தோழர் தியாகு எழுதுகிறார் 61
(தோழர் தியாகு எழுதுகிறார் 60 தொடர்ச்சி)
சமந்தா எழுதுகிறார்
பொருளியல்:
1. தொழிலாளர் உரிமைக் குரல்
Ø இருபது நாடுகள் குழு(G-20) கூட்டமைப்பின் தொழிலாளர் தொடர்பான சிக்கல்களை விவாதிக்கும் அமைப்பாக த20(L 20) உள்ளது. கடும் கண்டனத்துக்குரிய வகையில் தேசியத் தொண்டர் அணி (ஆர்.எசு.எசு.), ஆதரவு இந்தியத் தொழிலாளர்கள் ஒன்றியத்தை (Bharatiya Mazdoor / Sangh BMS) த -20இன் தலைவராக நியமித்துள்ளது பாசக அரசு.
இ.தொ.ச.மையம்(சி.ஐ.டி.யு.), இ.தொ.ச.பே.(ஐஎன்டியுசி), இ.தொ.அ.(HMS) முதலான 10 மத்தியத் தொழிற்சங்கங்கள் ஈகியர் நாளான சனவரி 30ஆம் நாள் தில்லியில் கூடி, தேசிய மாநாடு நடத்தி, நரேந்திர மோதி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்க்கத் திட்டமிட்டுள்ளன. தொழிலாளர்களை மேலும் அணிதிரட்டுவது, காலவரையற்ற வேலைநிறுத்தம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று இந்து மசுதூர் அவையின்பொதுச் செயலாளர் அர்பசன் சிங்கு சித்து கூறியுள்ளார்.
தாங்கள் முன்வைத்த எந்தவொரு சிக்கலுக்கும் அரசு சரியாக விடையிறுக்கவில்லை. என்றும், நான்கு தொழிலாளர் சட்டங்களின் பெரும்பாலான விதிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவானவை அல்ல என்றும், அவை முதலாளிகளுக்கு நன்மை செய்வதையே நோக்கமாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார். பல வருடங்களாக இந்தியத் தொழிலாளர் மாநாடு கூட்டப்படாமல் உள்ளது. மற்றொரு சிக்கல் என்னவென்றால், தே.தொ.அ.(இரா.சே.ச. )ஆதரவு பாரதிய மசுதூர் சங்கம் கு.20(G 20) இன் தொழிலாளர் தொடர்பான சிக்கல்களை விவாதிக்கும் த(எல்)-20 இன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது. இச்சிக்கலை அனைத்துத் தொழிற்சங்கங்களும் கிளப்பும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இ.தொ.ச.பே.(ஐஎன்டியுசி), இ.தொ.ச.மையம்(சி.ஐ.டி.யு.), இ.தொ.அ.(HMS) முதலான தொழிற்சங்கங்கள், தொழிலாளர் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள் குறித்தும், இந்தியத் தொழிலாளர் மாநாடு போன்ற முத்தரப்புக் கூட்டங்கள் நடத்தப்படாதது குறித்தும், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தனியார்மயமாக்கம் குறித்தும் கண்டனம் தெரிவித்துள்ளன.
2. எண்ம (DIGITAL) ஏற்றத் தாழ்வு
Ø புதிய ஆஃசா குழு அறிக்கை – இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2022: எண்மப் பிரிவினை. பெண்கள், வேலையில்லாதோர், சிற்றூர்ப்புற ஏழைகள் எண்மப் பிரிவினையால் பின்னடைந்துள்ளனர் என்கிறது புதிய ஆஃசா குழு அறிக்கை. இந்தியாவில் சாதி, பாலினம், இருப்பிடம், வகுப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகள் ஏராளமாக உள்ளன. “இந்தியச் சமத்துவமின்மை அறிக்கை, 2022: ப் பிரிவினை” என்ற தலைப்பில் இந்தியா பற்றிய புதிய ஆஃசா குழு அறிக்கையின்படி, தற்போது எண்ம வெளியிலும் பிரிவினை பரந்த அளவில் காணப்படுகின்றது.
Ø இந்த அறிக்கையின் படி 2021ஆம் ஆண்டில் ஆண்களில் 61 விழுக்காட்டினர் கைபேசி வைத்திருந்தனர், ஆனால் பெண்களில் வெறும் 31 விழுக்காட்டினர் மட்டுமே கைபேசி வைத்திருந்தனர். பெரும்பாலும் ஆண்கள், நகர்ப்புறத்தில் வசிப்போர், ‘உயர்சாதியினர்’, உயர்வகுப்பினர்க்கே எண்மத் தொழில்நுட்பங்களை அணுகக்கூடிய வாய்ப்பு உள்ளது. சாதி அடிப்படையில் பார்த்தால் பொதுப் பிரிவில் 8 விழுக்காட்டினர் கணிணி அல்லது மடிக் கணிணி வசதியைப் பெற்றிருந்தாலும், பட்டியலினத்தவரில் பட்டியல் சாதிப் பிரிவினரில் 2 விழுக்காட்டினராலும் பட்டியல் பழங்குடியினரில் 1 விழுக்காட்டினராலும் மட்டுமே கணிணி அல்லது மடிக் கணிணி வாங்க முடிந்துள்ளது.
Ø 2021ஆம் ஆண்டில் ஊதியம் பெறும் நிரந்தரத் தொழிலாளர்களில் 95 விழுக்காட்டினரிடம் கைபேசி இருந்ததாகவும், ஆனால் வேலையில்லாதவர்களில் 50 விழுக்காட்டினரிடம் மட்டுமே அது இருந்தது என்றும் புதிய ஆஃசா குழு அறிக்கை கூறுவது வேலைவாய்ப்புக்கும் எண்மப் பிரிவினைக்குமான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது.
Ø பொதுவாக நம்பப்படுவது போலல்லாமல், சிற்றூர்ப்புறங்களில் கணினிச் சாதனங்களின் பயன்பாடு குறைந்துள்ளது என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மகுடைக்(கோவிட்டு) கொள்ளை நோய்க்கு முன்னர் சிற்றூர்ப்புற மக்களில் 3 விழுக்காட்டினர் கணிணி வைத்திருந்தனர், மகுடை(கோவிட்டு)க்குப் பிறகு இது 1 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
Ø கல்வி, நலவாழ்வு போன்ற இன்றியமையாச் சேவைகளை வழங்குவதில் எண்மத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் நாட்டின் எண்மப் பிளவும், அதன் விளைவுகளும் எதிரொலிக்கிறது. 2020 செட்டம்பரில் பொதுமுடக்கத்தின் போது ஐந்து மாநிலங்களில் நடத்திய விரைவான கணக்கெடுப்பின்படி, 82% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எண்மக் கல்வி கிடைக்கச் செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகத் தெரிகிறது. குறிப்பலை(சிக்னல்), இணைய வேகம் தனியார் பள்ளிகளில் மிகப் பெரிய சிக்கலாக மாறியுள்ளது. அரசுப் பள்ளிகளில், 80% பெற்றோர்கள் பொதுமுடக்கக் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்வி வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். 84% அரசுப் பள்ளி ஆசிரியர்களும் சாதனங்கள், இணைய வசதி இல்லாததால் இணைய ஊடகங்கள் மூலம் கல்வியளிப்பதில் சிரமப்பட்டுள்ளனர்.
Ø “எண்மத் தொழில்நுட்பங்கள் பொது சேவைகள், திட்டங்களை மேலும் அணுகக் கூடியவையாக மாற்ற வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை பணக்காரர்களுக்கும் சலுகை பெற்றவர்களுக்குமே எண்மத் தொழில்நுட்பங்கள் அணுகக்கூடியவையாக உள்ளன என்பதையே அறிக்கை. எடுத்துக்காட்டுகிறது. கல்வியறிவு இல்லாத ஒருவருடன் ஒப்பிடும் போது முதுகலைப் பட்டம் அல்லது முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் தொலைபேசி வைத்திருப்பதற்கான வாய்ப்பு 60% அதிகம் என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது” என்று ஆஃசா குழு(ஆக்குசுபாம்)-இந்தியா தலைமை நிருவாக அதிகாரி அமிதாப்பு பெஃகர் கூறியுள்ளார்.
Ø “இந்தியாவில் உயர்ந்து வரும் சமத்துவமின்மை எண்மப் பிளவு காரணமாக மேலும் உயர்ந்துள்ளது. சாதனங்கள், இணையம் இல்லாதவர்கள் கல்வி, நலவாழ்வு மற்றும் பொதுச் சேவைகளை அணுகுவதில் உள்ள இடர்ப்பாடுகளால் மேலும் ஓரங்கட்டப்படுகிறார்கள். சமத்துவமின்மையின் இந்தத் தீய சகடம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்,” என்றும் அமிதாப்பு பெஃகர் கூறினார். மத்திய, மாநில அரசுகள் எண்ம அகக்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் அனைவருக்கும் இணைய இணைப்பு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஆஃசா குழு வலியுறுத்தியுள்ளது, இணையத்தை அணுகக் கூடியதாக மாற்றுவதோடு, திறன்பேசிகளையும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இனிய அன்பர்களே!
பொ ந பி (EWS) இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஐவர் ஆயத்தின் பெரும்பான்மைக் கருத்துடன் மாறுபாட்டுக் கருத்துரைத்த இரு நீதியரில் ஒருவர் இரவீந்திர பட்டு.. அவரது தீர்ப்புரையில் முதல் பத்தியின் முகன்மை கருதி அதனை ஆங்கிலத்தில் அவர் எழுதியவாறே தருவதோடு, அதற்கான என் தமிழாக்கத்தையும் படைக்கிறேன்:
I regret my inability to concur with the views expressed by the majority opinion on the validity of the 103rd Amendment on Question No. 3, since I feel – for reasons set out elaborately in the following opinion – that this court has for the first time, in the seven decades of the republic, sanctioned an avowedly exclusionary and discriminatory principle. Our Constitution does not speak the language of exclusion. In my considered opinion, the amendment, by the language of exclusion, undermines the fabric of social justice, and thereby, the basic structure.
தமிழில்:
அரசமைப்புச் சட்டத்துக்கான 103ஆம் திருத்தம் கேள்வி எண் 3இன் அடிப்படையில் செல்லுபடியாவது பற்றிய பெரும்பான்மை நீதியர் தீர்ப்பில் சொல்லியிருக்கும் கருத்துகளோடு உடன்பட இயலாமைக்கு வருந்துகிறேன். ஏனென்றால் இந்தியக் குடியரசின் எழுபதாண்டு வரலாற்றில் முதல் முறையாக இந்த நீதிமன்றம் வெளிப்படையாகவே ஒரு பகுதியினரை மட்டும் விலக்கி வைப்பதும், அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுமான ஒரு கொள்கைக்கு இடமளித்துள்ளது என்று நான் கருதுகிறேன். இந்த என் கருத்துக்குரிய காரணங்களைக் கீழ் வரும் என் தீர்ப்புரையில் விரிவாகத் தருகின்றேன். நமது அரசமைப்புச் சட்டம் விலக்கி வைத்தலின் மொழி பேசாது. இந்தச் சட்டத் திருத்தம் விலக்கி வைத்தலின் மொழி பேசுவதால் சமூக நீதியின் நெசவியலையும், எனவே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும் சீர்குலைக்கிறது என்பது என் தீர்க்கமான கருத்து.
offends the basic structure…
ஆய்வுக்குரிய கேள்வி எண் மூன்று:
“அல்லாத பிற” என்ற விலக்கி வைக்கும் தன்மையிலான விதி அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தாக்குகிறதா?
[குறிப்பு: பொநபி இட ஒதுக்கீடு குறித்து நாம் நடத்திய இணையக் கருத்தரங்கில் உரையாற்றிய மேனாள் நீதியர் அன்பர் அரி பரந்தாமன் அவர்கள் நீதியர் இரவீந்திர பட்டின் இந்தக் குற்றாய்வைச் சிறப்பாக எடுத்துக் காட்டினார். பட்டுக்கே தெரிகிறது, இந்தியவாத இடதுசாரிகளுக்குத் தெரியவில்லையே!]
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 37
Leave a Reply