(தோழர் தியாகு எழுதுகிறார் 69 தொடர்ச்சி)

வானுயர்ந்த கனவுகள்!

இனிய அன்பர்களே!

காரிக் கிழமை தோறும் ‘இந்து’ போன்ற பெரிய நாளேடுகள் நிலைச் சொத்து [ரியல் எசுடேட்டு] விளம்பரங்களால் நிறைந்து வழிகின்றன. வீட்டு மனைகள், அடுக்ககங்கள் விற்பனைக்கான முழுப்பக்கப் பலவண்ண விளம்பரங்கள் கண்ணையும் கருத்தையும், (உங்களிடமிருந்தால்) காசையும் கூடக் கவரும் படியாக வருகின்றன. அவற்றை நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பார்த்து என்னவாகப் போகிறது? சில நேரம் புதுப்புது எண்களிலிருந்து தொலைபேசி அழைப்பு வரும்: “சார், அருமையான லொக்கேசன், உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும், ஒரு முறை வந்து பாருங்க.” சிரிப்பை அடக்கிக் கொண்டு ‘நன்றிங்க, என்னால் முடியாதுங்க” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்து விடுவேன். மனத்துக்குள் ‘எனக்குப் பொருத்தம் என்றால் என்ன? காசில்லாமலா?’ என்று சொல்லிக் கொள்வேன். 

வீட்டுமனை, அடுக்கக விளம்பரங்களை வைத்துக் கிடைக்கும் விளம்பரக் கட்டணத்தில் இந்த நாளேடுகளை விலையே இல்லாமல் கொடுத்தாலும் இழப்பில்லை – அவர்களுக்கு!  

இதெல்லாம் இருக்கட்டும், சென்ற காரிக் கிழமை ஆங்கில இந்து நாளேட்டின் சென்னைப் பதிப்பின் 40 பக்கங்களில் முகப்புப் பக்கத்தில் வெளிவந்த விளம்பரத்தைப் பார்க்காமல் நகர முடியவில்லை. ‘நீயா நானா’ கோபிநாத்து இரு கையும் நீட்டிச் சென்னையில் வீடு வாங்க அழைப்பது போன்ற விளம்பரம் என்னை ஈர்க்கக் காரணம் அதன் ஆங்கிலத் தமிழ். அதாவது ஆங்கில எழுத்துகளில் தமிழ்ச் செய்தியை எழுதுதல். இது என்ன? தமிங்கலம்? தமிங்கிலீசு? இங்தமிழ்? ஆங்தமிழ்? இந்த விளம்பரத்தைப் படித்துப் பயனடையப் போவது (ஏமாறப் போவது) யார்? அவர்களுக்குத் தமிழ் புரியும், ஆனால் தமிழ் எழுத்துகள் படிக்கத் தெரியாது எனக் கொள்ளலாமா? அல்லது ஆங்கிலம் புரியாது, ஆனால் ஆங்கில எழுத்துகள் படிக்கத் தெரியும் எனக் கொள்ளலாமா? இந்தக் கவலை நமக்கு எதற்கு? கூந்தலுள்ள மகராசி கொண்டை போட்டாலும் விரித்துப் போட்டாலும் அது அவள் கவலை!

ஆனால் என் கவலை என் மொழியைப் பற்றி! நீங்களும் எனக்காக அந்த விளம்பரத்தை ஒரு முறை படியுங்களேன்.

CHENNAILA VEEDU VANGA 50L – 1 CR AAGUM

AANAA IPPO ILLA!

2BHK APTS. FROM 34L

AT TAMBARAM

UNGAL KANAVAI NINAIVAAKKUM CASAGRAND

சென்னைல வீடு வாங்க 50 இலட்சம் முதல் ஒரு கோடி ஆகும்! ஆனால் இப்போ அப்படி இல்ல! 2 படுக்கையறை, ஒரு கூடம், ஒரு சமயலறை அடுக்ககம் தாம்பரத்தில் (சென்னையில் என்று தொடங்கி தாம்பரத்துக்குப் போய் விட்டார்கள், தாம்பரமும் சென்னைதானோ?)! இதெல்லாம் விடுங்க, அந்தக் கடைசி வரிக்கு வாங்க!

UNGAL KANAVAI NINAIVAAKKUM CASAGRAND

திரும்பப் படிங்க! உங்கள் கனவை நினைவாக்கும் காசாகிராண்டு! அது எப்படிக் கனவை நினைவாக்க முடியும்? நினைவு வேண்டுமானால் கனவாகலாம்!  கனவு எப்படி நினைவாகும்?

இதில் ஏதோ குழப்பம் உள்ளது. நனவு என்று நினைத்துக் கொண்டு நினைவு என்று எழுதி விட்டார்கள்! இரண்டும் வேறு வேறு என்று கோபிநாத்தைக் கேட்டாலே சொல்லியிருப்பார்!

நண்பர்களில் பலரிடமும் இதே குழப்பம் இருக்கக் கண்டதால்தான் இதை எழுத முற்பட்டேன். நனவு என்றால் எதார்த்தம், மெய்ம்மை, உண்மைநிலை! நினைவு அகம் சார்ந்தது, நனவு புறம் சார்ந்தது.

கனவு நனவாவது என்றால் கனவு ஈடேறுதல்! மெய்ப்படுதல்! நிசமாதல்! உண்மையாதல்!

நினைவு கனவாகி, கனவு நனவானால் நன்று! கனவு நினைவாகும் அதிசயம் காசாகிராண்டில்தான் நடக்கும்!

‘ரியலிசம்’ என்பதை ‘எதார்த்தவாதம்’ என்று சொல்லும் பழக்கம் உண்டு. எதார்த்தமும் தமிழில்லை, வாதமும் தமிழில்லை! எதார்த்தவாதம் தொலையட்டும் என்று மெய்யாலுமே விரும்பியதால் நான் அதை நனவியம் என்று ஆளலானேன். ரியலிசம் = நனவியம்.

சோசலிசுட்டு ரியலிசம் = குமுகிய நனவியம்.

உட்டோப்பியா என்பது கனவு தேசம். கனவு தேசமாக இருந்த குமுகியத்தை (சோசலிசத்தை) நனவு தேசமாக்க வழிகாட்டியவர்கள்: காரல் மார்க்குசு, பிரெடெரிக்கு எங்கெல்சு!    மா இலெனின் கூறியது போல், கனவுகளின் இடத்தில் அறிவியலை அமர்த்தியவர்கள்!

கனவு மெய்ப்பட வேண்டும்      கைவசமாவது

 விரைவில் வேண்டும்.”

காசாகிராண்டு கனவு மெய்ப்படுவது ஒன்றும் பெரிதில்லை. காசாகிராண்டு இருப்பது தாம்பரத்தில்! தாம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்! தமிழ்நாடே கனவாய் இருக்கும் போது காசகிராண்டு வெறும் தூசு!!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 43