தோழர் தியாகு எழுதுகிறார் 62
(தோழர் தியாகு எழுதுகிறார் 61 தொடர்ச்சி)
தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கு ஒரு திறந்த மடல்
பாராட்டே அவமானம்?
இந்து- தமிழ், திசை நாளேட்டில் சென்ற திசம்பர் 12 ஆம் நாள் அண்ணல் அம்பேத்துகர் குறித்து நீங்கள் எழுதியுள்ள “அவமானமே பாராட்டு!” என்ற கட்டுரை படித்தேன். அம்பேத்துகர் தாம் வாழ்ந்த காலத்தில் ஏசப்பட்டார், இழிவுபடுத்தப்பட்டார், அவர் மறைந்து இத்துணைக் காலம் கழித்தும், அவரது 65ஆம் நினைவு நாளிலும் (2022 திசம்பர் 6) அவமதிக்கப்பட்டார். அன்று போலவே இன்றும் இந்தச் சமூகம் மாறாமல் இருப்பதே காரணம் என்று நீங்கள் எடுத்துக் காட்டியிருப்பது சரியானது.
அம்பேத்துகருக்குக் காவி உடை அணிவித்து நெற்றியில் நீறு பூசுவதும், அவருக்குச் செருப்பு மாலை போடுவதும் ஒன்றுதான்! உங்கள் கருத்து அழுத்தமாய் மனத்தில் பதிகிறது. இந்துவாகச் சாக மாட்டேன் என்று சூளுரைத்து பௌத்தம் தழுவியவரை இன்றைக்கு இந்துத்துவம் சொந்தம் கொண்டாடுவதா? என்று அறச் சீற்றம் கொள்ள உங்கள் எழுத்து நம்மை உந்துகிறது. அம்பேத்துகர் சந்தித்த அவமானங்கள் எத்தனை எத்தனை? இப்போதும் இந்த அவமானங்கள் தொடர வேண்டுமா? அவரைப் பாராட்டுவதாகச் சொல்லிக் கொண்டு அவமதிக்கிறதே இந்தக் காவிக் கூட்டம்? உங்கள் எழுத்து இந்த வேதனையை அனல் தகிக்க எழுப்புகிறது. இந்த அவமானம் அம்பேத்கருக்கு மட்டுமா? அவரது இதயத் துடிப்பில் தம் குமுறலைக் காணும் கோடானுகோடி ஒடுக்குண்ட மக்களுக்கும் இது அவமானம் இல்லையா?
ஆனால், அம்பேத்துகருக்கு இந்த அவமானமே பாராட்டுதான்! உங்கள் தலைப்பு உணர்த்தும் செய்தி இதுதான் எனக் கருதிக் கொள்கிறேன்!
இருப்பினும் எனக்குள் எழும் ஒரு கேள்வியை உங்களிடமே கேட்டு விட வேண்டும். மோதியின் பாசக பாசிச அரசு கொண்டுவந்துள்ள பொ.ந.பி. [பொருளியலில் நலிந்த பிரிவினருக்கான] (EWS) இட ஒதுக்கீட்டுத் திட்டம், அதற்கான அரசமைப்புத் திருத்தச் சட்டம் (திருத்தம் 103) அம்பேத்துகருக்கும் ஒடுக்குண்ட மக்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்று நீங்கள் கருதவில்லையா? வேறு வேறு பெயர்கள் சொல்லிப் பார்ப்பனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம் இடஒதுக்கீட்டின் சமூகநீதி அடித்தளத்தைத் தகர்க்கும் தே.தொ.அ.(இரா.சே.ச.) சூழ்ச்சி உங்களுக்கு விளங்கவில்லையா தோழரே?
பொநபி திருத்த சட்டம் செல்லாது என்று சிறுபான்மைத் தீர்ப்புரைத்த இரு நீதியரில் ஒருவரான இரவீந்திர பட்டு எழுதியிருப்பதை உங்கள் மேலான கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்:
“இந்தியக் குடியரசின் எழுபதாண்டு வரலாற்றில் முதல் முறையாக இந்த நீதிமன்றம் வெளிப்படையாகவே ஒரு பகுதியினரை மட்டும் விலக்கி வைப்பதும், அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுமான ஒரு கொள்கைக்கு இடமளித்துள்ளது என்று நான் கருதுகிறேன்.
“நமது அரசமைப்புச் சட்டம் விலக்கி வைத்தலின் மொழி பேசாது. இந்தச் சட்டத் திருத்தம் விலக்கி வைத்தலின் மொழி பேசுவதால் சமூக நீதியின் கட்டைமப்பையும், எனவே அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும் சீர்குலைக்கிறது என்பது என் தீர்க்கமான கருத்து.”
விலக்கி வைத்தல், ஒதுக்கல் … இதுதான் தீண்டாமையின் சாரம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இரவீந்திர பட்டின் பார்வையில் 103ஆம் திருத்தச் சட்டம், அது “ஏழைகளுக்கு” வழங்கும் சலுகை எல்லா ஏழைகளுக்கும் பொருந்தாது, ப.சா.,ப.ப.,பி.பி.வ.(எசுசி, எசுடி, ஓபிசி) ஏழைகளுக்குப் பொருந்தாது. அது முற்பட்ட சாதி ‘ஏழை’களுக்கு மட்டும்தான் பயன்படும். ஏழ்மைக்கான அளவுகோலும் கூட அவர்களுக்கு வேறு, இவர்களுக்கு வேறு!
“அல்லாத பிற” என்ற விலக்கலின் சொற்றொடர் இந்தியச் சிற்றூர்களிலிருந்து நாடாளுமன்றத்துக்கும் அரசமைப்புக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் போய் விட்டது, இது தீண்டாமையின் வெற்றிக் கொடி! அம்பேத்துகரையும் அவரை நேசிக்கும் நசுக்குண்ட மக்களையும், அவர்களின் விடியலுக்காக எழுதும் உங்களையும், உங்கள் எழுத்திலிருந்து ஊக்கம் பெறும் என்னைப் போன்றோரையும் இழிவுபடுத்தும் கொடி!
தோழரே! கண்ணுக்குத் தெரிந்த உத்தபுரம் தீண்டாமைச் சுவரை இடித்தால் போதாது. சட்ட நுட்பங்களில் மறைந்திருக்கும் பொநபி (EWS) தீண்டாமைச் சுவரையும் இடித்து நொறுக்க வேண்டும். அதுதான் அற்பர்கள் அம்பேத்துகருக்குச் செய்த இழிவைத் துடைக்கும்.
“அவமானமே பாராட்டு” எழுதிய நீங்கள் அதே நாளேட்டில் அல்லது வேறு எங்காவது அம்பேத்துகருக்கு பாசகவின் பொமுபி செய்துள்ள இழிவைப் பற்றியும் எழுதுங்கள், இந்த மடலுக்கு மறுமொழியாக நீங்கள் என்ன எழுதினாலும் தாழி அதனைத் தாங்கி வரும், ஏனென்றால் அம்பேத்துகருக்குப் பாராட்டே அவமானம் ஆகி விடக் கூடாது அல்லவா?
பின் குறிப்பு: தோழர் ச. தமிழ்ச்செல்வனோடு எனக்கு நேர்த் தொடர்பு இல்லை. அன்பர்கள் யாரேனும் இந்தத் திறந்த மடலை அவர் கவனத்துக்குக் கொண்டுசென்றால் நன்று! அவரது மின்னஞ்சல் முகவரிக்கும் இம்மடலை அனுப்புகிறேன். இந்த மடலைச் சமூக ஊடகங்களில் பரவலாக விதைத்திடுங்கள். இந்த மடலுக்கு மறுமொழி மற்றவர்களும் எழுதலாம். உரையாடலால் உண்மை காண்போம்.
படியுங்கள்: ஈழம் மெய்ப்படும்!
அன்பர் மா. சத்தியசீலன் எழுதுகிறார்:
உடன்பிறப்பு நலங்கிள்ளி அவர்களின் மடலில் குறிப்பிட்டவாறு தங்களின் வயது முதிர்வு குறித்தான தங்களின் விளக்கம் – தாழி பொருள் தொடர்பாக- நானும் அவ்வளவாக முதலில் கவனத்திற் கொள்ளவில்லை; ஆனால் மறுபடியும் இப்போது படித்துப் பார்க்கும் போது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் உள்ளது.
தங்களைப் போன்ற சான்றோர்கள்- களப் போராளிகளின் வாழ்வின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் என்னால் உணர முடிகிறது; தங்களின் உழைப்பு மென்மேலும் தொடரவே நான் உளப்பூர்வமாக விரும்புகிறேன்.
நிற்க, நவதாராளவாதமா- புதுத்தாராளியமா என்ற பேசுபொருள் சொல்லாராய்ச்சியுடன் இடை நின்றுவிட்டது; அது குறித்தான விளக்கத்தை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தேன்; அத்துடன் பழைய தாராளியம் என்றால் என்ன என்பதையும் அறிய விழைகிறேன்.
இதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்; ஏனென்றால் ‘ பெரியாரா- பிரபாகரனா’ என்று தருக்கம் தடம் புரள நான் கருத்து இடையீடு செய்து விட்டேன். மன்னிக்கவும்!
நான் மீண்டும் என்னுடைய விளக்கத்தை விளம்புகிறேன்: நான் விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளவே – என்னைப் போன்றோர் அறிந்து கொள்ள – சில கேள்விகளை எழுப்பினேன்.
என்னுடைய ஐயப்பாட்டை சிபி அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதையும் சிறப்பாகத் தாங்கள் விளக்கினீர்கள்- இன்னொன்றையும் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது இங்குக் குற்றாய்விற்கு அப்பாற்பட்டவர் என்று எவரும், எதுவும் இல்லை; அது பெரியாரோ அம்பேத்துகரோ எவராக இருப்பினும்!
வள்ளுவன் குறிப்பிட்டவாறு “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்” அனைத்தையும் ஐயுற வேண்டும்; பெரியாரே அதைத் தானே கூறினார்; எனவே அவரும் குற்றாய்விற்குட்பட்டவரே- இதை நான் மறுக்கவில்லை- ஆனால் சீமான் போன்றவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்புவது ‘ பெரியாரின் கருத்தில் மாறுபாடு இருந்தால் தாராளமாக குற்றாய்வு செய்யுங்கள்; ஆனால் அதற்குப் பிரபாகரன் பெயரைப் பயன்படுத்தாதீர்கள்’ என்பதுதான்!
என்னைப் போன்ற புலிகளைப் பற்றி அவ்வளவாக அறியாத -ஆனால் பெரியாரின் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டோர் என்ன செய்வோம்? பிரபாகரனின் அரசியல் மீது ஐயம் கொள்வோம்; இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்களா?
இதன் மூலம் அவர்கள் சாதிக்க விழைவது என்ன? இதைத்தான் நான் கேட்டது!
மற்றபடி பிழையாக் கோட்பாடு என்று எதுவும் இவ்வுலகில் இல்லை என நான் உறுதியாக நம்புகிறேன். முழுமுதல் உண்மை (Absolute truth) என்று எதுவும் இல்லை.
அறிவியலாளர் ஐன்சுடீனின் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ (General theory of relativity) பேரண்ட விளக்கத்திற்கு மட்டுமல்ல; நடைமுறைக் கோட்பாடுகளுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.
அவரவர் சார்ந்திருக்கும் வருக்க – சாதி – பாலினம்- நம்பிக்கைகள் மற்றும் பண்பாடு சார்ந்து தமது நிலைப்பாட்டை எடுப்பர்; ஆகவே அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கோட்பாடு என்று எதுவும் இருக்க இயலாது.
ஆனால் எந்தவொரு குற்றாய்வும் முற்போக்கானதாக, அடுத்தக் கட்ட வளர்ச்சிக்குரியதாகவும் இருக்க வேண்டுமே ஒழிய பிற்போக்கானதாக – கற்காலத்திற்கு இட்டுச்செல்லக் கூடியதாக இருக்கக் கூடாது என்பதே கருத்திற் கொள்ளவேண்டியதாகும்!
*****
நன்றி சத்திய சீலன்!
நவ தாராளவாதமா? புதுத் தாராளியமா? இந்த உரையாடல் முடியவில்லை, தொடரும். கடைசியாக நின்ற வினா: தாராளியமா? தாராளவியமா? இது குறித்து சிபி தந்த இலக்கண விளக்கத்தையும் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களின் கருத்தையும் தெரிந்து கொண்டோம். சொல்லாய்வறிஞர் அருளியாரின் கருத்துக் கேட்டு அவரிடமும் பேசியுள்ளேன். பழைய தாராளியம் பற்றி எழுத வேண்டியது நானே. பொறுங்கள், எழுதுவேன். இந்த உரையாடல் வேறோர் உரையடலால் தடம் மாறவோ தடுமாறவோ இல்லை. எல்லா உரையாடல்களும் தேவையானவையே. சொல்லடிக்கும் பணி தொடரும். கவலை வேண்டாம்.
புலிகளின் அரசியல் பற்றிய உங்கள் வினாவிற்கு எனக்குத் தெரிந்த வரை விடை தந்துள்ளேன். தமிழ்த் தேசியம், திராவிட இயக்கம், ஈழ விடுதலை ஆகியவற்றுக்கிடையிலான ‘சிக்கல்’ குறித்து நான் ஏற்கெனவே முகநூலில் தொடர் இடுகைகள் எழுதியுள்ளேன். அனைத்தையும் இங்கே மீள்பதிவு செய்ய தாழி கொள்ளாது. “ஈழம் மெய்ப்படும்” என்ற தலைப்பில் அந்தக் கட்டுரைகள் நூல் வடிவம் பெறப் போகின்றன. நீங்கள் அவற்றைப் படிக்க வேண்டும். அது வரை பொறுத்தருள்க!
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 38
Leave a Reply