தோழர் தியாகு எழுதுகிறார் 56 : சிறையச்சம் வெல்வோம்!
(தோழர் தியாகு எழுதுகிறார் 55 தொடர்ச்சி)
சிறையச்சம் வெல்வோம்!
புயல் மழைச் சேதம் பற்றிய என் வினவலுக்கு விடையாகத் தாழி அன்பர் பொன்முருகு கவின்முருகு எழுதுகிறார்:
எனது மகன் கவின்அமுதன் சென்னையில் பாதுகாப்பாக இருக்கிறார். உசாவிக் கேட்டறிந்தேன்.
இம்மடலில் தாழி என்பதை முடக்கப்பட்ட இடம் என்ற பொருளில் தாழியில் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
‘தாழி’ வீட்டுச்சிறை என்ற பொருளையும் தருகிறது.
நல்லது அன்பரே! தாழி, சிறை என்றும் பொருள் தருமானால் மகிழ்ச்சி. அது என் தாய்வீடு. அங்குதான் நான் நானாகப் பிறந்தேன். சிறை என்பது மதில்சூழ் நாடு என்றும், நாடு என்பது திறந்தவெளிச் சிறை என்றும் தோழர் ஏசிகே சொல்வார். சிறைப்பட்டோரும் ஒடுக்கப்பட்டோரில் ஒரு பகுதியே என்பதால் அவர்களை அணிதிரட்டிப் போராடுவது நம் கடமை என்பார். வெளியே ஓர் அரங்கத்தில் பணியாற்றுவது போல் உள்ளே சிறையரங்கத்தில் பணியாற்ற வேண்டும் என்பார். அவரும் நானும் தோழர்களும் எங்கள் சிறை வாழ்க்கையை அவ்வாறே அமைத்துக் கொண்டோம். ஏசிகே சொல்வார்: தனி வாழ்க்கை, பொது வாழ்க்கை, மண வாழ்க்கை, சிறை வாழ்க்கை யாவும் சேர்ந்ததே நிறை வாழ்க்கை. சிறை செல்லாதார் வாழ்க்கை குறை வாழ்க்கையே!
நாடு இப்போதிருக்கும் சூழலில் பாசிச ஆட்சியாளர்களை எதிர்த்து மக்களை அணிதிரட்ட வேண்டுமானால் முன்னணித் தோழர்கள் எந்நேரமும் சிறைப்பட அணியமாய் இருக்க வேண்டும். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறைப்பட்டிருக்கவும் அணியமாய் இருக்க வேண்டும். நான் இப்படித்தான் இருக்கிறேன்.
முன்னணித் தோழர்கள் இவ்வாறு சிறைப்படுவது உடனோக்கில் இழப்பாகத் தெரியும் என்றாலும் நெடுநோக்கில் மக்களியக்கத்துக்கு உரமூட்டும். போராடும் மக்களனைவரையும் சிறையிலடைக்க ஆட்சியாளர்களால் முடியாது. அப்படி அவர்கள் முயன்றால் மக்களின் உறுதியான நீடித்த எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும். வல்லரசியத்தையும் வல்லாட்சியையும் பாசிசக் கொடுங்கோன்மையையும் எதிர்க்க முதலில் இயக்கத் தோழர்களிடமும், இறுதியாகப் பெருந்திரளான மக்களிடமும் சிறையச்சத்தைப் போக்க வேண்டும்.
இந்திய வரலாற்றில் காந்தியாரின் தனிச் சிறப்பான வகிபாகத்துக்கு அடிப்படை என்ன? அவர் இந்திய மக்களின் சிறையச்சம் போக்கியவர் என்கிறான் கொலைகாரன் கோபால் கோட்சே.
ஆனந்து தெல்தும்புதே சிறைப்படுவதற்கு முன் சென்னையில் மக்களதிகாரம் ஒழுங்கு செய்த கூட்டத்தில் பேசினார். அந்தக் கூட்டத்தில் நான் பேசும் போது சொன்னேன்: மோதி ஆட்சியில் சிறைப்படுவது பெருமை!
ஃச்டான் சுவாமி, வரவரராவு போன்றவர்களுக்குக் கிடைத்த பெருமை நமக்கும் கிடைக்கட்டுமே! சுவாமிக்கு ஏற்பட்ட முடிவையும் நாம் மறக்கவில்லை. அவர் சாவச்சமே வென்று சாகாப் புகழ் பெற்று விட்டார். சிறையச்சத்தை வெல்வது என்பது கூட்டத்தில் முழங்குவது பற்றிய செய்தியல்ல. கையை முன்னே நீட்டி உறுதியேற்பது பற்றிய செய்தியும் அல்ல. ஒவ்வொரு தோழரும் இவ்வாறு உறுதி கொள்ள வேண்டும்.
விடுதலைக்கும் புரட்சிக்குமான போராட்டக் களங்களில் சிறையும் ஒன்று.
பீமா கொரேகான் சிறைப்பட்டோர் (பீகொ-16) விடுதலை கோரி….
குரல் எழுப்பும் பன்னாட்டுப் பொதுமன்னிப்புக் கழகம்
2022 மனிதவுரிமைகள் நாளில் பன்னாட்டுப் பொதுமன்னிப்புக் கழகம் ‘பீகொ-16’ விடுலைக்காக ஒரு பன்னாட்டு விண்ணப்ப முயற்சியைத் தொடுத்துள்ளது.
பீமா கொரேகான் – எல்கார் பரிசத்து வழக்குத் தொடர்பாக 2018 முதற்கொண்டு கொடுஞ்சட்டமாகிய ‘ஊபா’ எனும் சட்டப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 16 சான்றோர்கள் தளைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பதினொருவர் (11 பேர்) இன்றளவும் உசாவலே இல்லாமல் சிறையில் வாடுகின்றனர். இந்த அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க — பீகொ பதினறுவரை — உடனே முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என்ற இயக்கத்தை திசம்பர்-10 பன்னாட்டு மனிதவுரிமைகள் நாளில் பன்னாட்டு பொதுமன்னிப்புக் கழகம் தொடுத்துள்ளது.
பீகொ-16 சான்றோரில் பாவலர்கள், இதழாளர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள் (வழக்கறிஞர்கள்), கலைஞர்கள், ஓர் இயேசு சபைப் பாதிரியார் உட்பட பல்வேறுபட்டோர் உண்டு. இவர்கள் செய்த குற்றமெல்லாம் அடிப்படைக் குடியாட்சிய விடுமைகளான கருத்துரிமை, கூட்டங்கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை ஆகியவற்றை அமைதியான முறையில் பயன்படுத்தி மக்களை விழிப்புறச் செய்தார்கள் என்பதே. இந்திய நாட்டின் தொல்குடி மக்களான வறிய தலித்துகள், பழங்குடிகளின் உரிமைகள் காக்க நீண்ட நெடுங்காலமாகப் பாடாற்றினார்கள் என்பதே.
பீகொ-16 சான்றோரில் அருள்தந்தை ஃச்டான் சுவாமி சிறைக்காவலில் இருந்தபோதே உயிரிழந்து விட்டார். அது ஒரு நிறுவனப் படுகொலை. ஆனந்து தெல்தும்புதே, சுதா பரத்துவாசு, வரவர ராவு ஆகிய மூவர்க்கும் நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின் கடுமையான கட்டுத்திட்டங்களோடு பிணை விடுதலை வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் சிறையில் சிதைந்து கொண்டிருக்கின்றார்கள்.
கருத்துடன்படாமை என்பது குடியாட்சியத்தின் காப்பு-அதரி ஆகும். காப்பதரிக்கு இடமளிக்கா விட்டால் அழுத்தக் கலன் வெடித்து விடும் என்று 2018ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் கூறியதைப் பொதுமன்னிப்புக் கழகம் எடுத்துக் காட்டியுள்ளது.
[Dissent is the safety valve of democracy. If you don’t allow the safety valve, pressure cooker will burst. — Supreme Court of India, 2018]
பீகொ-16 – இந்தப் பதினறுவரும் நம் வீர நாயகர்கள். அவர்களின் கதை உலகிற்குச் சொல்லப்பட வேண்டும். நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களில் சிலரோடு அறிமுகம் இருந்ததையே நான் பெருமையாகக் கருதுகின்றேன்.
பீகொ-16 ஒவ்வொரு வீரரைப் பற்றியும் தாழி பேசும்.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 36
Leave a Reply