(தோழர்தியாகுஎழுதுகிறார்  109 : ‘ஆளுநர்உரை’ – ஓர்ஊடுநோக்கு (3) தொடர்ச்சி)

புதிய அறிவாய்தங்கள்

இனிய அன்பர்களே!

பெருந்தொற்றுக் காலத்தில் நான் முகநூல் இடுகைத் தொடராக எழுதிய         நூல் – தமிழ்நாட்டில் திரவிட, தமிழ்த் தேசிய ஆளுமைகளிடையே வெடித்த அறிக்கைப் போரில் என் இடையீடு – ஈழம் மெய்ப்படும் –  நீண்ட காலத் தாழ்வுக்குப் பின் அச்சேறி  நூலாக வெளிவந்துள்ளது.

 பெரியாரும் தமிழ்த் தேசியமும் என்ற என்னுரைக்கு மறுப்பாகத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் எழுதிய நூல் திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? இந்நூலில் அவர் தேசிய இனச் சிக்கல் தொடர்பான மார்க்குசிய அணுகுமுறை மீதும், அது தொடர்பான என் மார்க்குசியப் புரிதல் மீதும் தொடுக்கும் தாக்குதலுக்கு மறுமொழியாக உரிமைத் தமிழ்த்தேசம் திங்களேட்டில் நான் எழுதிய கட்டுரைத் தொடர் தேசியத்தின் உரையாடல். இதுவும் நீண்ட காத்திருப்புக்குப் பின் நூல்வடிவம் பெற்று வெளிவந்துள்ளது,

மார்க்குசியம் அனா ஆவன்னா ஐந்தாம் பதிப்பு வெளிவந்துள்ளது. மார்க்குசின் தூரிகை புதிய பதிப்பு அச்சுக்கு அணியமாய் உள்ளது.

காலநிலை மாற்றமும் அதன் தீய விளைவுகளும் பற்றி நிறைய எழுதியுள்ளோம். தொடர்ந்து எழுதியும் வருகிறோம். ஆனாலும் பெருமளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டதாகச் சொல்வதற்கில்லை. அரசியல், மெய்யியல், பொருளியல் கல்வி போலவே சூழலியல் கல்வியும் பரவலாக  விதைக்கப்படுவது உடனடித் தேவையாக உள்ளது. இந்தத் தேவையைச் சிறப்பாக நிறைவு செய்யக் கூடிய நூல் தோழர் சமந்தாவின் சூழலியல் அடிப்படைகள். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் வெள்ளிதோறும் இணைய வகுப்பில் அவர் நடத்திய பாடங்கள், உரிமைத் தமிழ்த்தேசம் ஏட்டில் அவர் தொடர் கட்டுரைகளாக எழுதியவை தொகுக்கப்பெற்று இப்போது நூல் வடிவம் பெறுகின்றன. விரைவில் உங்கள் கையில் ஓர் அறிவாய்தமாக மிளிரும்.(இந்நூல் இப்பொழுது வெளிவந்து விட்டது.)

‘தமிழ்நாடு இனி’ என்ற தலைப்பில் கடந்த ஈராண்டுக்கு மேலாக இணையத்தில் அறிவன் தோறும் நான் நடத்தி வரும் அரசியல் வகுப்புகள் தொடர்வரிசையாக நூல் வடிவம் பெறவுள்ளன.

இவையெல்லாம் நீங்கள் படிக்கவும் பரப்பவும் மட்டுமல்ல, உரையாடவும் விவாதிக்கவும் கூட! அறிவூட்டி உணர்வூட்டி அணிதிரட்டும் நம் பணி அரசியல், பொருளியல், சூழலியல் கல்வியிலிருந்து தொடங்கட்டும்!

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 77