(தோழர் தியாகு எழுதுகிறார் 48 தொடர்ச்சி)

அன்பர் சத்தியசீலனுக்கு என் மறுமொழி:

சீமான் அரசியலுக்குப் பிராபகரன் பொறுப்பா?

“எனது நோக்கம் விடுதலைப் புலிகளை- பிரபாகரனை இழிவுபடுத்துவது அல்ல!” என்று நீங்கள் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.  “அவர்கள் மீதான மதிப்பை நான் மாற்றிக் கொண்டதாகவும் நான் எங்கும் குறிப்பிடவில்லை” என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால், சரி. ஆனால் உங்கள் முதல் மடல் எனக்கு மட்டுமல்ல, தாழி அன்பர்கள் சிலருக்கும் கூட அந்த எண்ணத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்தது. உங்கள் இப்போதைய விளக்கத்தை அவர்கள் பார்வைக்கும் முன்வைக்கிறேன்.

இடதுசாரி அறிஞர்கள் புலிகளைக் குற்றாய்வு செய்கிறார்கள் என்றால், செய்யட்டும். சரியான குற்றாய்வு என்றால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்! தவறானது என்றால் மறுக்க வேண்டியதுதான்! இதை நான் கடந்த காலத்தில் செய்துள்ளேன். பிழையாப் பெருமை (infallibility) எவர்க்கும் இல்லை. தவறு செய்யாமலிருக்க ஒரே வழி எதுவும் செய்யாமலிருப்பதுதான்!

இனவாதிகள் பிரபாகரனைப் போற்றிக் கொண்டே பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் கடுமையாகச் சாடுகின்றனர் என்று வருத்தப்பட்டுள்ளீர்கள். மணியரசனும் சீமானும் ஒரு காலத்தில் பெரியாரைப் போற்றிக் கொண்டிருந்தவர்கள்தாம்! இப்போது மாற்றிப் பேசுகின்றார்கள் என்றால் அதை அம்பலமாக்குவோம். ஆனால் “நீ பெரியாரை ஏசினால் நாங்கள் பிரபாகரனை ஏசுவோம்” என்று சிலர் கிளம்பியிருப்பதும், அவர்களது முயற்சியை “தடுத்தாடுதல்” “அடித்தாடுதல்” என்றெல்லாம் சிலர் மெருகிட்டுப் பேசுவதையும் எப்படி ஏற்க முடியும்?

சீமானை முதலமைச்சர் ஆக்கினால் ஈழம் பெற்று விடலாம் என்று சிலர் மயங்கிக் கிடந்தால் அவர்களைச் சாடுங்கள். ஆனால் இந்த மயக்கத்துக்குப் புலிகளோ ஈழத் தமிழர்களோ எப்படிப் பொறுப்பாவார்கள்? “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்ற சீமான் வசனத்தைப் புலிகளா எழுதிக் கொடுத்தார்கள்? தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவி பற்றி பிரபாகரன் என்ன கருதினார் என்று தெரிந்து கொண்டால், சீமான் பேச்சு எவ்வளவு அபத்தம் என்று விளங்கும். கலைஞர், எம்ஞ்சிஆர் யாராயினும் தமிழக அரசு இறைமையற்றதே என்பதால், அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் அறப் பொறுப்பு (தார்மிகக் கடமை) கொண்டவர்களாக இருந்தால் போதும் என்று பிராபகரன் ஒரு செவ்வியில் தெளிவாக்கினார். அப்படியானல் சீமான் முதலமைச்சராகி ஈழம் பெற்றுக் கொடுப்பார் என்று புலிகளோ அவர்களின் தலைமையை ஏற்ற ஈழத் தமிழர்களோ எப்படி நினைப்பார்கள்?

புலிகளின் அரசியல் மீது உங்களுக்கு ஐயப்பாடு வருவதில் தவறில்லை. ஆனால் அந்த ஐயப்பாட்டுக்கு சரியான அடிப்படைகள் இருக்க வேண்டுமே!

இனவாதிகளின் நடவடிக்கைகளுக்குப் பொருளாதாரப் பின்புலமாக “ஈழத்துச் சொந்தங்கள்” இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்பினால் யார் அந்த ஈழத்துச் சொந்தங்கள் என்று தெளிவுபடுத்துங்கள். ஈழத் தமிழர்களில் சீமானை ஆதரிப்பவர்களும் இருக்கலாம். அது அவர்களின் குடியாட்சிய உரிமை! ஆதரிப்பது தவறு என்று சுட்டிக்காட்டுவது உங்கள் உரிமை! என் உரிமை! ஒருசிலரின் சொல்லையும் செயலையும் வைத்து எல்லா ஈழத்தமிழர்கள் மீதும் பழி போடுவதும், அந்த அடிப்படையில் புலிகளின் அரசியல் கொள்கைகளை ஐயுறுவதும் நியாயம் இல்லைங்க!

நீங்கள் என்ன எழுதியிருக்கின்றீர்கள்? என்பதை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்:

“அவர்களை வீழ்த்தி சீமானை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து, (முன்பு கூவினார்களே- இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அதுபோல்) ஈழத்தைப் பெற்றுவிடலாம் என்று குறுக்கு வழியில் யோசிக்கிறார்களோ என்றுதானே கருதவேண்டியிருக்கிறது!

“மக்கள் எவ்வழி மகேசன் அவ்வழி” என்பதுபோல் இத்தகைய சிந்தனை உடைய மக்களின் தலைவரான பிரபாகரன் அவர்களையும் நாம் ஐயுறவேண்டியிருக்கிறது – அவர் மக்கள் தலைவராக விளங்கியிருக்கும் பட்சத்தில்!”

இது நீங்கள் எழுதியிருப்பதன் நேர்க் கூற்று! நான் எதையும் மாற்றவில்லை.

சீமான் நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு முன்பே தலைவர் பிரபாகரன் இறுதிப் போர்க் களத்தில் வீரச் சாவடைந்து விட்டார், தெரியும்தானே? சீமானின் “நானே முதலமைச்சர்” அரசியலுக்கோ, அதன் மீது சிலருக்குள்ள பாமர மயக்கத்துக்கோ பிரபாகரனைக் குறை சொல்வது உங்கள் வாதுரையின் சா முரண்பாடு! புரிகிறதா?

[சா முரண்பாடு = fatal contradiction]

சீமானைக் கடுமையாகக் குற்றாய்வு செய்யும் ஈழத் தமிழர்கள் பலர் உண்டு. அவர்கள் யாரும் உங்கள் கவனத்துக்கு வரவில்லை எனத் தோன்றுகிறது. சீமானுக்குப் பொருளாதாரப் பின்புலமாகப் புலம்பெயர் தமிழர்கள் இருப்பதாக நம்பச் சொல்வது பெரும்பாலும் ஒரு மாயத்திரை! உண்மையான பொருளாதாரப் பின்புலத்தை மறைக்கும் முயற்சி! அவர்கள் இல்லை என்றால், வேறு யார்? பிறகு சொல்கிறேன்.

இனவாதிகளின் அவதூறுகளை நீங்கள் ஏற்க வேண்டா. ஆனால் ஈழம் தொடர்பான திமுக அதிமுக நிலைப்பாட்டில் உங்கள் திறனாய்வு என்ன? சிந்தித்துச் சீர்தூக்கி உவத்தல் காய்தல் இல்லாமல் சொல்லுங்கள்.

உரையாடலைத் தொடர்வோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 32