(தோழர் தியாகு எழுதுகிறார் 71 : இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு – தொடர்ச்சி)

நலங்கிள்ளியின் பின்னூட்டம் மெல்ல, இல்லை, விரைந்து

தமிழினிச் சாகும்?

தமிங்கில விளம்பரம்பற்றி,  தமிழை ஆங்கிலத்தில் ஒலிபெயர்த்து எழுதுவது பற்றி உங்களின் பதிவு கண்டேன். இதுதான் தமிழ்நாட்டின் எதார்த்த நிலைமை. இன்னும் 15 ஆண்டில் நாம் அடிக்கும் துண்டறிக்கைகளையும் இந்தப் பாணியில் அடித்தாக வேணடும். இது நடக்கப் போவது உறுதி. 

இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் பகிரியில்(வாட்சப்பில்) தட்டச்சு செய்து மாறி மாறி உரையாடிக் கொள்வதைப் பாருங்கள். முழுக்க ஒலிபெயர்ப்புதான். அண்மையில் கல்லூரி மாணவர்கள் பல காரணங்களால் தற்கொலை செய்து கொள்ளக் காண்கிறோம். அவர்கள் எழுதி வைக்கும் தற்கொலைக் கடிதத்தில் ஒலிபெயர்த்துதான் எழுதுகிறார்கள். 

இன்று இந்தத் தலைமுறை இந்த மொழிக் கொலைக்கு எதிராகப் போராடா விட்டால், நான் கூறியதுதான் நடக்கும். நாமே மேடைகளில் தமிங்கிலத்தில் பேசுவோம், தமிங்கிலத்தில் அரசியல் விளம்பரங்கள் செய்வோம். 

எப்படிச் சுற்றுச்சூழல் சிக்கல் உலககுக்குக் கடைசி எச்சரிக்கை மணி அடிக்கிறதோ, அதே நிலைதான் இப்போது தமிழுக்கும். 

தோழர் தியாகு எழுதுகிறார் 72: நேற்றைய செய்தி இன்றைய வரலாறு

இனிய அன்பர்களே!

வரலாறு என்பது 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இருக்கலாம். 50 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இருக்கலாம். நேற்றைய செய்தி இன்றைய வரலாறு என்பர்.

 50-60 ஆண்டுகளுக்கு முற்பட்ட செய்திகளில் எனக்குத் தனி ஆர்வம் உண்டு. ஏனென்றால் அப்போதே செய்தித் தாள் படிக்கிற பழக்கம் எனக்கு இருந்தது. அப்போதெல்லாம் திருவாரூரில் நிறைய படிப்பகங்கள் உண்டு. பள்ளிக்கு அருகிலேயே திரு.வி.க. நூலகம் இருந்தது, இப்போதும் இருக்கிறது. படிப்பகங்களில் ஏட்டை முழுமையாக விரித்து அதன் மேல் கவிழ்ந்து படிப்பேன். அரசியல் செய்திகள் மட்டும்தான்.

வலங்கைமான் வந்த பிறகு அரசு நூலகத்தில் பல புதிய ஏடுகள் அறிமுகமாயின. கருமுத்து தியாகராசர் நடத்திய ‘தமிழ்நாடு’ என்ற நல்ல தமிழ் நாளேடு. தமிழரசுக் கழகக் கொள்கைகள் தாங்கிய மபொசி யின் ‘செங்கோல்’. கண்ணதாசனின் ‘கண்ணதாசன்’.

வலங்கைமான் கம்பிக்காரத் தெருவில் என் அறிவுத் தந்தை அமீர்சான் தனது எழிலகத்துக்கு வெளியே பந்தல் போட்டு, சொந்தச் செலவில் முக்கிய நாளேடுகள் வாங்கிப் போட்டு விடுவார். படிப்பகத்தின் பெயர் “நாணய நிரூபணப் படிப்பகம்” – கண்காணிக்க யாரும் இல்லை, எதையும் எடுத்துச் செல்லாமல் படித்து விட்டு வைத்துச் சென்று விடுவார்கள் என்பதுதான் நாணய நிரூபணம். அவரது இறுதிக் காலம் வரை இந்தப் படிப்பகம் இயங்கி வந்தது. அங்கு போகும் போதெல்லாம் படிப்பகத்தில் சிறிது நேரம் படித்து விட்டுத்தான் அழைப்பு மணியை அழுத்துவேன்

கல்லூரிக் காலத்தில் அரசியல் ஈடுபாடு முழுமை பெற்று விட்டதால் பாடப் புத்தகப் படிப்பை விட ஏடுகள், அரசியல் நூல்கள் படிப்பதுதான் கூடுதல்.

1970இல் சிறைப்படும் நேரம் வியத்துநாம் விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க வான் குண்டு வீச்சு பற்றிய செய்திகள், பிறகு பாரிசு பேச்சுவார்த்தை, கிசிங்கருடன் (இ)லீடக்குதோ பேச்சு ….  இந்தச் செய்திகளை நான் படிப்பதோடு, ஆங்கில நாளேட்டிலிருந்து மற்றத் தோழர்களுக்குத் தமிழில் படித்துக் காட்டவும் வேண்டும்.

அப்போது படித்த அந்தச் செய்திகளை இப்போது மீண்டும் அதே செய்தி வடிவில் படித்தால் எப்படி இருக்கும்?  

ஆங்கில இந்து நாளேட்டில் 50 ஆண்டு முன்பு என்று சில பழைய செய்திகளை நேற்று நடந்தது போல் வெளியிடுகின்றனர். சென்ற 19.12.2022 இதழில் வியத்துநாம் பற்றிய ஒரு செய்தி – படித்துத்தான் பார்ப்போமே!

+++

வட வியத்துநாம் மீது அமெரிக்கா மீண்டும் முழு அளவிலான 

குண்டு வீச்சு!

வாசிங்குடன், திசம்பர் 18: வட வியத்துநாம் மீது அமெரிக்க அரசு மீண்டும் முழு அளவில் குண்டு வீசத் தொடங்கியுள்ளது. போருக்குத் தீர்வு காண அனோய் ஒப்புக் கொள்ளும் வரை குண்டுவீச்சு தொடரும் என்று வெள்ளை மாளிகை இன்று அறிவித்தது. 20ஆம் இணைகோட்டுக்கு வடக்கே மீண்டும் குண்டுவீச்சு நடத்த அதிபர் நிக்குசன் ஆணையிட்டார்.   “பகைவனின் இன்னுமொரு படைக் குவிப்பைச் சமாளிக்கவும் பொதுவுடைமைத் தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதால் அதனை வருமுன் தடுக்கவும்” இந்தக் குண்டுவீச்சுக்கு ஆணையிடப்பட்டுள்ளது என்றும் வெள்ளை மாளிகை அறியத் தந்தது. ஆனால் அதிபரின் பத்திரிகைச் செயலர் திரு (உ)ரொனாலுடு சீக்குலர் திரு நிக்குசனின் முடிவை அமைதிப் பேச்சு வார்த்தையில் இப்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலையோடு தொடர்பு படுத்த மறுத்து விட்டார். “அமைதிப் பேச்சுகளை மாற்றொரு தாக்குதலுக்கு மறைதிரையாகப் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை” என்று செய்தியாளர்களிடம் திரு ஜீக்லர் கூறினார். “பேச்சுவார்த்தை மூலம் அமைதி காண்பதற்கான பாதை அகலத் திறந்துந்துள்ளது” என்றார். “பூசலுக்குத் துரிதத் தீர்வு காணவே விரும்புகிறோம்”

+++


அன்பர்களே! இந்தச் செய்தியைப் புரிந்து  கொள்ள வேண்டுமானால் உங்களுக்கு வியத்துநாம் விடுதலைப் போரின் வரலாறு உருவரையாகவேனும் தெரிந்திருக்க வேண்டும். ஓசிமின், தளபதி வான் கியாபு, தின்பின்பூ.. இந்தப் பெயர்களைத் தேடுங்கள். அரசறிவியல் வளர்ச்சிக்கு வியத்துநாம் வரலாறு உதவும்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 44