம் புகுந்து விடும், அணை உடைந்து விடும். எனவே வலியையும் கொடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அப்படியே இருந்து விட்டான். விடியும் வரை யாரும் அந்தப் பக்கம் வரவில்லை. இரவெல்லாம் நடுக்கும் குளிரில் ஒற்றை விரலால் ஊர் காத்தான் பீட்டர்.
பீட்டரின் கதை மெய்யோ புனைவோ (இ)டச்சு மக்களின் தொன்மங்களில் ஒன்று. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கூட வீரச் சிறுவனுக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படும் கதை. கடல்நீரோ ஆற்று நீரோ ஊருக்குள் நுழைந்து விடாமல் அணைகட்டிக் காக்கும் நாடுகளிலும் ஊர்களிலும் பீட்டரின் கதை தெரிந்திருக்க வேண்டும். துவாலு நாட்டு மக்களுக்குத் தெரியுமா?
துவாலுவைக் கடல் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க பீட்டர்கள் இருந்தாலும் முடியாது. அணை இருந்து அதில் ஒரு துளை இருந்தால்தானே பீட்டர் விரல் நுழைத்து நீர் தடுத்து ஊர் காக்க முடியும்?
துவாலு நாட்டின் தீவுகளில் கடல்நீர் கரையேற விடாமல் அணை கட்டலாம் அல்லவா? தலைநகரின் ஆட்சி மையத்தைக் காக்கக் கடல் சுவர் கட்டும் பணி ஐநா வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) நிதியுதவி கொண்டு தொடங்கப்பெற்று நிறைவடையாமல் இருக்கிறது.
ஆசுதிரேலியச் சுரங்கங்கள் வெளியேற்றும் கழிவை இறக்குமதி செய்து தீவுகளை வளைத்து ஆற்றல்-மதில் (energy wall) கட்டி கடலின் தாக்குவலியைக் கட்டுப்படுத்தலாம் என்பதோர் ஆசைத் திட்டம். இது நிறைவேறுவதாகவே கொண்டாலும் பவழப் பாறைசார் சுற்றுச் சூழலை அடியோடு சிதைத்து விடும்.
தலைநகரம் ஃபாங்கஃபேலுக்குத் தெற்கே கடல் விழுங்கிய நிலத்தை மீட்டு நிலமட்டத்தை 10 பேரடி உயர்த்தி வலுவான வீடுகள் கட்டவும் நகர மன்றம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்காகும் செலவு 300 பேராயிரம்(மிலியன்) அமெரிக்க தாலருக்கு எங்கே போவது? யாராவது நிதியளித்தால்தான் உண்டு. அளிக்க யாரும் முன்வரவில்லை.
மற்றுமொரு கனவுத் திட்டம் மிதக்கும் தீவு கட்டி நாட்டையே தெப்பம் போல் கடலில் மிதக்க விடுவது! இதெல்லாம் கவைக்குதவாது என்பதால், துவாலு கடலின் வயிற்றுக்குள் போவதற்குள் தீவுகளை விட்டு மக்களை வெளியேற்றி விடலாம்! துவாலுவர்கள் பசிபிக்கு அண்டை நாடுகளில் ஏதிலியராகத் தஞ்சம் புகுவார்கள்! போர் ஏதிலியர் போல் காலநிலை மாற்ற ஏதிலியர்!
வேறு வழியே இல்லை என்றால்தான் வெளியேறுவோம் என்கிறார்கள் அம்மக்களும் ஆட்சியாளர்களும்.
மக்கள் அனவரையும் 1,200 அயிரைப் பேரடிதெற்கே கொண்டுவந்து குடியமர்த்த நிலம் தருகிறோம் என்று பிசி நாடு திரும்பத் திரும்ப அழைக்கிறது, துவாலு அரசு இதை ஏற்கவில்லை. அரசே ஏற்றுக் கொண்டாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமே! எந்த ஊர் ஆனாலும் சொந்த ஊரைப் போலாகுமா?
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே” (பாரதியார்)
சொந்த நாட்டைக் கடலுக்கு இரையாக்கி விட்டு ஏதிலிகளாகப் புலம்பெயர்ந்து புலம்பித் திரிய துவாலுவர்கள்தாம் கிடைத்தார்களா? அட, போங்கையா!
ஆசுதிரேலியாவின் முன்னாள் தலைமையமைச்சர் கெவின் உருத்து முன்மொழிந்தார்: துவாலு நாட்டின் கடல்சார் வளங்கள், மீன் வளங்கள் மீதான உரிமைகளுக்கு மாற்றாக அந்நாட்டின் குடிமக்களுக்கு ஆசுதிரேலியா முழுக் குடியுரிமை வழங்கலாம். எப்படி இந்தப் பண்டமாற்று!
துவாலுவின் அப்போதைய தலைமையமைச்சர் சொபோகா “இது பேரரசுச் சிந்தனை” என்று சொல்லிப் புறந்தள்ளி விட்டார்:
“துவாலு மக்களை வெளியே அழைத்துப் போய் விட்டால் காலநிலை மாற்றச் சிக்கல்கள் தீர்ந்து விடுமா? இந்த மக்களைத் தொழில்வளர்ச்சி பெற்ற நாடுகளில் கொண்டுபோய் இருக்கச் செய்தால், அந்த நாடுகளிலும் நுகர்வு பெருகிப் பசுங்குடில் வாயு உமிழ்வுகள் கூடுதலாகும்.”
தாழ்நில நாடுகளில் இவ்வாறு இடர்ப்பட்டிருக்கும் மக்களையெல்லாம் பெயர்த்து வெளியே அனுப்புவது தோல்வி மனப்பான்மை என்கிறார் சொபோகா. இந்தச் சிக்கல் அந்த நாடுகளின் சிக்கல் மட்டுமன்று. இது உலக முழுமைக்குமான சிக்கல். அதன் விளைவுகளைப் புரிந்து கொண்டால் இப்படிக் குறுக்கு வழித் தீர்வுகள் தேட மாட்டோம்.
துவாலு மட்டுமல்ல, பசிபிக்கு தீவுகள் பலவும் இன்று நாளை என்று மூழ்கிப் போகும் இடர்நிலையில்தான் உள்ளன. அதே பசிபிக்கின் கரைகளில் அமெரிக்கா, ஆசுதிரேலியா போன்ற நாடுகள் வளர்ச்சியின் பெயரால் களிபேருவகையுடன் நிலக்கரியை எரித்துப் புவியைச் சூடாக்கிக் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றன. ஈட்டமே பெரிதென்று கொட்டமடிக்கும் இந்த நாடுகளின் குரலாகத்தான் அமெரிக்கக் குடியரசுத் தலைவரான போது தொனால்டு துரும்பு ஒலித்தார்:
“காலநிலை மாற்றமா? அப்படி ஒன்று இருப்பதாக நம்ப மாட்டேன்.”
துரும்பு மட்டும்தானா? மற்றத் தலைவர்கள் நம்புகிறார்களா? பிடன் நம்புவதாகச் சொல்கிறார். சொன்னால் மட்டும் போதுமா?
என்ன செய்தால் துவாலுவைக் காக்கலாம்? தவறு, உலகைக் காக்கலாம்? பார்ப்போம்.
தரவு: தியாகுவின் தாழி மடல் 8
Leave a Reply