(தோழர் தியாகு எழுதுகிறார் 47 தொடர்ச்சி

சொல்லடிப்போம், வாங்க! (6)

பேராசிரியர் சிவகுமார் எழுதுகிறார்:

தோழர்

வணக்கம்.

என்னுடைய மின்னஞ்சல் செய்திக் குவியலால் இயங்கவில்லை.

சிலவற்றை நீக்கியபின் உங்கள் தாழி மடல்கள் பெற முடிந்தன.

‘சொல்லடிப்போம்’ வாங்க ரசித்துப் படிக்கிறேன். தாராளியம்

சிறப்பான விளக்கம்.

நீண்ட கட்டுரைகளைத் தவிருங்கள்.

நல்லது. சுருக்கமாகவே எழுத முயல்கிறேன்.

பேராசிரியர் சிவக்குமார் கலைச் சொல்லாக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சொல்லடிக்கும் பணியில் அவரும் தொடர்ந்து பங்கேற்க வேண்டுகிறேன். தாழி மடல் எடுத்துள்ள பணிகளில் சொல்லாக்கமும் ஒன்று. எனக்கு விருப்பமானது என்பதால் மட்டுமல்ல, சரியான அரசறிவியல் புரிதலுக்கும் சொல்லாக்கம் இன்றியமையாதது என்பதாலும்தான் இந்தப் பணியை முகன்மையாக நினைக்கிறேன். இது எதற்கு என்று கருதக் கூடியவர்கள் இருப்பின், விட்டு விட்டு மற்றவற்றைப் படியுங்கள், அவை குறித்து உரையாடுங்கள்!

தாழி அன்பர் சத்தியசீலன் மா. எழுதுகிறார்: 

முதற்கண் நன்றியுடன் என் வணக்கத்தைச் சொல்லிக்கொள்கிறேன். என் மடலைக் கண்டு உடனே அலைபேசியில் உரையாடியதற்கும், விரைந்து மறுமடல் வரைந்து எதிர்வினை ஆற்றியதற்கும் மிக்க மகிழ்ச்சி!

என் உளக்கருத்தை- வெளிப்படுத்திய ஐயத்தைத் தாங்கள் தவறாகப் புரிந்துகொண்டதற்கு மிகவும் வருந்துகிறேன்; என் கருத்தோட்டத்தைச் சரியாக வெளிப்படுத்தவில்லையோ என ஐயுறுகிறேன்; பரவாயில்லை.

நான் மீண்டும் எனது ஐயப்பாட்டை விளக்குகிறேன்!

எனது நோக்கம் விடுதலைப் புலிகளை – பிரபாகரனை இழிவுபடுத்துவது அல்ல!

அவர்கள் மீதான மதிப்பை நான் மாற்றிக் கொண்டதாகவும் நான் எங்கும் குறிப்பிடவில்லை; அவர்களின் அரசியல் மீதான எனது ஐயப்பாட்டையே நான் தங்களிடம் கேள்விகளாக முன்வைத்தேன்- தாங்கள் களப்போராளி என்பதால் உலகின் விடுதலைப் போராளிகளைப்பற்றி – சிறப்பாக விடுதலைப் புலிகளைப் பற்றி –  மேலும் கூடுதலான செய்திகளைத் தங்களிடமிருந்து பெறவேண்டியே அக்கடிதம்!

நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இடதுசாரிகள்- அறிஞர்கள் (அ.மார்க்குசு, எசு.வி.ஆர்., மருதையன் போன்றோர்) ஏன் புலிகளின் அரசியலைக் குற்றாய்வு செய்கிறார்கள்!

மாறாகப் பெரியாரியலாளர்கள் பிரபாகரன்- புலிகளைப் போற்றுகிறார்கள்; மறுபுறம் இனவாதிகள் (தங்களைப் போன்ற மெய்யான தமிழ்த் தேசியவாதிகளை ஈண்டு நான் குறிப்பிடவில்லை) பிரபாகரன் பதாகையைத் தாங்கிக் கொண்டு பெரியாரை – திராவிட இயக்கத்தைக் கடுமையாகச் சாடுகின்றனர்.

அவர்கள் யாவர் என்பதை அனைவரும் அறிவோம் – இருப்பினும் வெளிப்படையாகவே கூறுகின்றேன்: நாம் தமிழர் கட்சியினரும் பெ.மணியரசன் போன்றோரும்தாம்!

புலிகள் எவ்விடத்திலும் திராவிட இயக்கத்தைச் சாடியதாக நான் குறிப்பிடவில்லை – மாறாக அவர்களின் புகழ்பாடிக் கொண்டே அவர்கள் செய்யாத செயலை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்!

அவ்வாறு புலிகளுக்கு மாறுபாடான ஒரு நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடும் சூழலில் இவர்களின் பொருளாதாரப் பின்புலமாகத் திகழும் ‘ஈழத்துச் சொந்தங்கள்’ அதைக் கண்டிக்க- மறுக்க- தடுக்க எத்தனிக்க வேண்டாவா!

அவ்வாறெனில் நாம் எவ்வாறு அவர்களைப் புரிந்து கொள்வது!

சீமான் செய்வது சரி; திராவிட இயக்கம் – பெரியார் துரோகிகள்!

அவர்களை வீழ்த்தி சீமானை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்து, (முன்பு கூவினார்களே – இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அதுபோல்) ஈழத்தைப் பெற்றுவிடலாம் என்று குறுக்கு வழியில் யோசிக்கிறார்களோ என்றுதானே கருதவேண்டியிருக்கிறது!

“மக்கள் எவ்வழி மகேசன் அவ்வழி” என்பதுபோல் இத்தகைய சிந்தனை  உடைய மக்களின் தலைவரான பிரபாகரன் அவர்களையும் நாம் ஐயுறவேண்டியிருக்கிறது – அவர் மக்கள் தலைவராக விளங்கியிருக்கும் பட்சத்தில்!

ஒருவேளை அவரும் அவர் தம் இயக்கமும் அரசியல் இயக்கமாக அல்லாமல் வெறும் இராணுவவாதப் பார்வையுடையோராய் இருந்திருந்தால் இக்கேள்வி எனக்கு எழப்போவதில்லை.

எப்படியோ, நீங்கள் குறிப்பிட்டபடி எனது வினாக்களுக்கு – தெளிவான விளக்கங்கள் அளிப்பீர்கள் அடுத்த மடலில் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன், மீண்டும் ஒருமுறை என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 32