தோழர் தியாகு எழுதுகிறார் 51:நகர்ப்புறக் குடியிருப்பு-நிலவுரிமைக் கூட்டமைப்பின் அறைகூவல்
(தோழர் தியாகு எழுதுகிறார் 50 தொடர்ச்சி)
நிலவுரிமைக்காக போராடுவோம்!
சென்னை பூர்வகுடி-உழைக்கும் மக்களின் நிலத்தின் மீதான உரிமை மெல்லமெல்லப் பறிக்கப்பட்டு அவர்கள் ஏதுமற்றவர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள். நகரமயமாதல், ஊர்ப்புறங்களில் வேலையின்மை போன்ற காரணங்களால் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மக்கள் இடம்பெயரத் தள்ளப்படுகின்றனர். பல்வேறு தரப்பட்ட மக்களின் வருகை தமிழ் மக்களின் ஓர்மை உணர்வையும் மண்ணின் மைந்தர்கள் என்ற ஒற்றுமை உணர்வையும் இழக்கச் செய்கிறது. தனியார்மயம் நிலத்தை வணிகப் பொருளாக்கி அதனைப் பெருமுதலாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வகை செய்கிறது. புதுத்தாராளியக் கொள்கை நகரங்களை முழுவதுமாக முதலாளர்களிடம் ஒப்படைத்து விடுகிறது. இது நகர்ந்து நகர்ந்து கிராமப்புறங்களைக் கைப்பற்றி நாட்டையே ஒரு வணிக வளாகமாக மாற்றி விடும் பேராபத்து சூழ்ந்துள்ளது. நகரங்களில் ஏற்கெனவே அந்த நிலைமை வந்து விட்டது.
சென்னையைப் பொறுத்தவரையில் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், தொழில்நுட்பப் பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் தவிர அரசு அலுவலகங்கள், ஆளும் வருக்கக் கும்பலின் வீடுகள்தான் தற்போது பெரும்பகுதி நிலத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆளும்வருக்கக் கும்பலே வீட்டுரிமையாளர்களாவும் இருப்பது கூடுதல் வசதி.
நகரங்களில் பரந்து விரிந்து வாழ்ந்து வந்த மக்களை தொழிற்சாலைக்கும் முதலாளர்களுக்கும் அடிமை வேலை செய்ய வைப்பதற்குத் தோதாக மிகக் குறுகிய நிலப்பரப்பிற்குள் அடைத்து விட்டனர். அவர்களின் நிலங்களைப் பறித்துக் கொண்டு வாழ்வாதாரத்தை நசுக்கி விட்டனர். கடலோடும் மீனவர்களைக் கரையிலிருந்து அகற்றியதோடு கடல்சார் வணிகதையும் இன்று தனியாருக்குத் தாரை வார்க்கிறது அரசு.
அடித்தட்டு ஏழை எளிய மக்கள் அடிமை வேலை செய்யத் தொழிற்சாலைகள், தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு அருகில் அவர்களைக் குடியமர்த்துவதற்கான திட்டமாகக் குடிசைமாற்று வாரியத்தைப் பயன்படுத்திக் கொண்டது அரசு. அதன் விளைவுதான் நவீன அடிமைகளாக மாறியிருக்கிற கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதி மக்களின் இப்போதைய வாழ்நிலை. இன்று குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பையும் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் என்று மாற்றி வீட்டுரிமையையும் பறிக்கத் திட்டமிடுகிறது அரசு.
உழைக்கும் வகுப்பு உழவைத் தொழிலாகக் கொண்டிருந்த போது உழவர்கள் புரட்சியின் முதன்மை ஆற்றலாக விளங்கினார்கள். உழுபவனுக்கே நிலம் சொந்தம், குறைந்த பட்சக் கூலி முழக்கங்களைக் கொண்டு மக்களைத் திரட்டினோம். தொழிற்சாலைகளில் பணியாட்களாக இருந்த போது ஆலைத் தொழிலாளர்கள் முன்னணிப் படை. பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம் போன்ற முழக்கங்களைக் கொண்டு மக்களைத் திரட்டினோம். இன்றைய சூழலில் அனைத்தும் ஒப்பந்தப் பணிகளாக மாறி வருகிறது. நிலமும் சொந்தமில்லை பணியும் நிரந்தரமில்லாத நிலை. வணிக நோக்கத்திற்காக விவசாய நிலங்கள், மக்களின் குடியிருப்பு நிலங்கள், கடல், மலை என அனைத்தையும் பெருமுதலாளர் வகுப்பு கைப்பற்றி வருகிறது. எனவே இனி நமது முழக்கம் நிலவுரிமைக்கானதுதான். நிலவுரிமைக்காகப் போராடும் நிலமற்றவர்களே நமது முன்னணிப் படை. அவர்களே பாட்டாளிகள்.
1) கோப்பைத் தண்ணீர் கோட்பாடு: உலகம் முழுக்கப் பல பண்பாடுகள் இருந்து வரும் நிலையில், அந்தந்த நாட்டில் உள்ள பண்பாட்டில் ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய அம்மக்களே முயன்று அச்சமூகச் சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்வது சரியா? பிற நாட்டுப் பண்பாட்டை அப்படியே இங்கு நகலெடுப்பது சரியா?
விடை: எந்த நாட்டுப் பண்பாட்டையும் அப்படியே படியெடுத்தல் அல்லது பார்த்தொழுகுதல் சரியில்லை. தேசிய இனப் பண்பாடு, நாட்டுப் பண்பாடு போலவே வேறு சில பண்பாடுகளும் உள்ளன: வட்டாரப் பண்பாடு, வகுப்புப் பண்பாடு [வருக்கப் பண்பாடு] அகவைசார் பண்பாடு என்று பலவும் உள. இவை தவிர உலகு தழுவிய மாந்தக் குலப் பண்பாடும் உள்ளது. எந்தப் பண்பாடும் மாற்றமில்லாதது அன்று. ஒவ்வொரு பண்பாட்டிலும் முற்போக்கும் பிற்போக்கும் போராடிய வண்ணமுள்ளன. தமிழ்ப் பண்பாட்டுக்கும் இது பொருந்தும். பண்பாடு என்பது விழுமியங்களின் இயங்கியல் தொகுப்பு. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே! இது பண்பாட்டுக்கும் பொருந்தும்.
சரி! கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு தொடர்பாக இந்தக் கேள்வி உங்களுக்கு எழுவது ஏன்? கோப்பைத் தண்ணீர்க் கோட்பாடு என்னும் பாலியல் விடுமைக் கொள்கையை இலெனின் எதிர்க்கிறார். காதல் விடுமையும் பாலியல் விடுமையும் ஒன்றல்ல என விளக்குகின்றார். புரட்சியாளர்களின் பாலியல் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றார். இப்பொருள் குறித்து 1 முதல் 5 வரைக்குமான தாழி மடல்களில் வந்துள்ள தொடர் கட்டுரைகளைப் படியுங்கள். ஏதேனும் புரியவில்லை என்றால் கேளுங்கள். எனக்குத் தெரிந்த வரை விளக்குகிறேன்.
2) தாழி என்பது விவாதம் என்பதற்கான மாற்றுச் சொல்லா? இது எனது ஊகமே. தாழி என்றால் குடம், சாடி, தளம், பதலை, அகளம், பரணி எனப் பொருளுரைக்கிறது
திவாகர, பிங்கல,சூடாமணி நிகண்டுகள்.
தற்கால அகராதிகள் முதுமக்கள் தாழி, வாயகன்ற பானை என்பதாகக் கூறுகின்றன.
தாழி என்ன பொருளில் நீங்கள் கையாளுகிறீர்கள்? உங்கள் தாழி மடல் எதிலாவது இதற்கு விளக்கம் வந்துள்ளதா?
தாழி மடல் 2இல் முதுமைத் தாழி, வெண்ணைத் தாழி எனக் குறிப்பிடுள்ளதைப் படித்தேன். தாழி என்பது சேமிக்கப்பட்ட ஒன்றிலிருந்து எடுத்து வழங்குவது எனக் கொள்ளலாமா?
விடை: தாழி பல பொருளுடைத்து என்றாலும், நான் தாழி மடலில் இரு பொருள் மட்டும் கொள்கிறேன்: ஒன்று வெண்ணெய்த் தாழி – மோர் கடந்து வெண்ணெய் எடுப்பது போல் நாம் உரையாடல் வழியாகப் புதிய சிந்தனைகளைப் பெற்றெடுக்க வேண்டும். இரண்டு முதுமைத் தாழி, சரியாகச் சொன்னால் முதுமக்கள் தாழி. நிலையாமையையும் முதுமையையும் தவிர்க்கவியலாது, இருக்கிற காலத்திற்குள் விரைவாகவும் செறிவாகவும் உழைக்க வேண்டும் என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொள்கிறேன். ‘காலமில்லை, நேரமில்லை, ஓடு ராசா!’
மீண்டு வர முடியாத தாழியில் இருக்கிற உணர்வோடு பாடாற்ற வேண்டிய தேவை எனக்குள்ளது, நமக்குள்ளது. சொல்வல்லனாய் இருந்தால் போதாது. சோர்விலனாகவும் இருத்தல் வேண்டும்.
நீங்கள் தந்துள்ள விளக்கத்தை நம் தாழிக்கு மூன்றாம் பொருளாகவும் கொள்ளலாம். நாம் சேமித்து வைத்துள்ள அறிவுச் செல்வத்தைப் பரிமாறிக் கொள்ளத் தொடர்பாடல் துறையில் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் அளித்துள்ள நல்வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தாழி பயன்படும்.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 33
Leave a Reply