(தோழர் தியாகு எழுதுகிறார் 44 தொடர்ச்சி)

பெரியாரா? பிரபாகரனா?

தாழி 20, 21 மடல்கள் குறித்து அன்பர் மா. சத்தியசீலன் எழுப்பியுள்ள வினாக்களை இம்மடலில் எடுத்துக் கொள்கிறேன்.

தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களைப் பற்றிய ‘தீரன் திண்ணியன் தேசத் தலைவன்’, தமிழீழ மாவீரர் நாள் பற்றிய ‘மாவீரர்களின் பெயரால்’ ஆகிய கட்டுரைகளையே சத்தியசீலன் குறிப்பிடுகின்றார்.

முதலாவது கட்டுரையை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து படிக்க வேண்டுகிறேன். பிராபகரனை நான் எப்படிப் பார்க்கிறேன்? அவரது வரலாற்று வகிபாகம் பற்றிய என் புரிதல் என்ன? என்பதை அவ்வுரையில் தெளிவாக்கியுள்ளேன். உங்கள் வினாக்களுக்கான விடைகள் பெரும்பாலும் அங்கேயே கிடைத்து விடும். 

புலிகள் மீதும் தலைவர் பிராபகரன் மீதும் மாபெரும் நன்மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த அன்பர் சத்தியசீலனின் பார்வையில் மாற்றம் வருமானால் வரட்டும். ஆனால் அந்த மாற்றம் என்ன அடிப்படையில் வர வேண்டும்? பிரபாகரனும் புலிகளும் தங்கள் மீதான நன்மதிப்பையும் மரியாதையையும் கெடுத்துக் கொள்ளும் வகையில் ஏதேனும் செய்திருந்தால், அந்த அடிப்படையில் மாற்றம் வந்திருந்தால் சொல்ல வேண்டும். அது பற்றி வாதுரைக்கத் தடையில்லை.

ஆனால் சத்தியசீலன் சொல்லும் காரணம் என்ன? தமிழ்நாட்டில் அண்மைக் காலமாகத் தமிழ்த் தேசியம் எனும் பெயரால் திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியாரையும் இழிவுபடுத்தி விட்டனர் என்றும், திராவிட இயக்கங்கள்-கட்சிகளின் தலைவர்களை சாதி அடிப்படையில் ‘தமிழர் அல்லாதோர்’ என்றும் திராவிடர்களை இனப்பகைவர் என்றும் சாதிய அடிப்படையில் இனவாத அரசியலைக் கட்டமைக்கின்றனர் என்றும் சத்தியசீலன் காரணமுரைக்கின்றார்.

சத்தியசீலன் சொல்வதனைத்தும் உண்மையென்றே கொண்டாலும் இதற்குப் பிரபாகரனும் புலிகளும் எப்படிப் பொறுப்பாவார்கள்? அவர்கள் திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியாரையும் எப்போதாவது இழிவுபடுத்தியதுண்டா? திராவிட இயக்கத் தலைவர்களைச் சாதி அடிப்படையில் ‘தமிழரல்லாதோர்’ என்று கூறியதுண்டா? திராவிடர்களை இனப் பகைவர் என்று தூற்றியதுண்டா? புலிகள் சாதிய அடிப்படையில் இனவாத அரசியலைக் கட்டமைத்ததுண்டா?

புலிகள் செய்யாதவற்றுக்கெல்லாம் அவர்களைப் பொறுப்பாக்கி அந்த அடிப்படையில் அவர்கள் மீதான நன்மதிப்பையும் மரியாதையையும் மாற்றிக் கொள்வது நியாயம்தானா? அண்மைக் காலமாகத் தமிழ்த் தேசியத்தின் பெயரால் பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்துகிறவர்கள் என்றால்? தொன்மைக் காலமாக அல்ல! அண்மைக் காலமாக! அதாவது முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்குப் பின்! சரிதானே? இந்த அண்மைக் காலத்தில் புலிகளும் பிரபாகரனும் இருந்தார்களா? நந்திக் கடலுக்குப்பின் பிரபாகரன் உயிர்த்தெழுந்து வந்து பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்தினாரா? சிங்கள இன வெறியர்களால் வதைத்துக் கொல்லப்பட்ட புலிப்படைத் தளபதிகள் மேலுலகிலிருந்து பெரியாரை இழிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டார்களா?

“பெரியாரின் பகுத்தறிவு – பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகள் மீதும் திமுகவின் இந்தி எதிர்ப்பு – தமிழின அரசியல் மீதும் எனக்கு மிகுந்த பேரார்வம் உண்டு” என்கிறார்  அன்பர் சத்தியசீலன். எனக்கும் அப்படித்தான்! பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளையும்  பார்ப்பன எதிர்ப்புக் கருத்துகளையும் நானும் மதித்துப் போற்றுகிறேன். இதை வெளிப்படையாகவே சொல்கிறேன்.   

“இந்தத் தமிழினவாத அரசியல்வாதிகள் திமுக – திராவிட இயக்கங்களின் மீது அவதூறுகள் பரப்பிக் கொண்டுள்ளனர்” என்கிறார் சத்தியசீலன். அவர் இப்படி நம்புவாரானால் தமிழினவாதிகள் யார்? அவர்கள் எப்படி அவதூறு பரப்புகிறார்கள்? என்பதை வெளிப்படையாகச் சொல்லி “இந்தத் தமிழினவாத அரசியல்வாதிகளின்” முகத்திரையைக் கிழித்தெறியுங்கள்! விடுதலைப் புலிகளும் இவ்வாறு அவதூறு பரப்புகின்றனர் என்றால் அவர்களையும் விட்டு வைக்காதீர்கள். திமுக – திராவிட இயக்கங்களின் மீதான அவதூறுகளை மறுத்து வாதிடுவதற்கு மாறாக, இவர்கள் பரப்பும் அவதூறுகளுக்குப் புலிகள் மீது பழிபோடுவதில் பகுத்தறிவு வழிப்பட்ட ஏரணம் இல்லையே!  

“இவர்களுக்குத் திராவிட இயக்கத்தின் மீது வன்மம்” என்கிறார் சத்தியசீலன். எவர்களுக்கு? புலிகளுக்கா? பிரபாகரனுக்கா? புலிகளுக்குத் திராவிட இயக்கத்தின் மீது வன்மம் இருக்குமானால் திராவிட இயக்கத் தலைவர்களான கி. வீரமணி, கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், வைகோ போன்ற தலைவர்கள் இன்றளவும் பிரபாகரனையும் புலிகளையும் போற்றிக் கொண்டிருப்பார்களா?

 “பெரியாருக்கு எதிராகப் பிரபாகரனை நிறுத்துகின்றனர்” என்று சத்தியசீலன் சொல்வது யாரை? பிரபாகரன் என்றைக்காவது பெரியாருக்கு எதிராகத் தன்னை நிறுத்திக் கொண்டாரா? வீரமணி, கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், வைகோ இவர்களில் யாராவது பெரியாருக்கு எதிராகப் பிராபகரனை நிறுத்தியதாகக் காட்ட முடியுமா? தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புலிகளின் வரலாற்று வகிபாகத்தை அறிந்தேற்றுப் போற்றும் என்னைப் போன்ற யாராவது பெரியாருக்கு எதிராக பிரபாகரனை நிறுத்தியதுண்டா?

அப்படி யாராவது பெரியாருக்கு எதிராகப் பிரபாகரனை நிறுத்தினால் என்ன செய்ய வேண்டும்? இது ஒரு கால வழு! கள வழு! என்பதை எடுத்துரைக்க வேண்டும். இருவரின் காலத்திலும் களத்திலுமான வேறுபாட்டை மறந்து இருவரையும் ஒப்பிட்டு மோத விட்டு வேடிக்கை பார்க்கும் அறிவிலிகளின் மனம்பிறழ்ந்த  விளையாட்டைக் காரண காரியத்தோடு புறந்தள்ள வேண்டும். இப்படிச் செய்யாமல், “நீ பெரியாரை அவதூறு செய்தால் நான் பிராபகரனைப் பழிப்பேன்” என்று வரிந்து கட்டுவது சரிதானா?

நமக்கு – தமிழ்த் தேசிய இன மக்களாகிய நமக்குப் பெரியாரும் வேண்டும், பிரபாகரனும் வேண்டும். இருவரின் வரலாற்றுப் பங்களிப்பையும் அறிந்தேற்று, கொள்வன கொண்டு அல்லன தள்ளி முன்னேறிச் செல்லும் முதிர்ச்சி வேண்டும்.

“தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதிகம் நன்மையடைந்தது பெரியாராலா பிரபாகரனாலா? பிரபாகரனா தமிழ்நாட்டில் தில்லிக்கு எதிராகவும் பார்ப்பனர்க்கு எதிராகவும் போராடினார்?” என்ற கேள்வி அவதூற்று ஆசான்கள் விரித்த வலையில் அன்பர் சத்தியசீலன் தானாகப் போய் விழுவதைத்தான் காட்டுகிறது. “தெரியாமல்தான் கேட்கிறேன்” என்று அவரே சொல்கிறார். தெரிந்தால் கேட்க மாட்டார். தமிழ்நாட்டில் தில்லிக்கு எதிராகவும் பார்ப்பனர்க்கு எதிராகவும் போராடியவன் நானே என்று பிராபாகரன் எப்போதாவது சொல்லிக் கொண்டாரா? அல்லது புலிகளை ஆதரிக்கும் தலைவர்கள் யாராவது அப்படி வாதிட்டதுண்டா?

இதற்குப் பதிலாக “தமிழீழத் தமிழர்கள் அதிகம் நன்மையடைந்தது பிரபாகரனாலா? பெரியாராலா? பெரியாரா தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகப் போராடினார்?” என்று கேட்டால் எப்படியிருக்கும்? இரண்டு கேள்விகளுமே பிழையானவை! வரலாற்றுப் பார்வையற்றவை! இப்படிக் கேட்பதே குற்றம்!

தந்தை பெரியார் குறித்து நான் இப்படி எழுதினேன்:

______தமிழினத்தின் தன்மான அடித்தளம்

சமூகநீதிப் புத்தமைப்பின் உலைக்களம்

தந்தை பெரியார்

விடுதலைச் சிந்தையின் விளைநிலம்_____

இன்றளவும் இதில் எந்த மாற்றமும் இல்லை. என்னுடைய “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” படித்துள்ளீர்களா?

பிரபாகரன் தமிழீழத் தேசியத் தலைவரே தவிர தமிழ்நாட்டின் தேசியத் தலைவர் அல்லர். ஒவ்வொரு தேசமும் தனக்கான தலைமையைப் போராட்ட வழியில் வார்த்தெடுக்கும், விடுதலைப் போராட்டம் என்பது ஏற்றுமதிச் சரக்கோ இறக்குமதிச் சரக்கோ அன்று. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனைப் போற்றுவது ஈழப் போராட்டத்தின் தலைவராகத்தானே தவிர எமதியக்கத்தின் தலைவராக அல்ல. அந்த இடம் வெற்றிடம் இல்லை. எங்களுக்கென்று கொள்கையும் குறிக்கோளும் வழிமுறையும் உண்டு. அந்த அடிப்படையில் எமது தலைமையை யாமே வளர்த்தெடுப்போம்.

பிராபகரனை இயேசு கிறித்து என்றோ திருமுருகன் என்றோ யாம் நம்பவில்லை. அவரது போராட்ட வரலாற்றில் வெற்றிகளும் உண்டு, தோல்விகளும் உண்டு என்பதை அறிவோம். வெற்றிகளிலிருந்து வீரம் பெறுவோம்! தோல்விகளிலிருந்து பாடம் பெறுவோம்!

நானெல்லாம் 1960களின் இறுதியில் புரட்சிக்கு வந்த புதிதில் “சீனத்தின் தலைவர் எமது தலைவர்! சீனத்தின் பாதை எமது பாதை!” என்று முழங்கியதுண்டு. அது பெரும்பிழை என்பதைப் பட்டுணர்ந்து விட்டோம். இப்போது “ஈழத்தின் தலைவர் எமது தலைவர்” என்று சிந்திக்கவோ சொல்லவோ செயல்படவோ எப்படி ஒப்புவோம்?

“பிரபாகரன் வழியே எங்கள் வழி” என்று சொல்லிக் கொண்டு நானே முதலமைச்சர் என்று பிதற்றிக் கொண்டிருப்பவர்கள் மீதான சீற்றத்தைப் பிரபாகரனுக்கு எதிராகத் திருப்புவது நியாயமில்லை, தோழர்மாரே!

பெரியார் ஆனாலும், பிரபாகரன் ஆனாலும், வேறு எவர் ஆனாலும் வரலாற்றின் திறனாய்வுக்கு உட்பட்டவர்களே! “விமர்சனம்” என்ற ஒன்றுக்கு அப்பாற்பட்டவர்கள் எவருமில்லை. ஆனால் பெரியாரையும் பிரபாகரனையும் மோத விட்டு “சேவல் சண்டை” விளையாட்டு நடத்தும் சூதர்களின் கெடுமுயற்சியைப் புறந்தள்ளத் தயங்காதீர்கள்!

ஈழப் போராட்டத்தில் திமுக அதிமுக நிலைப்பாடு, இனவாதிகளின் கருத்துகளில் புலம்பெயர் ஈழத் தமிழர் பங்கு, விடுதலைப் புலிகளின் அரசியல் அறிவு, புலிகள் மீது இடதுசாரிகளின் குற்றாய்வு … என்று அன்பர் சத்தியசீலன் எழுப்பியுள்ள மற்ற மற்ற வினாக்களை அடுத்தடுத்துப் பார்ப்போம்!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல்  30