(தோழர் தியாகு எழுதுகிறார் 110 : புதிய அறிவாய்தங்கள் தொடர்ச்சி)

கரிகாலனின் அரும்பணி

நேற்று நமது செய்தி அரசியல் இணைய அரங்கில் (உ)ரூட்சு வலையொளியின் அன்பர் கரிகாலன் ‘வேங்கைவயல் இழிவு’ குறித்து விரிவாகப் பேசினார். அன்பர்களின் வினாக்களுக்கும் விடையளித்தார். ஒற்றை வீரர் படையாக அவர் ஆற்றியுள்ள பணி மகத்தானது. புறஞ்சார்ந்து புலனாய்வு செய்து உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
குடிநீரில் மலங்கலந்த கொடியவன் அல்லது கொடியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் நிலையை அவர் நெருங்கி விட்டார். ஆனால் அந்த இறுதி உண்மையை உறுதி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறைதான். காவல்துறை என்ன செய்துள்ளது? என்ன செய்யாமல் உள்ளது? ஏன்? ஏன்? காவல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டுகிறோம்.
கள்ளக்குறிச்சி பள்ளியில் சிறிமதி சாவையொட்டி அப்பாவி மக்கள் மீது காவல்துறை தொடுத்த அடக்குமுறையையும் பொய் வழக்குகளையும் திறம்பட அம்பலமாக்கியவர் இதே (உ)ரூட்சு கரிகாலன்தான். அவர் வெளிப்படுத்திய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டுதான் ஆங்கில நாளேடு இந்து ஒரு செய்திக் கட்டுரையே வெளியிட்டது. காவல் துறையின் கண்மூடித்தனமான அனாட்சிக்கு (அராசகத்துக்கு) ஓரளவு கடிவாளமிட்டதே கரிகாலனின் அயரா முயற்சிதான். குண்டர் சட்டப் பொய் வழக்கில் சிறைவைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் தோழர் இராமலிங்கத்துக்காக அறிவுரைக் கழகத்தில் நான் வாதிட்ட போதும் கரிகாலன் வெளிப்படுத்திய உண்மைகளைத்தான் சான்றாகக் கொண்டேன். இராமலிங்கம் மீது பொய்க் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதை நீதியர்களே ஒப்புக் கொண்டனர். அரசு அவரை விடுதலை செய்து விட்டது.


ச. தமிழ்ச செல்வனின் செவ்வினாக்கள்


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச. தமிழ்ச்செல்வன் நேற்று இந்து தமிழ் திசை நாளிதழில்இடையிலாடும் ஊஞ்சல்’ பகுதியில் “போதுமான அதிர்ச்சி இல்லாப் பொதுச் சமூகம்” என்ற தலைப்பில் வேங்கைவயல் இழிவு குறித்து எழுதியுள்ளார்.
தாழி அவரைப் பாராட்டுகிறது. இந்தக் கட்டுரையை அனைவரும் படிக்கப் பரிந்துரைக்கிறேன். தமிழ்ச்செல்வனின் எழுத்தில் எடுப்பாக வெளிப்படும் சில பார்வைகள் – உள்ளத்தின் அடியாழத்திலிருந்து அவர் எழுப்பும் செவ்வினாக்கள் – நம் ஆழ்ந்த கவனத்துக்குரியவை:
1) வெண்மணி (1968), திண்ணியம் (2002) வரிசையில் மற்றுமொரு கொடுமை இறையூர் வேங்கைவயல்.
2) தமிழ்ச் சமூகம் இந்த இழிவு குறித்துத் அதிர்ச்சி அடைய வில்லை, தலித் மக்களுக்கு அநீதி நிகழும் போது அசட்டையாக இருக்கிறது என்றால், நம் சமூகம் என்கிற பொதுச் சமூகம் ஒன்று இருக்கிறதா?
3) உண்மையில் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்பதாக நம் சமூகம் பிளவுண்டிருப்பதை விட ஒடுக்கப்பட்டோர் -ஓடுக்கப்படாதோர்(தலித்து – தலித்து அல்லாதோர்) என்கிறதாகத்தான் ஆழமாகப் பிளவுண்டு கிடக்கிறது.
4) சாதி இந்துச் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பப் பேரியக்கமாக ஓர் அறிவியக்கம் தேவைப்படுகிறது.
உரையாடல் மட்டுமல்ல, ஒன்றுபட்ட முயற்சிகளும் தொடர வேண்டும். கரிகாலனும் தமிழ்ச்செல்வனும் ஏற்றியுள்ள சுடர்களைக் கொண்டு பல விளக்குகள் ஏற்றலாம். ஏற்றுவோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 79