தோழர் தியாகு எழுதுகிறார் 54 : சொல்லாத கருத்து, பேசாத வார்த்தை!
(தோழர் தியாகு எழுதுகிறார் 53 தொடர்ச்சி)
சொல்லாத கருத்து, பேசாத வார்த்தை!
தாழி அன்பர் சிபி எழுதியதை சென்ற மடலில் கண்டோம்.
“நீங்கள் அவ்வாறு கூறவில்லை, சத்தியசீலன் அவ்வாறு கூறியுள்ளார்” என்கிறார் சிபி. அவ்வாறு என்றால் எவ்வாறு?
“ஈழத்தில் பிரபாகரன் ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக் கூடாது என்பது ஏற்புடையதல்ல.” (தாழி மடல் 33.)
ஏற்புடையதல்லாத இந்தக் கூற்று என்னுடையதன்று என்பதை சிபி ஏற்றுக் கொள்கிறார். நல்லது, நான் விடுவிக்கப்பட்ட வரை மகிழ்ச்சி. நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்தாலும் வருந்துகிறேன்.
அப்படியானால் சத்தியசீலன் அப்படிச் சொன்னாரா? என்று பார்க்க வேண்டும். முதன்முதலாக தாழி மடல் – 29இல் அவர் இப்பொருள் குறித்து எழுதினார். அடுத்த மடலில் (30) “பெரியாரா? பிராபகரனா?” என்ற தலைப்பில் அவருக்கு மறுமொழி எழுதினேன். தாழி மடல் – 32இல் அவரது விளக்கமும் மீண்டும் என் மறுமொழியும் (சீமான் அரசியலுக்கு பிரபாகரன் பொறுப்பா?) இடம்பெற்றன. இதன் பிறகு இந்தப் பொருள் குறித்து அவர் ஒன்றும் எழுதவில்லை. 29, 32 ஆகிய இரு மடல்களில் அவர் எழுதினார். இந்த இரண்டிலும் நீங்கள் சாற்றுவது போல் அல்லது அந்தப் பொருள்படும் படி சத்தியசீலன் ஏதாவது எழுதினாரா? என்பதுதான் கேள்வி.
அன்பர் சத்தியசீலன் இப்பொருள் குறித்து எழுதியிருப்பதெல்லாம்:
1) அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் எனும் பெயரால் திராவிட இயக்கத்தையும் தந்தை பெரியாரையும் இழிவுபடுத்தி வருகின்றனர்.
2) திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்கள்- கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அவர்தம் சாதிகளிள் அடிப்படையில்’ தமிழர் அல்லாதோர்’ என்றும் ‘திராவிடர்கள்’ என்போரை இனப் பகைவர் என்றும் சாதிய அடிப்படையிலான இனவாத அரசியலைக் கட்டமைக்கின்றனர்.
3) விடுதலைப் புலிகளின் அரசியலை தமிழகத்தில் என்னைப் போன்ற பலர் பரவலாக அறிய வந்தது திராவிட இயக்கமும் திமுகவும் ஈழ விடுதலை ஆதரவுப் பிரச்சாரத்தின் மூலம்தான்.
4) இந்தத் தமிழினவாத அரசியல்வாதிகள் திமுக – திராவிட இயக்கங்களின் மீது அவதூறுகள் பரப்பிக் கொண்டுள்ளனர்.
5) இவர்களுக்குத் திராவிட இயக்கத்தின் மீது வன்மம்; இவர்களுக்குப் பின்னிற்பது யார் அல்லது எந்த ஆற்றல்! திராவிட இயக்கம் வீழ்ந்துபட்டால் அதனால் ஆதாயம் பெறுவது வலதுசாரி – இந்துத்துவா பாசிஸ்டுகளாகத்தான் இருக்க இயலும்.
6) இந்த இனவாதப் பிழைப்புவாதிகளுக்குப் பொருளாதார அடித்தளமாக இருப்பது மேலைநாடுகளில் வசிக்கும் ஈழ ஏதிலியரே!
7) பெரியாருக்கு எதிராக பிரபாகரனை எதிர்நிறுத்துகின்றனர்; நான் தெரியாமல்தான் கேட்கிறேன் – தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதிகம் நன்மையடைந்தது பெரியாராலா பிரபாகரனாலா? பிரபாகரனா தமிழ்நாட்டில் தில்லிக்கு எதிராகவும் பார்ப்பனர்க்கு எதிராகவும் போராடினார்?
8) பெரும்பாலான இடதுசாரிகள் (மகஇகவினர் உள்ளிட்ட) – அறிவுசீவிகள் பலரும் புலிகளை விமர்சித்து வருகின்றனர்! ஆனால் தங்களைப் போன்ற ஒரு சில இடதுசாரி அரசியலர்களும் பெரியாரியலாளர்களும் (பெரியாருக்கு நிகராகவே) ஆதரிக்கின்றனர்!
9) எனது நோக்கம் விடுதலைப் புலிகளை – பிரபாகரனை இழிவுபடுத்துவது அல்ல! அவர்கள் மீதான மதிப்பை நான் மாற்றிக் கொண்டதாகவும் நான் எங்கும் குறிப்பிடவில்லை.
10) பெரியாரியலாளர்கள் பிரபாகரன்- புலிகளைப் போற்றுகிறார்கள்; மறுபுறம் இனவாதிகள் (தங்களைப் போன்ற மெய்யான தமிழ்த் தேசியவாதிகளை ஈண்டு நான் குறிப்பிடவில்லை) பிரபாகரன் பதாகையைத் தாங்கிக் கொண்டு பெரியாரை- திராவிட இயக்கத்தைக் கடுமையாகச் சாடுகின்றனர்.
11) அவர்கள் யாவர் என்பதை அனைவரும் அறிவோம் – இருப்பினும் வெளிப்படையாகவே கூறுகின்றேன்: நாம் தமிழர் கட்சியினரும் பெ.மணியரசன் போன்றோரும்தாம்!
12) புலிகள் எவ்விடத்திலும் திராவிட இயக்கத்தைச் சாடியதாக நான் குறிப்பிடவில்லை – மாறாக அவர்களின் புகழ்பாடிக் கொண்டே அவர்கள் செய்யாத செயலை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்!
13) சீமானை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்து, (முன்பு கூவினார்களே- இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று அதுபோல்) ஈழத்தைப் பெற்றுவிடலாம் என்று குறுக்கு வழியில் யோசிக்கிறார்களோ என்றுதானே கருதவேண்டியிருக்கிறது!
14) இத்தகைய சிந்தனை உடைய மக்களின் தலைவரான பிரபாகரன் அவர்களையும் நாம் ஐயுறவேண்டியிருக்கிறது – அவர் மக்கள் தலைவராக விளங்கியிருக்கும் பட்சத்தில்!
இவ்வளவுதாங்க சிபி! இவற்றுள் சிலவற்றுக்கு நான் மறுமொழி எழுதியுள்ளேன். நீங்கள் விரும்பினாலும் எழுதலாம். நலங்கிள்ளி கொஞ்சம் எழுதியுள்ளார். நீங்கள் தந்தை பெரியார் குறித்து என் பார்வைக்கு மறுப்பு எழுதியுள்ளீர்கள். நான் இனிமேல்தான் உங்களுக்கு எழுத வேண்டும். எழுதுவேன். இந்த விவாதம் இன்னும் முடியவில்லை. உரையாடல் தொடர்கிறது.
ஆனால் —
“ஈழத்தில் பிரபாகரன் ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக் கூடாது” என்ற கருத்தை நான் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, அன்பர் சத்தியசீலனும் சொல்லவில்லை. அவரது எந்தக் கூற்றிலும் அப்படி ஒரு கருத்து தொனிக்கவே இல்லை. இந்த உரையாடலில் பங்கேற்ற யாரும் சொல்லவில்லை, சொல்லவே இல்லை. நீங்கள் எப்படிச் சொல்கின்றீர்கள் என்று விளங்கவில்லை.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 35
(குறிப்பு தாழி மடல் (34) சில அறிவிப்புகளை உடையது. இப்பொழுது தேவையில்லை என்பதால் அம்மடல் குறிக்கப் பெறவில்லை.)
Leave a Reply