நச்சு உண்ணிக்கடியால் பாதிக்கப்படும் மலைவாழ்மக்கள்
மேற்குமலைத்தொடர்ச்சியில்
காட்டெருமையின் நச்சு உண்ணிக்கடியால்
பாதிக்கப்படும் மலைவாழ்மக்கள்
மேற்குமலைத்தொடர்ச்சி அமைந்துள்ள தேனி, திண்டுக்கல் பகுதிகளில் நச்சு உண்ணிக்கடியால் மலைவாழ் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடும் அல்லல்படுகின்றனர். இவற்றைத்தவிர அண்டை மாநிலமான கேரளா, ஆந்திராவிலும் இதே நிலை நீடிக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஏறக்குறைய 2 கோடி மலைவாழ் மக்கள் வசித்துவருகின்றனர். இம்மலைவாழ் மக்கள் அப்பகுதியில் வேளாண் நிலங்களை உருவாக்கி, காழ்ச்செடி(காப்பி), தேயிலை, வாழைக்காய், சீமைஅவரை(பீன்சு), உருளைக்கிழங்கு, செங்கிழங்கு(பீட்ரூட்டு), தோடம்பழம்(ஆரஞ்சு), தேங்கனி (கோகோ), மிளகு, ஏலம், கிராம்பு போன்றவற்றைப் பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மலைப்பகுதியில் காட்டெருமைகள் அரிதாகக் காணப்பட்டன. இப்பொழுது போதிய மழையின்மையாலும் பொதுமக்கள் மலைகளில் உள்ள மரங்களை வெட்டியதின் விளைவாகவும் காட்டெருமைகளின் வழித்தடங்களை மறித்து வீடுகள் தோட்டங்கள் ஆகியவற்றைக் கட்டியதாலும் காட்டுமாடுகள், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குக் கட்டுப்பாடின்றி நடமாடத் தொடங்கியுள்ளன. இவ்வாறு திரியும் காட்டுமாடுகளில் நச்சுத்தன்மை கொண்ட உண்ணிகள் ஒட்டியுள்ளன. இதனால், காட்டுமாடுகள் ஊருக்குள் நுழையும்பொழுது காட்டு மாடுகள் உடலில் உள்ள உண்ணிகள் மக்களிடமும் ஒட்டிவிடுகின்றன. இவ்வாறு ஒட்டிய ஒட்டுண்ணிகள் பேனைவிடப் பெரியதாக இருக்கும். அப்பொழுது காட்டுப்பகுதிக்கு வேலைக்குச் செல்லும் உழவர்கள், தொழிலாளிகள், அனைவரின் அடிவயிற்றுப் பகுதிகளிலும் குறிப்பாகச் சிறுநீரகங்கள், பெண்களின் மரும உறுப்புகள், கைகளின் இடுக்குகள் ஆகியவற்றிலும் தலையில் அடர்த்தியான முடிப்பகுதிகளிலும் ஒட்டுண்ணிகள் ஒட்டிவிடுகின்றன.
இந்த ஒட்டுண்ணிகளால் மலைவாழ்மக்கள் இரவு நேரங்களில் தூங்கமுடியாமல் அரிப்பு, வலி முதலான பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகின்றனர். தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளா, ஆந்திரா, கருநாடகா முதலான மாநிலங்களில் இந்த ஒட்டுண்ணிகளால் ஏறத்தாழ 50 நூறாயிரம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதன் தொடர்பாக மலைவாழ் மக்கள் புகார் கூறியதை அடுத்து வனத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடைத்துறை, தொடக்க நல்வாழ்வு நிலையங்கள் ஆகியவற்றிற்கு மாநில நல்வாழ்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியது. அவ்வப்பொழுது மக்களிடம் சென்று அரசு அதிகாரிகள் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தனர்.
இந்த ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட சாந்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் பண்டுத்திற்காகச்சேர்க்க்பட்டுள்ளார். அவருக்கு முதலில் இளைப்பு, விடாத காய்ச்சல் போன்ற நோய் தாக்கத்திற்கு ஆளானார். தொடக்கத்தில் மருத்துவ அதிகாரிகள் இதனை நிமோனியா நோய்க்கு அறிகுறி என அதற்கு மருத்துவம் அளித்தனர். ஆனால் அந்நோயாளியினுடைய இடுப்பில் கண்ட சிறு கருப்பு தழும்பினைக் கண்டு மருத்துவர்களின் நோய் உறுதி விளக்கத்தின் மறு பதிவில் கீழ் வருமாறு நோய் பற்றிய விவரம் கண்டறிந்தனர். இந்தத் தழும்பு விலங்கினின்று மனிதனிடம் தாவ வல்ல நோய் என்றும் இந்த நோயாளி அண்மையில் நகரத்திற்கு வெளியே பயணம் செய்தவரல்ல என்றும் இவருக்கு எப்படி இந்த நோய் வந்திருக்கும் என்றும் குழம்பிய நிலையில் எலிசா இரத்த ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு 15 நோயாளிகளும் 2010 ஆம் ஆண்டு 200 நோயாளிகளும் மருத்துவம் பெற்றுள்ளனர். இது போல நகரில் பல மருத்துவனைகள் குறிப்பாகக், காஞ்சி காமகோடி மருத்துவமனையில் இதனையொத்த சிறிய குழந்தைகளுக்கும் மருத்துவம் அளிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் நோயாளி என்று ஒருவரைக் கண்டுபிடித்துள்ளதாக நியூயார்க்கில் இருந்து வெளிவரும் இதழொன்று செய்திவெளியிட்டுள்ளது. தோலைத் துளைத்து நோயுண்டாக்கும் வெப்ப மண்டல ஈ வகையினால் கடிக்கப்படுவதன் மூலம் இந்நோய் பரவுகிறது என்றும், இவ்வகையான ஒட்டுண்ணி ஈ வகைகள் அல்லது இச்சிறு பூச்சி வகைகள் கடித்து இரத்த ஓட்டத்தில் பாக்டீரியாக்களை மனித உடலுக்குள் செலுத்துவதன் மூலம் இது பரவுகிறது. கடந்த 6.7.2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட டைம்சு ஆப் இந்தியா இதழில் மரபணுநோய்கள் மூலம் இந்தியர்க்கு உண்டாகும் மோசமான பாதிப்பு (Indian worst hits by genetic diseases) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்டுரையில் உலக அளவில் அனைத்து நாடுகளையும் விட விலங்கினின்றும் மனிதனுக்கு தாவவல்ல நோயால் மிக அதிகமாக பாதிப்பும் மரணங்களும் இந்தியாவில்தான் அதிகம் நடக்கிறது என்றும். இதில் உலகிலேயே இந்தியாதான் முதலிடத்தில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய மாநில அரசுகள் விலங்குகளிலிருந்து பரவும் நோயைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறர்கள் மலைவாழ்மக்கள்.
ஆதாரங்கள்
1.] 8.12.2010 டைம்சு ஆப் இந்தியா பத்தி 1 வரி 25
2.] 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சூனியர் விகடன் வாரமிருமுறை
3.] 27.2.2006 ஆம் ஆண்டு வெளிவந்த குமுதம் ரிப்போர்டர் வாரமிருமுறை
4.] 25.6.2006 ஆம் ஆண்டு வெளிவந்த தினகரன், தினமலர், தமிழ்முரசு, தினமணி, தினத்தந்தி, டைம்சு ஆப் இந்தியா
5.] 27.6.2006 ஆம் ஆண்டு வெளிவந்த தி இந்து.
Leave a Reply