தோழர் தியாகு எழுதுகிறார் 82: கடற்கோள் நினைவுகள்
(தோழர்தியாகுஎழுதுகிறார் 81 தொடர்ச்சி)
கடற்கோள் நினைவுகள்
இனிய அன்பர்களே!
அன்பர் இயூபருட்டு நேற்று முதல் வேலையாகக் கடற்கோளை(ஆழிப் பேரலையை) நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.
பதினெட்டாண்டு முன்பு கடந்த 2004 திசம்பர் 26ஆம் நாள் ஊருக்குள் கடல் நுழைந்து உயிர்களைச் சுருட்டிச் சென்ற அந்த நாளை எண்ணிப் பார்க்கிறேன். என் சொந்த நினைவுகள் சுருக்கமாக:
திசம்பர் 26 மாலை திருவாரூரில் தமிழர் தன்மானப் பேரவை சார்பில் தந்தை பெரியார் நினைவுக் கருத்தரங்கம் – அதில் தோழர் ஏ.சி.கே.யுடன் நானும் பேச வேண்டும். தோழர் காமராசுதான் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார்.
அன்று காலையிலேயே அம்மா அப்பாவைப் பார்ப்பதற்காகக் குடந்தை வழியாகச் சந்திரசேகரபுரம் சென்று விட்டேன். பகலுணவு முடிந்த பின் அப்பா அவர் வழக்கப்படி “சரி, சரி, புறப்படு, வந்த வேலையைப் பார், தாமதம் வேண்டா” என்று அனுப்பி வைத்தார்கள். அங்கிருந்து வலங்கைமான் சென்று குடந்தை வழியாகவோ நீடாமங்கலம் வழியாகவோ திருவாரூர் செல்லலாம்.
நான் மன்னார்குடிப் பேருந்தேறி நீடாமங்கலம் சென்று விட்டேன். அங்கு இயல்பான சூழல் இல்லை எனத் தோன்றியது. மக்கள் கூட்டம் கூட்டமாக எதிர்த் திசையில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சாலையில் பேருந்துகள் பெரும்பாலும் தென்படவில்லை. நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகளிடம் கேட்டேன்.
திருவாரூர், நாகப்பட்டினம் போவதற்குப் பேருந்து இல்லை. இனி வராது என்றார்கள். ஏன்? ஊருக்குள் கடல் புகுந்து விட்டது என்றனர். என்ன? கடலா? ஊருக்குள் புகுந்ததா? எந்த ஊருக்குள்? எப்படி? யாரிடமும் தெளிவான விளக்கம் இல்லை. அப்போது மதியம் 2-3 இருக்கலாம். மாலை நிகழ்ச்சிக்குத் திருவாரூர் போயாக வேண்டுமே? எப்படியாவது போய்விடுவது என்பதில் உறுதியாக இருந்தேன்.
பேருந்து இல்லை. தொடர்வண்டி? அதுவும் இல்லை. அவ்வளவு தொலைவு நடந்து நிகழ்க்சிக்குப் போய்ச் சேர முடியுமா? அம்பாசடர் சீருந்து ஒன்று வந்து நின்றது. எல்லாரும் அதை நோக்கி ஓடினர். நானும் ஓடிப்போய் ஓட்டுநரிடம் “திருவாரூர் போக வேண்டும்” என்றேன். நிறைய பேர் நெருக்கியடித்து ஏறினார்கள். ஆளுக்கு இருபதோ முப்பதோ கட்டணம்.
விரைந்து கொண்டிருந்தது அம்பாசடர்! முன்னிருக்கையில் அடித்துப் பிடித்து உட்கார்ந்திருந்தேன். கடல் ஊருக்குள் புகுந்த கதைதான் பேச்சு. எதிர்த்திசையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். சிலர் இருசக்கர ஊர்தியிலும் சிலர் வண்டிகட்டிக் கொண்டும்… ‘என்ன நடந்திருக்கும்?’ சிந்தனையைக் கலைத்தது ஒரு ‘டமால்’ ஓசை. பார்த்தால் முன்பக்க மூடி திடீரென்று திறந்து பார்வையை மறைத்துக் கொண்டிருந்தது. சாலை தெரியவில்லை. ஓட்டுநர் உட்பட யாருக்கும் தெரியவில்லை. ஆனால் வண்டியைத் திடீரென்று நிறுத்தி விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைத்துக் கொண்டிருந்தார். அப்பாடா! எதுவும் நடக்க வில்லை. இறங்கிச் சரி செய்து கொண்டு பயணம் தொடர்ந்தோம்.
திருவாரூர் கமலாலயம் வடகரையில் அந்தத் திருமண மண்டபத்தில் மக்கள் வர வர காமராசு உள்ளிட்ட பேரவைத் தோழர்கள் பந்தி போட்டு உணவு படைத்துக் கொண்டிருந்தனர். பின் பக்கம் சமையல் நடந்த வண்ணம் இருந்தது. ஏ.சி.கே. எங்கே என்று வினவினேன். நாகைக் கடற்கரையில் நின்று பாதிப்புற்ற மக்களுக்கு உதவும் பணிகளை முன்னின்று செய்து கொண்டிருக்கிறார் என்றனர். நானும் மக்களோடு உட்கார்ந்து வயிறார உண்டு அவர்கள் சொன்ன அதிர்ச்சிக் கதைகளையும் கேட்டுக் கொண்டேன்.
2010 தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் சென்ற போது கடற்கோள் ஏற்படுத்திய அழிவு பற்றிக் கடலோரவாழ் மீனவர்களிடம் நிறைய தெரிந்து கொண்டேன். திருமரைக்காட்டில் (வேதாரண்யத்தில்) கடற்கோளில் சிக்கி உயிர்பிழைத்த இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன். எப்படி? எப்படி? “ஓர் அலை வந்து தூக்கிக் கொண்டு போனது. இன்னோர் அலை தூக்கி வந்து கரையில் வீசியது..”
கடற்கோள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இலங்கையிலும் இந்தியப் பெருங்கடலின் கரையில் இன்னும் பல நாடுகளிலும் நெய்தல் மக்களிடம் படிந்து விட்ட மாறாத் துயரம்! ஈரம் காய இன்னும் பல காலம் ஆகும்.
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 51
Leave a Reply