(தோழர் தியாகு எழுதுகிறார் 9: புவித்தாய்க்குக் காய்ச்சல்! தொடர்ச்சி)

மா இலெனின் என்பதில் மா என்பது முன்னெழுத்தா?

இல்லை. வி.இ. என்பதுதான் இலெனினின் முன்னெழுத்துகள். விளாதிமிர் இலியிச்சு உல்யானவு இலெனின் என்பது முழுப்பெயர். உல்யானவு குடும்பப் பெயர். இலெனின் என்பது இலேனா ஆற்றின் பெயரால் அவர் சூடிய எழுத்துப் பெயர். மா என்பது மாபெரும் என்பதன் சுருக்கம். மகா அலெக்குசாந்தர், மகா அசோகன் என்பது போல் மகா இலெனின்! மகா என்பதே மா ஆகிறது. தோழர் இலெனின்! புரட்சித் தலைவர் இலெனின்! மாமேதை இலெனின்! மா இலெனின்! எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

பேராசிரியர் நெடுஞ்செழியன் நினைவேந்தல்

இன்று கனடா நாட்டுத் தமிழ் அமைப்புகளின் நீதிக்கான கூட்டமைப்பு நடத்திய இணையவழி நினைவேந்தலில் பேராசிரியர் நெடுஞ்செழியன் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தேன். அவரைப் பற்றியும் அவரது பணிகள்-படைப்புகள் பற்றியும் சொல்ல வேண்டியவை ஏராளம். அவரைக் கருநாடகச் சிறையில் ஓராண்டுக்கு மேல் அடைத்து வைத்திருந்தார்கள் அல்லவா? அது பற்றி அவர் எழுதிய ஒரு கவிதை இதோ:

பொய் வழக்கு போட்டு

என் புகழையெல்லாம் தீய்த்து

கைவிலங்கு மாட்டியெனை

கடுஞ்சிறையில் பூட்டி

வெங்கொடுமை செய்தாலும்

நான் வீழ்ந்து விட மாட்டேன்

வஞ்சகத்தின் முன்னே

நான் மண்டியிட மாட்டேன்” 

ஒரு குறிப்பு: பேராசிரியர் நெடுஞ்செழியன் அந்த வழக்கில் சிறைப்படாமல் இருந்திருப்பின் பல்கலைக்கழகத் துணைவேந்தராகியிருப்பார், மேலும் பெருமை பெற்றிருப்பார் என்று ஒரு கருத்துண்டு. சிறைப்பட்டமையை அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு பள்ளமாகக் கருதுவர். நான் அப்படிக் கருதவில்லை. அது அவர் சூடிய மகுடம் என மதிக்கிறேன். அவரைச் சிறையிலடைத்த நாட்டுக்கு அது சிறுமை, வீழ்ச்சி! இந்த ஒரு காரணத்துக்காகவே அவரை நண்பராக, தோழராகப் பெற்றது எனக்கு, நமக்குப் பெருமை!

தரவு: தியாகுவின் தாழி மடல் 9