(தோழர் தியாகு பகிர்கிறார் : ஏன் இந்தப் புத்தகம்?-விசயபாசுகர் 2/2 – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

சற்றே நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன். தலைநகர் சென்னையைப் புரட்டிப் போட்ட புயல் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் எழுதுகிறேன். ததேவிஇ அமைப்புச் செயலாளர், நம் அனைவருக்கும் அன்புத் தோழர் மகிழன் விடுத்துள்ள வேண்டுகோளை உங்களோடு பகிர்கிறேன். நம் தோழமையின் இடுக்கண் களைக ! – தோழர் தியாகு

விரிபுயல்(மிக்குசாம்) பாதிப்பின் துயர்துடைக்கக்

கைகொடுங்கள்!

அன்பிற்கினியோரே, வணக்கம் !

நான் மகிழன். தென்சென்னையிலிருந்து எழுதுகிறேன். சரியாகச் சொன்னால் வேளச்சேரி தொடரி நிலையத்தை அடுத்த இராம்நகர் – புழுதிவாக்கதின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது என் வீடு. மிக்குசாம் புயல் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் முக்கியமானது. மடிப்பாக்கத்தில் இரண்டு ஏரிகள் உள்ளன. அந்த ஏரிகள் நிரம்பினாலோ உடைந்தாலோ அந்தத் தண்ணீர் போகும் வழி, தேங்கும் பகுதியாக இராம்நகர் இருக்கிறது. கொட்டித்தீர்த்த மழையில் இரண்டு ஏரிகளும் உடைந்துதான் போயின. திசம்பர் 4 திங்கள் காலை 5.30 மணியளவில்தான் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததை நாங்கள் அறிந்தோம்.

ஓரடி ஈரடி என்று இரண்டாம் நாள் முடிவில் சற்றொப்ப 3 1/2 அடி மழைநீர் உள்ளே புகுந்தது. எங்கள் தெரு முட்டுச்சந்து என்பதால் தண்ணீர் வெளியேற வாய்ப்பு குறைவாகிப் போனது. மற்றத் தெருக்களைக் காட்டிலும் எங்கள் வீட்டைச் சுற்றி 4 1/2 அடி தண்ணீர் தேங்கியது. எங்களுக்கு அடுத்தடுத்தப் பகுதிகள் இன்னும் தாழ்வான பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் வீடு கீழே ஒரு படுக்கையறை, மேலே இரண்டு படுக்கையறை கொண்ட தனி வீடு (duplex). மடமடவென இன்றியமையா உணவுப் பொருட்களை முதலில் மேலே ஏற்றினோம். பிறகு முக்கியப் பொருட்களாக கருதப்படும் ஒவ்வொன்றையும் மேலே எடுத்து வந்தோம். கட்டில், இருக்கைகள் உட்பட 2, 3 அடி உயரமிருந்த இருந்த அனைத்துப் பொருட்களும் நீரில் மூழ்கின. பாத்திரங்கள், அரிசி உள்ளிட்ட பலவும் அதில் அடங்கும். குறிப்பாக, வீட்டுக்கு வெளியே நிறுத்தி இருந்த 3 இரு சக்கர வாகனங்களும் முழுமையாக நீரில் மூழ்கி விட்டன.

எங்கள் வீட்டில் நான், அப்பா, இரண்டு தம்பிகள், ஒரு தங்கை, நிறைமாதக் கர்ப்பிணியான என் தம்பியின் துணைவி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட என் அம்மா, புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த என் இணையர் ஆகியோர் வசிக்கிறோம். என் தம்பியும் துணைவியும் இரண்டு நாட்களுக்கு முன்பு பல்லாவரத்தில் உள்ள அவன் மாமியார் வீட்டிற்குச் சென்றிருந்தார்கள். என் இணையரும் உடலமின்றி தன் தாய் ஊருக்குச் சென்றிருந்தார். இந்த இரண்டும்தான் பேரழிவிலிருந்து தப்பினோம் என்று நிம்மதியாக சிறுமூச்சு விடக் காரணமாய் அமைந்தன.

ஆனால் அம்மாவின் நிலை பெரும் அறைகூவலாய் இருந்தது. அம்மாவிற்கு மலப்பை மற்றும் மலக் குடலில் புற்றுநோய்(rectal cancer) உண்டாகி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மலப்பையும் மலக்குடலும் அறவே வெட்டி எடுக்கப்பட்டு மாற்றுப் பை (external – stomach bag )வெளியே பொருத்தப்பட்டுள்ளது.

முதல் நாள் முழுவதும் மழை, புயல் காரணமாக வெளியில் வரமுடியவில்லை. இருப்பதைச் சமைத்துச் சாப்பிட்டோம். இரவு கடும் குளிர், நச்சுப் பாம்புகள், பூச்சிகள் தண்ணீரின் தொடர் வரத்து பகுதி மக்களை நிலைகுலையச் செய்தது. அது என் அம்மாவைக் கடுமையாகப் பாதித்து. ஒருபுறம் உடல்நிலை மறுபுறம் மனநிலை. இரவு அம்மா சிறிதும் உறங்கவில்லை. அடுத்த நாள் பகலில் மழை இல்லாததால் மொட்டை மாடியில் பொழுதைக் கழிக்க முடிந்தது. மார்பளவுத் தண்ணீரில் நானும் தம்பியும் வெளியே வந்து கிடைக்கிற உணவுப் பொருட்களை வாங்கி வந்தோம். இரவு தண்ணீரின் தன்மை மிகவும் மோசமடைந்தது. கடுமையான துர்நாற்றம்!

திசம்பர் 6 மூன்றாம் நாள் குடிக்க, சமைக்கத் தண்ணீர் தீர்ந்து போனது. இனி என்ன செய்வதென அறியாமல் நின்றோம். அம்மாவை எப்படிக் காப்பற்றப் போகிறோம் என்று தவித்தோம். தூக்கிக் கொண்டு போகலாம் என்று எண்ணினால், அம்மா ஒத்துழைக்கவில்லை. போனாலும் சற்றொப்ப ஒரு கல் தூரம் தண்ணீரைக் கடக்க வேண்டும். அது சாத்தியமில்லை. பிறகு காலை 8 மணியளவில் ஒரு படகு வந்தது, ஆனால் அதில் ஏற்கெனவே ஆட்கள் நிரம்பி விட்டதால் அவர்கள் நிறுத்தவில்லை. பிறகு அரை மணி நேரத்தில் ஒரு சேசிபி வாகனம் வந்தது. அதுவும் எங்கள் தெருவுக்கு வரவில்லை. அம்மாவைத் தூக்கிக் கொண்டுபோய் அந்த வண்டியில் ஏற்றி அனுப்பினோம். மற்றவற்றைப் பிறகு பொறுமையாக எழுதுகிறேன்.

பலரும் நலம் விசாரித்தார்கள். சிலர் அக்கறையோடு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் என்றனர். ஆனாலும் எங்கள் பகுதி பெரும்பாலும் நடுத்தர வகுப்பினர் வசிக்கும் பகுதிதான். எங்களை விடவும் விளிம்புநிலை மக்கள் வாழும் பல பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதனை ஒப்பிட்டால் எங்களின் இழப்பு குறைவுதானே என்ற தயக்கம் எனக்கு இருந்தது. ஆயினும் இதனைச் சரி செய்யும் வரை யாரும் பணிக்குத் திரும்பாத நிலைதான் உள்ளது. ஏறக்குறைய 10 நாட்கள் வேலைக்குத் திரும்ப முடியாததால் வருவாய் இழப்பு, பொருட் சேதத்தினால் ஏற்பட்டுள்ள இழப்பு, உடனடியாக மீண்டும் இந்த வீட்டுக்குள் குடியேறச் செய்ய வேண்டியவை எனப் பலவகையான செலவுகள் இருக்கத்தான் செய்கின்றன. காலந்தாழத் தாழ இழப்பு கூடுதலாகவே செய்யும் என்பதை உணர முடிகிறது.

எனது குடும்பம் மாதச் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் அன்றாடங் காய்ச்சிக்கு நிகரானதுதான். இந்த நிலைமையில்தான் இங்கே பல குடும்பங்கள் இருக்கின்றன. எனவே 1% முதல் 100% வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் உதவ வேண்டியது கட்டாயம் என உணர்கிறேன்.

எனவே தமிழ்ச் சொந்தங்களே! இந்தப் புயல் பாதிப்பில்லாதவர்கள், சென்னை உள்ளிட்ட புயல் பாதிப்பு வராத மற்ற மாவட்டத்தைச் சார்ந்தவர்கள், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் உதவிட முன்வர வேண்டும். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஏதோ ஓர் உறவு உங்கள் ஒவ்வொருவர்க்கும் இருக்கத்தான் செய்யும். அவர்களை நினைவுகூர்ந்து உங்கள் உதவிகளைச் செய்ய முன்வாருங்கள்.

அப்படிப் பாதிக்கப்பட்ட பலருள் நானும் ஒருவன் என்ற வகையில் எனது அன்பிற்குரியவர்கள் இந்த இழப்பிலிருந்து மீண்டெழ எனக்குக் கைகொடுங்கள்! அரசு உரூ.6000 அறிவித்திருப்பது அறிந்தேன். யாருக்கு, எப்போது வழங்க முடியும் என்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. என்னென்ன சேதம் ஏற்பட்டது என்று கணக்கு போட்டுச் சொல்லும் நிலைமையிலும் இப்போது நாங்கள் இல்லை. இயல்பான நிலைக்கு வீடு திரும்பவும் வேலைக்குத் திரும்பவும் குறைந்தஅளவாக உரூ.50,000 தேவைப்படும். நீங்கள் உங்களுக்கு நம்பிக்கையானவர்களுக்கோ நம்பிக்கையானவர்கள் மூலமாகவோ உடனடியாக உதவ முன்வாருங்கள்.

ஒவ்வொருவரும் அனைவருக்காகவும்!
அனைவரும் ஒவ்வொருவருக்காகவும்!
ஒன்றுபட்டு நின்று விரிபுயல்(மிக்குசாம்) பாதிப்பை முறியடிப்போம் !

மகிழன்

டி 3, சாய் ஆயுசு இரமேசா அடுக்கம், சிவசுப்பிரமணியன் தெரு,
இராம் நகர், புழுதிவாக்கம், சென்னை 600 091

G Pay & (contact) : 9025870613
வங்கிக் கணக்கு விவரம்:
கணக்கர் பெயர் : மைக்கேல் இராசு, (Michael Raj)
கணக்கு எண்: 0933101041559
IFSC code: CNRB0000933
கனரா வங்கி, சைதாப்பேட்டை

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 397

குறிப்பு : மிக்குசாம் – சிலர் நிக்குசாம் எனக் குறிக்கின்றனர் – என்பதன் மூலப் பெயர் மிச்செளஙகு(MICHAUNG) என்னும் பருமிய / மியான்மியச் சொல்.

வலிமை, மீள்தன்மை, விரியும் திறன் எனப் பொருள்கள். வங்க விரிகுடலில் மையம் கொண்டதன்அடிப்படையிலும் விரிதிறன் புயல் , சுருக்கமாக விரி புயல் எனலாம்.