(தோழர் தியாகு எழுதுகிறார் 88 தொடர்ச்சி)

கெட்ட போரிடும் உலகு!

இனிய அன்பர்களே!

வீட்டிலிருந்த வரை புத்தாண்டு நாளில் ஒரே ஒரு சிறப்புதான்! அது அப்பா சொல்லும் சிரிப்புத் துணுக்கு. வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு எங்களை எழுப்பி விடும் போது அப்பா சொல்வார்கள்: “ஏய்! எழுந்திரு! போன ஆண்டு படுத்தது. அடுத்த ஆண்டே வந்தாச்சு. ஒரு வருசம் தூங்கியாச்சு. போதும் எழுந்திருங்கடா!”

இதோ தாழியில் ஆண்டுக் கடைசி நாள், முதல் நாள் என்ற வேறுபாடு எதுவுமில்லை. கருத்துப் போர்க்களத்தில் இது என் இறுதிப் பதுங்கு குழி. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்காதிருக்க வேண்டிய இடம். வேடிக்கைகள், கேளிக்கைகளுக்கு இங்கே இடமில்லை.

திசம்பர் 31 இரவு 11 மணிக்கு உறங்கப் போனேன். சரியாக 12 மணிக்கெல்லாம் வெடியோசை கேட்டு எழுந்துவிட்டேன். பட்டாசு வெடிதான்! புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுகிறார்களாம் புத்தாண்டு!

பழைய ஆண்டு, புத்தாண்டு என்று எந்த வேறுபாடும் இல்லாமல் உலகின் சில பகுதிகளில் குண்டுகள் வெடித்து உயிர்களைக் குடித்து அமைதியை அழித்துக் கொண்டிருக்கும் போர்கள் நடந்து கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தால் பட்டாசு வெடிக்க மனம் வருமா?

உக்குரைன் மீது உருசியா போர் தொடுத்து 300 நாட்களுக்கு மேலாயிற்று. பொதுமக்கள் சற்றொப்ப 7,000 பேர் மடிந்துள்ளனர். 10,000 த்துக்கு மேல் காயமடைந்துள்ளனர். இது ஐநா மனிதவுரிமைகளுக்கான உயராணையர் அலுவலகம் தந்துள்ள கணக்கு. ஆகப் பெருந்துயரம்: ஒருகோடியே அறுபது இலட்சத்துக்கு மேற்பட்ட உக்ரைனியர்கள் வீடுவாசல் இழந்து ஏதிலியராக வெளியேறி அகதி வாழ்வின் துயரங்களுக்கு இன்னுமொரு சான்றாகியுள்ளனர்.


இப்போதும் அணுவாய்தப் போர் ஆபத்து நீடிக்கிறது. போரினாலும் பொருளியல் தடைகளாலும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் இலங்கை, இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் நெருக்கடியின் பிடியில் சிக்குண்டுள்ளன. அமெரிக்கப் படைக்கலன் வணிகர்கள் மட்டுமே இந்தப்போரினால் ஆதாயமடைந்துள்ளனர்.
இந்தப் போருக்கு இருகாரணங்களாக உருசிய புதினின் விரிவாதிக்க வெறியையும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் விரிவாக்கப் பேராசையையும் குறிப்பிடலாம். இரண்டுமே எதிர்க்கப் படவேண்டும். உருசியப்படைகள் போரை நிறுத்திவிட்டுப் பின்வாங்கும் படியும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் நேட்டோவைக் கலைத்து விடும்படியும் உலகின் அமைதி விருப்ப ஆற்றல்கள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.


பழைய இராணுவக் கூட்டணிகள் போதாவென்று குவாட்டு போன்ற அடைகாப்பிலுள்ள புதிய இராணுவக் கூட்டணிகளும் கலைக்கப் படவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் போர் கூடாது என்பது மன்பதையின் போர் முழக்கமாக வேண்டும்.
ஐநா வில் இடம் பெற்றுள்ள அரசுகள் மட்டுமல்லாமல் அரசில்லாத் தேசங்களும் மக்களியக்கங்களும் சேர்ந்து அமைதிக்கான அணிவகுப்பைத் தோற்றுவிக்க வேண்டும்.


விளாதிமிர் புதின் போரை நிறுத்திப் படை விலக்கம் செய்வது தான் அமைதியின் முதல் கோரிக்கையாக இருக்க முடியும். ஆனால் அவரோ உருசியத் தொலைக்காட்சியில் விடுத்த புத்தாண்டுக் காணொலிச் செய்தியில் உருசியா உக்குரைனில் தனது “தாயகத்தை”ப் பாதுகாப்பதற்காகவும் அதன் மக்களுக்கு உண்மையான விடுமை பெற்றுக் கொடுப்பதற்காகவும் போர் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். புதினின் போர் வெறி தொடருமானால் அவரது அதிகாரத்தை நீக்குவது தான் அமைதிக்கு வழி என்பதை உருசிய மக்கள் உணர வேண்டும்.


இந்தியாவில் அனைத்துத் தேசிய இன மக்களுடனும் சேர்ந்து இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, உக்குரைன் போரில் புத்தினைக் கண்டிக்கச் செய்ய வேண்டும். இந்தியாவின் ஆதரவு உருசியாவுக்கா, அமெரிக்காவுக்கா என்றால் அமைதி மீட்புக்கே என்று விடையிறுக்க வேண்டும். மொத்தத்தில் நரேந்திர மோதி தன் விலாங்கு மீன் அணுகுமுறையைக் கைவிட வேண்டும். அயலுறவுத்துறை அமைச்சர் செய்சங்கர் தேசநலன் கருதி இந்த ‘நடுநிலை’ அணுகுமுறை என்று தரும் விளக்கம் “கிட்டப்பார்வை” வகைப்பட்டது. போரில் ஏற்படும் அழிவுகளில் தான் தேச நலன் என்றால் அசோகச் சக்கரம் ஏன்?

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 57