(தோழர் தியாகு எழுதுகிறார் 21 : ஏ. எம். கே. (4)தொடர்ச்சி)

காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும்

(CLIMATE ACCOUNTABILITY AND CLIMATE JUSTICE)

இந்தப் புவிக் கோளத்தில் காலநிலை மாற்றத்துக்குப் புவி வெப்பமாதல் காரணம். புவி வெப்பாமதலுக்கு கரியிருவளி(Carbon dioxide) உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வு காரணம். இந்த உமிழ்வு என்னும் கேடு செய்வதில் நாடுகளிடையே நிகர்மை (சமத்துவம்) இல்லை. கேடு செய்யும் நாடுகள் சில என்றால், கேட்டின் கொடும்பயனைத் துய்த்துத் துன்புறும் நாடுகள் பல. அந்தச் சில நாடுகள் தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற நாடுகள் என்றால், இந்தப் பல நாடுகள் வளர்ச்சியற்ற நாடுகள். 

காலநிலை மாற்றத்தின் தீவிளைவுகளால் — இயற்கைப் பேரிடர் முதலானவற்றால் — மக்கள் புலம்பெயர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவது புது வகையான ஏதிலியரை — காலநிலை அகதிகள் எனப்படுவோரை—தோற்றுவித்துள்ளது. இந்த ஏதிலியரில்  பெரும்பாலார் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று உலக வங்கி ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. சகாராவின் கீழுள்ள ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்தவையாக  இந்நாடுகள் உள்ளன. ஆனால் கரியுமிழ்வில் இந்த நாடுகளின் பங்கு மிகக் குறைவு.

ஈழத்தில் இனவழிப்புக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக்கூறல் வேண்டும் என்று கேட்கின்றோம். இதே போல் மிகையான கரியுமிழ்வுக்கும் பொறுப்புக்கூறல் வேண்டும் என்று சூழலியலர் குரல் கொடுத்து வருகின்றனர். இது காலநிலைப் பொறுப்புக் கூறல் (climate accountability) எனப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் துயரப்பட்ட நாடுகளுக்கும் மக்களுக்கும் நீதி செய்தாக வேண்டும். இது காலநிலை நீதி (climate justice) எனப்படுகிறது.

தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகள் காலநிலை மாற்றத்தால் தாக்குற்ற நாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கருத்து வளர்ந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கா.க.மா.27 (காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அவைகளின் கட்டமைப்புக் கட்சிகளின்மாநாடு 27/Cop27)

மாநாட்டில் இது ஒரு முகன்மைத் தலைப்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால் குற்றத்துக்கு இழப்பீடு பெற்றுக் கொண்டு இதே நிலை தொடரவும் இன்னுங்கூட மோசமடையவும் இடமளிக்கப் போகிறோமா?

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டு வரும் கேடுகளும், இவற்றுக்குக் காரணமான கரியுமிழ்வுகளும் உயிரற்ற வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. வரவிருக்கும் பேரழிவுகள் இந்தப் புள்ளிவிவரங்களின் பின்னால் மறைந்துள்ளன. எந்த இழப்பீடும் இந்தப் பேரழிவுகளை மறைக்கவோ தடுக்கவோ உதவாது.

இழப்பீட்டுத் தொகையே கூட மேலும் கரியுமிழ்வுக்கு வழி செய்யும் காரணிகளுக்கு அடிப்படையாகும் வாய்ப்பும் உள்ளது. இழப்பீட்டுத் தொகைகள் ஊழலின் வாய்ப்படும் ஆபத்தும் உண்டுதான்.

தூத்துக்குடியில் செம்பு உருட்டு (Sterlite) தொழிலகத்திற்குத் தண்டம் விதித்த உயர் நீதிமன்றம் அந்தத் தண்டத் தொகையை சூழற்கேடுகளுக்கு எதிராகச் செலவிடுமாறு ஆணையிட்டதும், ஆலை நிருவாகம் அந்தத் தொகையில் கொஞ்சம் செலவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே ஒரு பூங்கா அமைத்து அந்தப் பூங்காவிலேயே செம்பு உருட்டு (Sterlite) தொழிலகத்திற்கு விளம்பரம் வைத்ததும்தான் நினைவுக்கு வருகின்றன.

காலநிலை மாற்றத்தால் கானா நாட்டில் வறுமையும் அடிமை முறையும் பெருகி வருவது பற்றி முன்பே பார்த்தோம். உலக வங்கி கானாவுக்கு 5 கோடி தாலர் உதவி வழங்க உறுதியளித்துள்ளது. ஆனால் இந்தத் தொகை எவ்வகையில் செலவிடப்படும் என்ற கேள்வி மீதமுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பில் வளர்ந்து வரும் விழிப்புணர்வு அரசியல் நிலைப்பாடுகளில் சில மாற்றங்களுக்கும் வழிகோலி வருவதால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மீதான நாட்டம் வளர்ந்துள்ளது. நிலக்கரி, கன்னெய்(பெற்றோல்), எரிவாயு போன்றவை எடுக்க எடுக்கக் குறைந்து போகும் என்பதால் புதுப்பிக்கவொண்ணா ஆற்றல் மூலங்கள் எனப்படும். கதிரொளியும் காற்றும் எவ்வளவு பயன்படுத்தினாலும் தீரப் போவதில்லை என்பதால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களாகும்.

கரியல்லாத வழிகளில் ஆற்றல் இயற்றும் வழிகள் பற்றிய ஆராய்ச்சியும் பெருகி வருகிறது. புனல் மின்சாரம் கரியல்லாத ஆற்றல் மூலம்தான் என்றாலும் இதற்காகப் பேரணைகள் கட்டுவதும் ஆறுகளைத் திருப்பி விடுவதும் சுற்றுச்சூழலுக்குக் கேடாய் முடியும். கூடுதலாகக் கரியுமிழும் நாடுகளிடமிருந்து அவ்வளவாகக் கரியுமிழாத நாடுகளுக்கு ‘கரிச் செலாவணி’ பெற்றுத்தரும் வழியும் உள்ளது. கரியுமிழ்வைக் குறைத்துக் கொண்டால் ஊக்கத் தொகை கிடைக்குமாம். கரியுமிழும் நாடுகளிடமும் நிறுவனங்களிலும் கரி-வரி தண்டலாம் என்ற முன்மொழிவும் உள்ளது.

உடற்கொழுப்பைக் குறைக்க நேராக உறிஞ்சியெடுக்கும் சிகிச்சை முறை போல், காற்று மண்டலத்திலிருந்து கரியிருவளியை (Carbon dioxide) உறிஞ்சியெடுத்து நிலத்தடிப் பாறையிடுக்குகளில் செலுத்தும் செயல்வழிக்கான தொழில்நுட்பங்களும் ஆராயப்படுகின்றன. ஐசுலாந்து நாட்டில் இதற்காக ஒரு கோடி தாலருக்கு மேல் மதிப்பீட்டுச் செலவில்  அமைக்கப்பட்டுள்ள ‘ஆர்க்கா’ எனும் ஆலை அனல் மின்சாரத்தால் இயக்கப்பட்டு, ஆண்டொன்றுக்கு 4,000 பதின்மப் பாரம் (Metric Ton) கரியைப் பிடித்து வெளியேற்ற வல்லது. இதுதான் இவ்வகையில் உலகத்திலேயே மிகப் பெரிய ஆலை! உலக அளவில் 2020இல் உமிழப்பட்ட கரியிருவளி(Carbon dioxide) அளவு 30 நூறுகோடிப் பதின்மப் பாரத்திற்கு(Billion Metric Ton) மேல்! யானைப் பசிக்கு சோளப் பொறி என்று கூட சொல்ல முடியாது. அவ்வளவு சொற்பம்!   

புவிசார் அரசியல் போல் புவிசார் பொறியியல் திட்டங்கள் பலவும் பேசப்படுகின்றன. பெருங்கடலில் உரம் தூவி, குறிப்பிட்ட சிலவகை உயிரிகளின் பெருக்கத்தை ஊக்குவித்தால் காற்று மண்டலத்திலிருந்து பெருமளவு கரியிருவளி(Carbon dioxide) உறிஞ்சப்படுவதோடு, கடல்நீர் அமிலமாக்கத்தின் நச்சு விளைவுகள் குறைந்து, பவழப் பாறைகளும் கடல்சார் உயிர்க் கோளங்களும் காக்கப்படும்.

இப்படிப் பல வழிகள் உண்டு. எப்பாடுபட்டும் காலநிலை நெருக்கடிக்குத் தீர்வு கண்டாக வேண்டும் என்பது இன்றைய தலைமுறையின் முன்னிற்கும் அறைகூவல். இந்த அறைகூவலை ஏற்று நாம் செயல்படத் தவறினால், அடுத்த தலைமுறை…? அப்படி ஒன்று இருக்குமா?

தரவு : தாழி மடல் 18