(தோழர் தியாகு எழுதுகிறார் : சென்னை-‘ஐ’ வந்தாலும் வரலாம், காங்கிரசு-‘ஐ’ வந்து விடக் கூடாது! – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

பொ.ந.பி. (EWS) இட ஒதுக்கீட்டுச் சிக்கல் குறித்து முன்பே எழுதியும் பேசியும் உள்ளேன். இது குறித்து உச்ச நீதிமன்ற நீதியர் இரவீந்திர பட்டு வழங்கிய தீர்ப்பு -சிறுபான்மைத் தீர்ப்புதான் என்றாலும் மிகச் சிறப்பான ஒன்று. இந்தத் தீர்ப்பைத் தமிழாக்கம் செய்து அதன் சில முகன்மைப் பகுதிகளை தாழி மடலில் (தாழி 37, 38) வெளியிடவும் செய்தேன்.

இரவீந்திர பட்டு தீர்ப்பின் தமிழாக்கமும் இச்சிக்கல் குறித்துப் பல்வேறு அறிஞர்களின் கருத்துரைகளும் தொகுக்கப்பெற்று
“உயர்சாதியினருக்கு 10%
பொ.ந.பி.(EWS) இட ஒதுக்கீடு சரியா? தவறா?”
என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் தொகுப்பாசிரியர்:
சு. விசயபாசுகர்.

ஏன் இந்தப் புத்தகம்? என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதை ஈண்டு பகிர்கிறேன்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அன்பர் விசயபாசுகர் எழுதுகிறார்…

ஏன் இந்தப் புத்தகம்?

2022 நவம்பர் 7ஆம் நாள் நண்பருடன் அமர்ந்திருந்தேன். பெரியாரிய, அம்பேத்துகரிய, மார்க்குசிய அறிமுகம் கொண்டவர் அவர். தேர்ந்த வாசகரும் கூட. உயர் சாதி ஏழைகளுக்குப் பொருளாதார வகையில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ஒன்றியப் பாசக 2019 சனவரி மாதம் நிறைவேற்றிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நவம்பர் 7 ஆம் நாள் அறிவிக்கப்படும் என்ற செய்திகள் முன்னரே வந்து விட்டன.

விடுதலை இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான சிக்கான இடஒதுக்கீடு குறித்த மிக முக்கியமான வழக்கு இது, பாசக அரசின் சட்டத் திருத்தத்தை நீதிமன்றம் செல்லாது என அறிவிக்குமா என இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். 10% பொ.ந.பி. (Economically Weaker Sections) இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவிக்குமாயின், இந்தியாவின் பெரும்பான்மை மக்களாகிய ஒடுக்கப்பட்ட (SC, ST, OBC) மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாக இருக்கும் என உரையாடினோம்.

அனைத்து ஏழைகளுக்கும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு உண்டுதானே? அதில் என்ன பிரச்சினை? இதனால் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்ன தீங்கு வந்து விடும்? இனி ப.சா., ப.ம., பி.பி.வ.( SC, ST, OBC) வகுப்பு மக்கள் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இது நல்லதுதானே? என்று பதில் கேள்வி கேட்டார்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி, அன்று மதியம் 12 மணிவாக்கில் 10% பொருளாதார இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. தீர்ப்பை எதிர்த்துச் சில அரசியல் கட்சிகள், அமைப்புகள், அரசியல், சமூகநீதிச் செயற்பாட்டாளர்கள் தவிர்த்து, பொதுமக்கள் தரப்பில் எவ்வித எதிர்ப்புணர்வும் இல்லை. எதுவுமே நடக்காதது போல், நாடெங்கும் பரிபூரண அமைதி நிலவியது. வழக்கமான முறையில் மக்கள் இயங்கினர். அமைப்பு முறையிலான எதிர்ப்பு தவிர, வெகுமக்களை உள்ளடக்கிய தன்னெழுச்சியான சிறு சிறு எதிர்ப்புகள் கூட இல்லை.

100 ஆண்டு காலம் போராடிப் பெற்ற உரிமை இடஒதுக்கீடு. இந்தியாவின் பெரும்பான்மை மக்களைப் பாதிக்கக் கூடிய வழக்கு. ஆனால் பொதுமக்கள் மத்தியில் எவ்வித சலசலப்பும் இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கக் கூடியது. 2019 சனவரியில் மூன்றே நாட்களில், 10% பொ.ந.பி(EWS) இடஒதுக்கீடு வழங்கும் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரிய எதிர்ப்பின்றி, ஒன்றிய பாசக அரசால் நிறைவேற்றப்பட்டது. அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பாசக பெருவெற்றி பெற்றது. நாடாளுமன்றத்தில் சார்பாண்மை கொண்ட திமுக, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இலல்லு பிரசாத்து யாதவின் இராட்டிரிய சனதா தளம், ஒவைசியின் ஏஐஎம்எம்(AIMIM), இந்திய ஒன்றிய முசுலீம் லீக்கு உள்ளிட்ட மிகச் சில கட்சிகளே நாடாளுமன்றத்திற்கு உள்ளே இச்சமூக அநீதியை காத்திரமாக எதிர்த்தன.

நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் அப்போது சார்பாண்மை இல்லாத மதிமுக, விசிக முதலான தமிழ்நாட்டின் பல கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பை எதிர்த்தன. பாமகவின் அன்புமணி இராமதாசு மக்களவை உறுப்பினராக இருந்த போதும், சட்டத் திருத்தம் இயற்றப்பட்ட நாளில் அவையில் இல்லை. அவர் சார்ந்த பாமக பொ.ந.பி.(EWS) இடஒதுக்கீட்டை எதிர்த்தது. அதிமுக கலவையான நிலைப்பாட்டை எடுத்தது.

தேர்தலில் பங்கெடுக்காத அமைப்புகள் பலவும் பொருளாதார இடஒதுக்கீட்டையும், அதைச் செல்லும் என அறிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் எதிர்த்தன. திமுக, விசிக முதலான கட்சிகள் சட்ட முறையாகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. பொருளாதார இடஒதுக்கீட்டின் மோசடியான தன்மையை அம்பலப்படுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க. தாலின் அவர்களின் அறிக்கை பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது. மேலும் 10% பொ.ந.பி.(EWS) இடஒதுக்கீட்டைத் தமிழ்நாட்டில் நிறைவேற்ற மாட்டோம் என திமுக அரசு தெரிவித்து விட்டது. ஆனால் இந்த எதிர்ப்பு வெகுமக்கள் இயக்கமாகப் பரிணாம வளர்ச்சி பெற்றதா?

பொருளாதார இடஒதுக்கீட்டைத் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான கட்சிகள் எதிர்த்தாலும், அது போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம். வெகுமக்களிடம் இந்த எதிர்ப்புணர்வு சென்று சேரவில்லை என்பதே உண்மை. மேற்குறிப்பிட்ட நண்பர் கேட்ட கேள்வி போல், ஏழைகள் இருக்கும் நாட்டில், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் என்ன தவறு உள்ளது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இடஒதுக்கீட்டு மண்ணான தமிழ்நாட்டிலேயே பொ.ந.பி.(EWS) இடஒதுக்கீடு போதுமான அளவு எதிர்க்கப்படவில்லை என்ற நிலையில், ஏனைய இந்திய மாநிலங்களின் நிலவரம் இன்னும் மோசம். பல மாநிலங்களில் எதிர்ப்பே இல்லை.

மாறாக, உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் முன்னே பல மாநிலங்கள் உயர்சாதியினருக்கான பொருளாதார இடஒதுக்கீட்டைச் செயல்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

வரலாற்றின் முந்தைய ஆண்டுகளுக்குப் பின்சென்றால், இடஒதுக்கீட்டிற்குச் சிக்கல் வரும் போதெல்லாம் கட்சிகள் மட்டுமல்ல, அக்கட்சிகளின் பின்னால் பெருவாரியான மக்களும் நின்று இடஒதுக்கீட்டைக் காத்த மண் தமிழ்நாடு. இந்தியாவிற்கே வழிகாட்டியாய்த் திகழ்ந்த மண் இது.

நீதிக்கட்சி அரசு இயற்றிச் செயல்படுத்திய Communal GO என்றழைக்கப்பட்ட வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆணையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், வகுப்புவாரி இடஒதுக்கீடு செல்லாது என 1950 சூலை 27ஆம் நாள் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடனே பெரியார் கொதித்தெழுந்தார். பெரியாரிடம் பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்திருந்த அண்ணாவும், திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் தீர்ப்பைக் கடுமையாக எதிர்த்தனர். அன்றைய ஆளும்கட்சியாக இருந்த காங்கிரசும் இடஒதுக்கீட்டைச் செல்லாது என அறிவித்ததை எதிர்த்தது.
தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று, இடஒதுக்கீட்டு உரிமை காக்க முழங்கினார் பெரியார். வெகுமக்களை நோக்கிப் பிரசாரம் செய்தார். பெரியார் திடலில் வகுப்புரிமை மாநாடு ஒன்றை நடத்தி, “மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தால் அவர்களைப் புறக்கணிக்கும் விதமாக கறுப்புக் கொடி காட்டுவோம்” என அறிவித்தார்.

இடஒதுக்கீடு செல்லாதென அறிவித்த உச்ச நீதிமன்றத்தைக் கண்டித்து, சென்னை மாநிலத்தின் பல பகுதிகளில் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கண்டனக் கூட்டங்கள், பேரணிகள் நடத்தினர். இந்தியாவின் மற்றப் பகுதிகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

குமாரசாமிராசா தலைமையிலான அன்றைய சென்னை மாகாண அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, 1951 ஏப்பிரல் 9ஆம் நாள், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தமிழ்நாடு தனது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியது.

விளைவு, 1951 சூன் 1 ஆம் நாள் நேரு தலைமையிலான ஒன்றிய அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தி, 15(4) எனும் புதிய பிரிவைச் சேர்த்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செல்லாக் காசாக்கியது. அன்றிருந்த எதிர்ப்பின் தீவிரம் காரணமாக 50 நாட்களில் மாற்றம் சாத்தியமானது. சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்துகரும் சட்டத் திருத்தத்தை ஆதரித்தார். நீதிமன்றத் தீர்ப்பை மிகக் கடுமையாக நாடாளுமன்றத்திலேயே விமர்சித்தார்.

நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, சென்னைமாகாணத்தில்நடந்த போராட்டங்களே திருத்தம் வரக் காரணம் எனத் தலைமையமைச்சர் நேரு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகஅறிவித்தார்.

1979 சூலை 2ஆம் நாள், அன்றைய முதலமைச்சர் எம்ஞ்சி இராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்குப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டார். அதன்படி ஆண்டுக்கு 9,000 உரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது. கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. திமுகவும், திராவிடர் கழகமும் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களையும், கண்டனக் கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தின. எம்ஞ்சியார் வெளியிட்ட அரசாணையை எரித்து அதன் சாம்பலைத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பினார்கள். இருப்பினும் எம்ஞ்சியார் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. கட்சிகளின் போராட்டத்திற்கு அசைந்து கொடுக்காத எம்ஞ்சியாருக்கு மக்கள் பாடம் புகட்டினர். தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது மொத்தமுள்ள 39 இடங்களில் இரண்டே இரண்டு இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.

தன் தவற்றை உணர்ந்த எம்ஞ்சியார் பொருளாதார அளவுகோலை நீக்கியதுடன் 31 விழுக்காடாக இருந்த பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தினார். ஆறே மாதத்தில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு எனும் மோசடி வீழ்த்தப்பட்டது.


(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 374