தோழர் தியாகு எழுதுகிறார் 53: 2022ஆம் ஆண்டிற்கான துய்ச்சர் நினைவுப் பரிசு
(தோழர் தியாகு எழுதுகிறார் 52 தொடர்ச்சி)
தோழர் சமந்தா எழுதுகிறார்:
2022ஆம் ஆண்டிற்கான துய்ச்சர் நினைவுப் பரிசு
• ஒவ்வோராண்டும், மிகச் சிறந்த, புதுமையான மார்க்குசிய நூலுக்குத் துய்ச்சர் நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்கான துய்ச்சர் நினைவுப் பரிசு கேபிரியல் வினண்டு எழுதிய “அடுத்த மாற்றம்: துருவேறிய அமெரிக்கப் புறநகரில் தொழிற்சாலையின் வீழ்ச்சியும், சுகாதாரப் பராமரிப்பின் எழுச்சியும்” (The Fall of Industry and the Rise of Health Care in Rust Belt America) என்ற நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கேப்ரியல் வினன்ட் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நவீன அமெரிக்காவில் வேலை, சமத்துவமின்மை, முதலாளித்துவம்பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் ‘தி நேசன்’, ‘தி நியூ ரிபபிளிக்கு’, ‘டிசண்டு’ ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன.
• அமெரிக்காவின் பிட்சுபர்க்கு நகரம் ஒரு காலத்தில் உருக்குத் தொழிலின் மறு பெயராக அறியப்பட்டது. ஆனால் இன்று அதன் பெரும்பாலான ஆலைகள் இல்லாமல் போய் விட்டன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதும் உள்ள பல இடங்களைப் போலவே, நீல அங்கித் தொழிலாளர்களுடன் உற்பத்தி மையமாக இருந்த ஒரு நகரம் இப்போது சேவைப் பொருளாதாரத்தின் — குறிப்பாக சுகாதாரப் பாதுகாப்புத் துறையின் — ஆதிக்கத்தில் உள்ளது. இது மற்ற எந்தத் தொழிலையும் விட அதிகமான அமெரிக்கர்களைப் பயன்படுத்துகிறது. அமெரிக்காவின் நகரங்கள் புதிய பொருளாதார யதார்த்தங்களை எவ்வாறு எதிர்கொண்டன என்பதைக் காட்ட கேபிரியல் வினண்டு நம்மைத் துருவேறிய புறநகரின் உள்ளே அழைத்துச் செல்கிறார். பிட்சுபர்க்கின் சுற்றுப்புறங்களில், தொழில்மய நீக்கத்தைத் தொடர்ந்து ஒரு புதிய தொழிலாள வருக்கம் தோன்றியிருப்பதை அவர் விவரிக்கிறார்.
• உருக்குத் தொழிலாளர்களும், அவர்தம் குடும்பத்தினரும் வயதாகும் போது, அவர்களுக்கு அதிக சுகாதாரப் பாதுகாப்பு தேவைப்பட்டது. தொழில்துறைப் பொருளாதாரம் கடுமையாகச் சுருங்கினாலும், அங்கு பராமரிப்புப் பொருளாதாரம் செழித்தது. மருத்துவமனைகளிலும், முதியோர் இல்லங்களிலும் பல தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் பராமரிப்புப் பணிகள் பலவும் அந்நகரம் இழந்த உற்பத்தி வேலைகளுடன் சிறிதும் ஒத்திருக்கவில்லை. நீல அங்கித் தொழிலாளர்களைப் போலல்லாமல், வீட்டு, சுகாதார உதவியாளர்களும், மருத்துவமனை ஊழியர்களும் குறைந்த ஊதியத்திற்குக் கணிக்க முடியாத மணி நேரம் வேலை செய்கிறார்கள். மேலும் புதிய தொழிலாள வர்க்கத்தின் விகிதாசாரத்தில் பெண்களும், ‘கருப்பின’ மக்களும் கூடுதலாக உள்ளனர்.
• இன்று நாம் சந்திக்கும் கடுமையான நெருக்கடிகளில் சுகாதாரப் பணியாளர்கள் முன் வரிசையில் பணியாற்றுகிறார்கள். இருப்பினும் அவர்கள் தாம் இருபத்தோராம் நூற்றாண்டுத் தொழிலாளர்களின் முகம் என்பதை நாம் தாமதமாகவே அங்கீகரிக்கிறோம். அடுத்த மாற்றம் என்ற இந்த நூல், வரலாறு குறித்தும், அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்தும் தனிப்பட்ட நுண்ணறிவுகளை வழங்குகிறது. சுகாதாரப் பணியாளர்கள், முதன்மைத் தொழிலாளர்களுடன் இணைந்து, அவர்களது பொருளாதார மதிப்பின் உயர்ந்து வரும் அங்கீகாரத்தை அரசியல் திறனாக மாற்றினால், அவர்கள் இருபத்தோராம் நூற்றாண்டில் ஒரு பெரிய ஆற்றலாவார்கள் என்கிறது இந்நூல்.
• கேபிரியல் வினண்டு அவர்களுக்கு நம் வணக்கங்களையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குவோம்.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 35
(குறிப்பு : தாழி மடல் (34) சில அறிவிப்புகளை உடையது. இப்பொழுது தேவையில்லை என்பதால் அம்மடல் குறிக்கப் பெறவில்லை.)
Leave a Reply