(தோழர் தியாகு எழுதுகிறார் 54 தொடர்ச்சி)

இரோசிமா- நாகசாகி:
மாந்தக் குலம் மறக்கலாகாத பேரழிவுப் பெருஞ்சான்றுகள்


ஒரு கற்பனை! கற்பனைதான்! உக்குரைன் போரில் வல்லரசியக் கனவுகள் கலைந்து போன நிலையில் உருசிய அதிபர் புதின் தன் அச்சுறுத்தலைச் செயலாக்கினால்… எண்ணிப் பார்க்க முடியாத பேரழிவு நேரிடும் என்பதில் ஐயமில்லை. உருசிய உக்குரைன் போரை நாம் எதிர்க்க ஒரு முகன்மையான காரணம் அது அணுவாய்தப் போராக முற்றும் ஆபத்து உள்ளது என்பதாகும். உருசியா உக்குரைன் மீது அணுவாய்தப் போர் தொடுத்தால், எவ்வளவு சிறிய அளவில் தொடுத்தாலும், எந்தச் சூழலில் தொடுத்தாலும் அது கொடிய குற்றம், பெரும் படுகொலைக் குற்றம் என்று கண்டிக்கத் தயங்க மாட்டோம்.


இந்தக் கற்பனையை அப்படியே திருப்பிப் போடுங்கள்: உக்குரைன் அல்லது உக்குரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா அல்லது வ.அ.ஒ.அ.(நேட்டோ) … உருசியாவுக்கு எதிராக அணுகுண்டுப் போர் தொடுத்தால் என்ன செய்வோம்? உருசியாவின் வன்பறிப்புக்கு எதிரான அணுவாய்தப் போர் என்று சொல்லி நியாயப்படுத்துவோமா? இல்லை, உருசியா தொடுத்தாலும் சரி, உக்குரைன் தொடுத்தாலும் சரி, அணுவாய்தப் போர் என்றாலே பேரழிவுதான்! அணுகுண்டு அணுகுண்டுதான்! இதில் இசுலாமியக் குண்டு, இந்துக் குண்டு – தருமக் குண்டு, அதருமக் குண்டு – பாசிசக் குண்டு, குடியாட்சியக் குண்டு – முதலியக் குண்டு, குமுகியக் குண்டு — வல்லரசியக் குண்டு, தேசியக் குண்டு — தாக்குதல் குண்டு, தற்காப்புக் குண்டு … என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.
ஏனென்றால் அணுகுண்டு ஒரு போர்க் கருவியே அன்று. போர்க் கருவி என்றால் போரியல் இலக்குகளை மட்டும் குறி வைத்துத் தாக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். அணுகுண்டுக்கு இலக்கே மக்கள் கூட்டம்தான்! மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்றுகுவிக்க மட்டுமே பயன்படும் படியான பேரழிவுக் கருவியே அது. அணுகுண்டு சாதி பார்க்காது, மதம் பார்க்காது, இனம் பார்க்காது, தேசம் பார்க்காது, உயிரின் வகை பார்க்காது. பொருளின் தன்மை பார்க்காது, நியாயம் அநியாயம் பார்க்காது. அனைவரையும் அனைத்தையும் அடையாளமில்லாமல் அழித்து விடும்.
இது கற்பனை அன்று என்பதற்கு வரலாறு வழங்கியுள்ள மெய்ச்சான்றுதான் இரோசிமா – நாகசாகி! இந்த இரண்டும் இரண்டு சப்பானிய நகரங்களின் பெயர்கள் அல்ல. ஒரு பேரழிவுக்கான எச்சரிக்கையின் இரு நிலையான சின்னங்கள்! இரோசிமா நாகசாகிக் கொடுங்குற்றங்களைக் குறைத்துக் காட்டுவதோ, குண்டு வீசிய நாட்டுக்கும் வீசப்பெற்ற நாட்டுக்கும் இடையே பழிபகிர்வதோ, ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்துவதோ, இந்த அரசியல் என்னைக் கவலை கொள்ளச் செய்கிறது.

நாடுகளது இறைமையின் பெயரால் அணுவாய்தங்களையும் அணுக்கரு ஆய்வுகளையும் நியாயப்படுத்தும் மற்றொரு போக்கும் உள்ளது. இந்தப் போக்கின் சொந்தக்காரர்கள் இதைப் பெரிய கொள்கை என்று நம்பிக் கொண்டிருப்பது கொடுமையிலும் கொடுமை!

இறைமை, உரிமை, பெருமை என்று எந்தப் பெயரிலும் அணுவாய்த ஆக்கத்தையும் குவிப்பையும் நியாயப்படுத்த முடியாது. நாட்டுப்பற்று, வல்லரசுக் கனவு என்ற பெயர்களில் அணு வழிபாடு செய்து கொண்டிருந்த அபுதுல் கலாம் போன்றவர்களின் பொய்மையை இளைஞர்கள் புறந்துள்ள வேண்டும்! அதற்காகவேனும் இரோசிமா, நாகசாகியை மாந்தக் குலத்தின் கூட்டுள்ளத்தில் பதியச் செய்ய வேண்டும்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 35