(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்லூரியில் சாதி விளையாட்டு-தொடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் (ஓலைச் சுவடிகள்)

உதிரும் தமிழ் மலர்கள் 2/4
பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கி சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு..

ஐரோப்பியர் ஆட்சி காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த ஓலைச் சுவடிகளை சேகரித்துப் பாதுகாத்தார்கள் என்பதும் தனி வரலாறு. இவர்களுள் முக்கியமானவர் காலின் மெக்கன்ஷி ஆவார். தற்காலத்திலும் சுவடிகள் திரட்டும் பணியினை பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் பல இடங்களில் உள்ள ஓலைச் சுவடிகளைப் பெற்றுப் பாதுகாத்து வருவதுடன் தனி நபர்களிடமிருந்தும் விலை கொடுத்தும் ஓலைச்சுவடிகளை வாங்கி சேகரித்து வருகின்றார்கள். சென்னையில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், ஆசியவியல் ஆய்வு நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளும் ஓலைச்சுவடிகள் திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுப் பல அரிய தமிழ்ச் சுவடிகளை அழிவிலிருந்து காத்து வருகின்றன.

ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் நிறுவனங்களில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனமே ஓலைச் சுவடிகளை சேகரித்து நூலாகப் பதிப்பிக்கும் போற்றுதலுக்குரிய பணியைச் செய்து வருகிறது.

முனைவர் ஜி. ஜான் சாமுவேல் 1982இல் ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தை ஏற்படுத்தினார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூர் என்ற சிற்றூரில் பிறந்தார் குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் மேற்கத்திய நாட்டு மொழி, கலாச்சாரம் அதிகமாகப் பாதித்த ஊர்களில் நெய்யூர் முதன்மையான இடத்தைப் பிடித்தது. தமிழ் மொழியின் தொன்மையான கலை இலக்கியம் பண்பாடு அனைத்தும் ஊர் மக்களின் நினைவுத் திரையில் சீரழிந்த சிறப்பிலந்த ஓவியங்களாக முடங்கி விட்டன. ஆங்கிலம் பேசத் தெரிந்தவன் மட்டுமே அறிஞன், மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவன் மட்டுமே உயர்ந்த நாகரிக மதிப்பீடுகளைக் கொண்டவன் என்ற நெய்யூர் மக்களின் மனப்போக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு நின்றவர் திரு ஜி. ஜான் சாமிவேல் என்பது வியக்கத்தக்கது..

பள்ளிப் படிப்பை முடித்து நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்தார். தமிழை சிறப்பு பாடமாக எடுத்துப் படித்தார். அதனால் மற்றக் கல்லூரி மாணவர்களை விட அதிகமாகத் தமிழை பகிரும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்ப் பேராசிரியர் திரு சேது ராமு ஐயர் வகுப்பில் பாடம் நடத்தும் போது உ. வே. சாமிநாத ஐயர் எழுதிய ”உதிர்ந்த மலர்கள்” என்ற கட்டுரையைப் பாடமாக நடத்தி இருக்கிறார். அந்தக் கட்டுரையில் பத்துப் பாட்டுள் ஒன்றான குறிஞ்சிப் பாட்டினை ஓலைச் சுவடியிலிருந்து பதிப்பிக்க டாக்டர் உ வே சாமிநாதையர் அவர்கள் மேற்கொண்ட கடினமான முயற்சிகளை மாணவர்களது உள்ளங்கள் கவரும் வண்ணம் விளக்கி இருந்தார். ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஆங்கிலக் கலாசார மோகம் ஆட்டிப்படைத்து இருந்தது. பேராசிரியர் திரு சேது ராமு ஐயர் வேட்டியுடனும் ஜிப்பாவும் குடுமியமாக கல்லூரிக்கு வந்தது மாணவர்களின் கலாட்டா கேலி பேச்சுகளுக்கு உள்ளானார். அதனால் பேராசிரியரைப் பற்றிய கேலிப் பேச்சுகளை வெறுத்து ஒதுக்கிய திரு ஜான் சாமுவேல் அவர்கள் பேராசிரியரின் பாடத்திற்கு உள்ளே கவனத்தை செலுத்தினார்.. பேராசிரியரின் பாடம் பச்சை மரத்தில் பதிந்த பசுமரத்தாணி போல் மாணவர் ஜான் சாமுவேலின் மனதில் ஆழமாகப் பதிந்தது. குறிஞ்சிப் பாட்டில் 99 மலர்கள் பற்றிய பட்டியல் இசையோடும் அருமையான பெயர் அடைகளோடும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 99 மலர்களைக் குறிப்பிட்ட ஏடுகள் முதல் முயற்சியில் கிடைக்கவில்லை. இதில் நான்கு மலர்களின் பெயர்கள் ஏடுகளில் இல்லை. இந்த நான்கு மலர்களின் பெயர்களை அறிந்து கொள்ள அந்த ஏடுகளைத் தேடி உ.வே.சா. அலைந்தார். அயராத முயற்சியில் அந்த நான்கு மலர்களின் பெயர்களைத் தாங்கிய ஏடுகளும் கிடைத்தன. ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இந்த நான்கு மலர்களும் சேர்த்து மொத்தம் 99 மலர்களின் பெயர்கள் மட்டுமா உள்ளன? மேற்கொண்டு மலர்கள் பெயர் உள்ளதா? என்று ஆய்விற்காக மீண்டும் ஏடுகளைத் தேடி அலைந்தார். தமிழ்த் தாத்தா உவேசா ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்து கிடைத்த ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து அச்சுப் பிரதியாக நூலாக பதிப்பித்து வெளியிட்டது போன்ற பணிகள் பச்சை மரத்தில் பதித்த பசுமரத்தாணி போல் மாணவர் ஜான் சாமுவேலின் மனதில் ஆழமாக பதிந்தது.

நாமும் ஓலைச்சுவடிகளைத் தேடி சேகரித்தால் என்ன? என்ற ஆர்வம் திரு ஜி. ஜான் சாமிவேல் என்ற அந்த மாணவருக்குத் தலைதூக்கியது. பின்னர் பி.ஏ இளங்கலை பட்டத்தை நாகர்கோவில் இந்து கல்லூரியில் முடித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் இலக்கியம் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் ஓலைச்சுவடிகளை தேடி சேகரிக்க வேண்டும் என்ற தனது எண்ணங்களுக்கு வடிவத்தை திரு. ஜான் சாமுவேல் உண்டாக்கினார். மேலும் இதே காலகட்டத்தில் தான் உ.வே. சாமிநாதையருக்கு எந்த வகையிலும் குறையாமல் விளம்பரம் இன்றி யாழ்ப்பாணத்து தமிழ் புலவர்களின் ஓலைச்சுவடிகளை தேடி சேகரித்து பாதுகாக்கும் அளப்பரிய பணி என் பார்வைக்கு வெளிப்பட்டது என்று திரு. ஜான் சாமுவேல் தனது நூலில் பதிவு செய்கிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்து முடித்தவுடன் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.

மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் நான்காம் தமிழ்ச் சங்கம் செயல்படுகின்ற செந்தமிழ்க் கல்லூரிக்குச் சென்றும், ஓலைச் சுவடிகளைப் பார்வையிட்டார்.

ஆனால் தொடர்ச்சியான ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் தனது தலையாய கனவை மெய்பிக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கத் தொடங்கினார். இவரது பார்வை ஆங்கில இலக்கியம் கற்பதில் சென்றது. பெரும்பகுதி நேரத்தை முதுகலை ஆங்கில இலக்கியம் படிப்பதில் செலவிட்டார்.

இவர் தனது மனதில் தேக்கி வைத்திருந்த கனவுகள் இவரை ஊக்கப்படுத்தி சென்னையில் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேரத் தூண்டுகோலாக இருந்தன. சுவடி பதிப்பித்தல், சுவடியியல். தொடர்பான வகுப்புகள் நடத்துதல் ஆகிய முயற்சிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் செயல் வடிவம் பெறத் தொடங்கின.

இங்கே பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில்தான் “ஆசியவியல் ஆய்வு“ நிறுவனம் என்ற ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தை அமைப்பதற்குரிய திட்டங்கள் அவரது மனத்தில் செயல் வடிவம் கொண்டன. தமிழ் ஓலைச் சுவடிகளின் ஆய்வில் ஈடுபட்டு வியத்தகு சாதனைகள் புரிந்து உலக நாடுகளின் பாராட்டுதலைப் பெற வேண்டும் என்ற மிகையான கனவு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனத்திற்கான திட்டமிடுதலைத் தூண்டினாலும், ஓலைச் சுவடிகள் ஆய்வு பற்றிய துறையில் திரு ஜான் சாமுவேல் அவர்களுக்குத் தெளிவு ஏற்படவில்லை. உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு மு.கோ. இராமன், பேராசிரியர் மு.சண்முகம் பிள்ளை ஆகியோர் இவருக்குத் தெளிவு ஏற்படுத்தி நெறிப்படுத்தினார்கள்.

டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூலகத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமிக்க திரு.மு.கோ. இராமன் என்ற தமிழ் அறிஞர் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து வைத்திருந்தார். ஓலைச் சுவடிகள் அச்சு நூல்களாகப் பதிப்பிக்கப்படாமல் கரையானின் கொடிய வாய்க்கும், இயற்கையின் சீற்றத்திற்கும், மனிதனின் மூட நம்பிக்கைக்கும் நாள்தோறும் இரையாகிக் கொண்டிருக்கும் அவலநிலையை திரு மு.கோ.இராமன் அவர்கள் திரு ஜான் சாமுவேல் அவர்களிடம் பேசித் தமிழ் மொழியின் அறிவுச் செல்வங்கள் அழிவதைப் பற்றிய அவலநிலையை உணர்த்தினார்.

திரு ஜான் சாமுவேல் அவர்களது மனத்தில் விதைத்த விதையானது விருட்சமாகத் தொடங்கியது. தமிழ் ஓலைச் சுவடிகளைப் “பாதுகாத்தல்” , “படியெடுத்தல்” , “பதிப்பித்தல்”, ”மொழிபெயர்த்தல்”, மூல ஏடுகளை ஒப்புநோக்கி ஆய்தல் என்ற நிலையில் பன்முக ஆய்வுத் திட்டமொன்றை மிக விரிவாக திரு ஜான் சாமுவேல் தயாரித்தார். இதன் பின்னர் 1982ஆம் ஆண்டு “ஆசியவியல் ஆய்வு” நிறுவனம் பிறப்பெடுத்தது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 304

உலகத்தின் பல்வேறு தேசிய இனங்கள் தங்களுக்கென்று தனி மொழி, பண்பாடு, கலாசாரம், வரலாறு என்று தடித்த அடையாளங்களைப் பெற்றுச் சுதந்திரமான எழுத்து பேச்சுரிமை கொண்டு வலம் வருகிறார்கள்.

இந்தத் தேசிய இனங்களின் மூலவேர்களும் முகங்களுமான மொழிகளின் வயது அதிகபட்சமாக 1,000 ஆண்டுகளுக்கு அல்லது 1,500 ஆண்டுகளுக்கு உரியது. ஆனால் தொன்மையான மொழியைக் கொண்ட இனங்களின் வரிசையில் இலத்தீன், ஈபுரு, சீனம், கிரேக்கம், சமற்கிருதம், தமிழ் மொழிகள் முக்கியமானவை. ஆனால் இவற்றில் இலத்தீன், ஈபுரு, கிரேக்கம், சமற்கிருதம் போன்ற மொழிகள் காலப்போக்கில் பேச்சு வழக்கு இழந்து இறந்து போயின. ஒரு மொழி தனக்கான இலக்கணங்கள், எழுத்து வடிவங்களை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே வருவதினால் காலம் என்ற தாயின் கையைப் பிடித்துக் கொண்டு வருகின்ற குழந்தையை போன்று உயிர்பிழைத்துப் பாதை அமைத்துக் கொண்டே செல்கிறது. இவ்வாறு காலம் தோறும் புதுப்பிப்பதோடு பல்வேறு மொழிக் குழுவினர் தங்களின் நினைவுகளையும் அனுபவங்களையும் கலை இலக்கியங்களையும் பல்வேறு பொருட்களில் பதிவு செய்து வைத்துப் பாதுகாக்கிறார்கள். நீண்ட தொடராக மீண்டும் மீண்டும் தம்மைப் புதுப்பித்துக் கொண்ட இந்தக் கலை இலக்கியங்களைப் பாதுகாக்கும் கருவூலங்களாகத் தோல், மரப்பட்டை, செப்புப் பட்டயங்கள், ஓலைச் சுவடிகள் திகழ்கின்றன. இந்த ஆவணக் காப்புப் பொருட்கள் அனைத்தும் காகிதம், பின்னர் அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் உள்ளவை ஆகும். இங்கே தொன்மையான தமிழ் இலக்கியத்தைப் பொறுத்த வரை பனையோலைகளையே அதிக அளவில் மனித அனுபவங்களையும் கலைப் படைப்புகளையும் எழுதி வைக்கும் ஆவணக் காப்பகமாகப் பயன்படுத்தியதை அறிய முடிகிறது.

பனை ஓலையில் எழுதும் பழக்கம் எந்தக் காலத்தில் ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சங்கப் பாடல்களில் ஒன்றான கலித் தொகை ஓலையில் எழுதி முத்திரையிடும் மரபு குறித்து வெளிப்படுத்துகிறது. மிகப் பழங்காலத்திலிருந்து ஓலைச்சுவடிகளில் எழுதும் மரபு வழக்கில் இருந்து வந்தது என்பது என்பதற்கு இலக்கியச் சான்றுகளும் சிற்ப, ஓவியச் சான்றுகளும் ஏராளமாக உள்ளன.

பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதி வைத்து இந்த ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது என்பது மிகக் கடினமான பணியாகும். ஓலைச் சுவடிகள் 300 ஆண்டுகளுக்கு மேல் இந்தியத் தட்பவெப்ப நிலைகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அழிந்து விடும். ஆகவே இந்த 300 ஆண்டுகளுக்குள்ளே அழிவை எதிர்நோக்கி உள்ள ஓலைச் சுவடிகளில் இருந்து புதிய ஓலைச் சுவடிகளுக்கு மறுபடி செய்யப்பட வேண்டும். இவ்வாறு காலந்தோறும் மறுபடி செய்யப்பட்ட ஓலைச் சுவடிகளே, அஃதாவது ஓலைச் சுவடிப் படைப்புகளே காலத்தின் கோரத் தாண்டவத்திற்குச் சிக்காமல் தப்பித்து நம்மை வந்தடைந்துள்ளன. மேலும் பனை ஓலைகளின் காலத்தை விஞ்சி நிற்க முடியாத இயல்பை அறிந்தே பனை ஓலைகளில் பதிவு செய்த நேரத்தில் அதே வரலாற்றைக் கல்வெட்டுகளாகப் பாறைகளிலும் செப்புப் பட்டயங்களிலும் எழுதி வைத்தார்கள்.

ஓலைச் சுவடிகளைத் தொடர்ச்சியாக மறுபடி எடுக்கும் தலையாயப் பணியை சைவ சமய ஆதீன மடங்கள் செய்தன. ஆதீன மடங்களின் கிளைகளும் தமிழ் ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றின. இது தவிர ஆலயங்களில் பனை ஓலைச் சுவடிகளை வைத்து பாதுகாக்கும் நூலகங்களும் திறம்படச் செயல்பட்டன. இங்கு தமிழ் ஓலைச்சுவடிகள் மட்டுமல்லாது வடமொழி, தெலுங்கு போன்ற பிற மொழிகளின் ஓலைச் சுவடிகளும் பாதுகாக்கப்பட்டன.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகச் சிதம்பரம் நடராசர் கோவிலில் சரசுவதி பண்டாரம் என்ற பெயரில் செயல்பட்ட ஓலைச் சுவடி நூலக ஆவணக் காப்பகத்தைக் கூறலாம். மேலும் இந்நூலகத்தில் அழியும் நிலையில் இருக்கக் கூடிய ஓலைச்சுவடிகளை புதிய படி எடுக்கும் பணிகளும் நடைபெற்றதை அறிய முடிகிறது. இந்நூலகம் மூன்றாம் குலோத்துங்க சோழனின் இராசகுருவான சிரீ கண்ட சம்பு என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது என்று கிபி 1,251 இல் பொறிக்கப்பட்ட கோவில் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

இப்படியாகத்தான் ஏடுகளைப் பாதுகாக்கும் பணிகளை மன்னர்களும் கோயில்களும் மடங்களும் செய்தார்கள். சங்கக் காலத்திலேயே அழியும் நிலையில் இருந்த ஓலைச் சுவடிகளைப் புதிதாகப் படியெடுக்கும் பணிகள் மன்னர்களின் மூலமாக நடைபெற்றது தெரிய வருகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாகப் பூரிக்கோ, உக்கிரப்பெருவழுதி, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை போன்ற மன்னர்கள் “கூடலூர் கிழார்” போன்ற குறிப்பிட்ட புலவர்களிடம் ஓலைச் சுவடிகளை புதிதாகப் படியெடுக்கும் பணியை ஒப்படைத்தார்கள் என்பதை அறிய முடிகிறது.

இப்படியாகத் திருக்கோவில்கள் தோறும் நூலகங்கள் பராமரிக்கப்பட்டு காலம் காலமாகச் சிதையும் நிலையில் உள்ள பழைய நூல்களை எழுதிப் புதுப்பித்து வந்தனர். ஆனால் இதற்காக உழைத்தவர்களுக்கு மிகுந்த உடல்வலியைத் தரக் கூடிய செயற்கரிய பணிகளைச் செய்த ஆதீன மடங்கள் மற்றும் அம்மடங்களின் கிளைகள் ஆலயங்களில் உள்ள நூலகங்கள் என்றால், மற்றொரு பக்கம் தமிழ் இலக்கணத்தில் பாண்டித்தியம் பெற்று இலக்கியங்கள் படைத்த ஆயிரக்கணக்கான புலவர்கள், பண்டிதர்களின் வீடுகளில் ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. மேலும் இந்த ஏடுகளைப் பாதுகாத்து அவர்களின் குடும்பங்கள் ஏடுகளைக் கரையானின் கொடிய பற்களுக்கு இரையாகாமல் தலைமுறைகள் தோறும் ஏடுகளைப் பாதுகாத்து வந்தார்கள் என்பது முக்கியமாக கருதப்படுகின்றது..

ஆனால் காலப்போக்கில் சமயங்களில் மதங்கள் கற்பிக்கும் மூடநம்பிக்கைகளில் விழுந்து கிடந்த மக்கள் ஓலைச்சுவடிகளைத் தீயிட்டுக் கொளுத்துவதையும், ஆற்று வெள்ளத்தில் தூக்கிப் போடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்..

இதனால் காலப்போக்கில் தொன்மையான தமிழர்களின் வரலாற்றினைத் தாங்கியுள்ள ஓலைச்சுவடிகள் அழியத் தொடங்கின. இந்த நிலையில்தான் தமிழன்னையின் மரண ஓலத்தின் அழுகுரல் கேட்டுப் பதறித் துடித்த உ.வே. சாமிநாதையர், தாமோதரன் பிள்ளை, திரு தியாகராச செட்டியார் போன்ற தமிழ் அறிஞர்கள் தங்களது உணர்வு எழுச்சியில் பொங்கி எழுந்து ஓலைச்சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கத் தொடங்கினார்கள். இவர்கள் தவிர ஐரோப்பியர்களான காலின் மெக்கன்சி, எடோர்த்து ஏரியல், போன்றவர்களும், முத்துசாமிப் பிள்ளை, சரபோசி மன்னர், வி.கனகசபைப் பிள்ளை, மற்றும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் போன்றவர்களும் ஓலைச் சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.

சுவடிகள் சேகரிப்பதில் “காலின் மெக்கன்சி”தான் இந்தியர்களுக்குச் சளைத்தவனில்லை என்பதாகச் சுவடிகள் சேகரித்துக் குவிப்பதில் உயர்ந்து நிற்கின்றார். இவர் திரட்டிய சுவடிகளே சென்னையிலுள்ள அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் உருப்பெற அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. நமது தொன்மையான வாழ்வியல் தொடர்பான வரலாறு, பண்பாடு, இலக்கியம் தொடர்பான சுவடிகளையும், கல்வெட்டுகளையும், முறைப்படி தொகுக்க வழிகாட்டிய முன்னோடியும் மெக்கன்சி அவர்களே என்பது பலரும் அறிந்திராத செய்தி.. காலப்போக்கில் சார்லசு, பிலிப்பு பிரவுன், முனைவர் இலெய்டன், ஆகியோரும் மெக்கன்சியுடன் இணைந்து கொண்டதால் சேகரிக்கப்பட்ட ஓலைச் சுவடிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. மெக்கன்சி அவர்களது தொகுப்பில் 15 மொழிகளைச் சார்ந்த 1,568 சுவடித் தொகுப்புகள் உள்ளன.

சில இடங்களில் ஏடுகளைத் திருடி வெளிநாட்டவருக்கு விற்கும் போக்கும் நிலவியது. இதனைத் தடுக்கவும் இதற்காகப் பணம் கொடுத்தும் பலரைத் தமிழறிஞர்கள் நியமித்திருந்தார்கள் என்பதும் வரலாறு. ஏடுகளைத் திரட்டிப் பாதுகாக்கும் பணிகள் சங்கக் காலம் முதல் கி.பி 18ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்துள்ளதைக் காணலாம். தமிழ்த் தாத்தா உ.வே.சா மற்றும் முனைவர் தாமோதரன் பிள்ளை திரு தியாகராச செட்டியார் போன்ற இந்தத் தமிழறிஞர்கள் தாங்கள் சேகரித்த ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்து வைத்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை அச்சு நூல்களாகவும் பதிப்பித்து வெளியிட்டார்கள்.

தமிழ் இலக்கிய நூல்களில் அதிகமானவை சமண சமயத்தவர் படைத்த இலக்கியங்கள் ஆகும். திருக்குறள், நாலடியார், பழமொழி, நான்மணிக்கடிகை, ஏலாதி, சிறுபஞ்சமூலம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, நரி விருத்தம், வளையாபதி, சூளாமணி, நீலகேசி, மேரு மந்திர புராணம், சாந்தி புராணம், திருக்கலம்பகம், திருவெம்பாவை, திருநிறு யசோதர காவியம், உத்தாயன குமார காவியம், நாககுமார காவியம், நேமிநாதம், வஞ்ஞ நந்தி மாலை, இறையனார் அகப்பொருள், பாவை பாட்டு, எலி விருத்தம், கிளி விருத்தம், ஆதிநாதர் பிள்ளைத்தமிழ், நேமி நாதர் பிள்ளைத்தமிழ், அப்பாண்டை நாதர் உலா, சிவ சம்போதனை என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது தவிர விமர்சன நூல்கள், மற்றும் கணக்கு நூல்கள், சமண இலக்கண நூல்கள் என்ற பட்டியலும் காணப்படுகின்றது.

(தொடரும்)
குலோத்துங்கன், தோழர் தியாகு
தாழி மடல் 304