நடுகற்கள் – பாதுகாப்பும் பேணுகையும் 2 : ச.பாலமுருகன்
(ஆனி 22, 2045 / சூலை 06, 2014 இதழின் தொடர்ச்சி)
நடுகற்கள் முதலான மரபுச்சின்னங்களைப் பாதுகாப்பதும் அவற்றை முறையே பேணுவதும் அரசாங்கத்தின் கடமை என்றாலும் அரசாங்கமே அனைத்தையும் பேண முடியாது என்பதே உண்மை. எனவே, வரலாற்று ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்க முடியும்.
வரலாற்று ஆர்வலர்கள் செய்யவேண்டியன:
- மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் ஏற்படுத்துதல்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மாவட்டத்தில் உள்ள வரலாற்று ஆர்வலர்களைக் கொண்டு வரலாற்று ஆய்வு மையம் அமைக்கவேண்டும். இம்மையம் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், ஆர்வலர்களைக் கொண்டு அமைக்கப்படவேண்டும்.
- இம்மையம் இம்மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொல்லியல் சார்ந்த இடங்களைப் பார்வையிட்டு அத்தொல்லியல் களங்கள் தற்போது எவ்வாறு இருக்கின்றன என்பது பற்றிய அறிக்கை தயார் செய்யவேண்டும்.
- மாவட்ட மையமானது ஒருங்கிணைப்பாளர் ஒருவரும், ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு பொறுப்பாளளரையும் கொண்டு ஏற்படுத்த வேண்டும். மற்றவர்கள் இம்மையத்தின் உறுப்பினராக இருப்பார்கள்.
- இவர்கள் பணி அம்மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொல்லியல், வரலாற்று முதன்மை வாய்ந்த இடங்களைப் பார்வையிட்டு, அனைத்து வட்டப் பொறுப்பாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தி அறிக்கைகளை ஒன்றிணைக்க வேண்டும். அறிக்கையின் தன்மையைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
- மாநில அளவிலான மையத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கவேண்டும்.
- மாவட்டத்தில் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்கள் (நடுகற்கள், கோட்டைகள், சிலைகள், பழைய மண்டபங்கள், இராச பாட்டை மற்றும் பல) பற்றிய கணக்கெடுப்பு
தமிழகம் எங்கும் வரலாற்று நினைவுச்சின்னங்கள், தொல்லியல் சின்னங்கள், கல்வெட்டுகள், சிலைகள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான சின்னங்கள், பொருட்கள் விரவிக்கிடக்கின்றன. இவற்றில் வரலாற்று முதன்மை கொண்டவை எவை, அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது, அவற்றைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள்,
கோட்டைகள்/அரண்மணைகள்
தமிழகமெங்கும் பல கோட்டைகள் உள்ளன. அவை பெரும்பான்மையானவை அரசு பேணுகையில் (இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம், தமிழகத் தொல்லியல் ஆய்வு நிறுவனம்) இருக்கும். சில கோட்டைகள், பேணப்படாமல் கவனிப்பாரற்றுக் கிடக்கும். சில கோட்டைகளின் எஞ்சிய பகுதிகள் மட்டுமே இருக்கும். இது மாதிரியான பகுதிகளைக் கண்டறிந்து அதன் முதன்மையை அருகில் உள்ளவர்களிடமும் வரலாற்று ஆய்வாளர்களிடம் கேட்டறிந்து அவற்றைப் பற்றிய தகவல்களைத் தொகுக்க வேண்டும்.
மண்டபங்கள்
தமிழகத்தின் நெடுஞ்சாலைகளையொட்டி நிறைய மண்டபங்கள் காணப்படுகின்றன. இவை ஒரு காலத்தில் இராச பாட்டையில் சாலையை ஒட்டி அமைக்கப்பட்ட மண்டபங்கள், இம்மண்டபங்கள் அக்காலத்தில் பொதுமக்களுக்கும், அரசர்களுக்கும் ஒய்வெடுக்கும் இடமாக திகழ்ந்துள்ளன. இவை பெரும்பான்மையும் இன்று பயன்படுத்தும் நிலையில் இல்லை. இவை இடிந்து விழக்கூடிய விதத்திலும், சில இடிந்து விழுந்தும் காணப்படுகின்றன. இவற்றைச் சரிசெய்து வேலியிட்டுப் பாதுகாக்கலாம். அல்லது அருகில் உள்ள சாமி சிலைளைக் கொண்டுவந்து அம்மண்டபத்தில் வைத்துவிட்டால் அது ஒருவகையில் வழிபாட்டுத்தலமாக மாறும். இயல்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் பேணுகைக்கும் உள்ளாகும்.
கல்திட்டை/தாழி
இறந்தவர்கள் நினைவுச்சின்னங்கள், கல்திட்டைகள், முதுமக்கள் தாழி, போன்றவைகள் பாதுகாக்கப்படாமல் உள்ளன. இவற்றையும் கள ஆய்வு செய்து இப்பகுதியில் சுற்றிலும் வேலியிட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பீரங்கிகள்
மொகலாயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், சுல்தான் காலத்து பீரங்கிகள் எனப் பலவகைப்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை கண்டுபிடிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. தேவிகாபுரம் அருகில் உள்ள நரசிங்கபுரம் என்ற சிற்றூரில் ஒரு பீரங்கி காணப்படுகிறது. இது பாதி அளவே உள்ளது. தற்போது உலைக்களத்தில் இரும்பு அடிக்கும் இடத்தில் பயன்பட்டு வருகிறது. இது போல வேறு பல இடங்களிலும் இது போன்ற அரிய பொருட்கள் இருக்கலாம் இவற்றையும் கண்டறிந்து வெளிக் கொணரலாம். மேலும், பீரங்கிக்குப் பயன்படுத்தப்படும் பீரங்கிக் குண்டுகளும் பல இடங்களில் காணலாம். அவற்றையும் பாதுகாக்கவேண்டும்.
நடுகற்கள்
- ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போது நடுகற்கள் ஊரின் அருகில் அமைந்துள்ள வயல்வெளி, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளின் அருகில் அமைந்துள்ளன. அவை உரிய பாராமரிப்பிற்கு கொண்டு வரப்படவேண்டும்.
- நடுகற்களை வரலாற்று ஆர்வலர்கள் எளிதாக இனம் கண்டு தெரிந்து கொள்வதற்குப் போதிய பயிற்சி அளிக்க வேண்டும்.
- நடுகற்களைக் கண்டறிந்து அவற்றைப்பற்றிய குறிப்புகளை ஒளிப்படங்களுடன் தொகுக்கவேண்டும். (இணைப்புப் படிவங்கள்)
- நடுகற்கள் அமைந்துள்ள இடங்களைப்பற்றி உள்ளூர் மக்களிடம் உசாவி அறிய வேண்டும். அவ்வூரில் அவர்கள் நடுகற்களை எவ்வாறு அழைக்கிறார்கள், அவற்றைப்பற்றிய கதைகள் ஏதாவது உண்டா? என்ற வகையில் உசாவி அவை பற்றிய குறிப்புகளை எழுதவேண்டும்.
கல்வெட்டுகள்
கல்வெட்டுகள் பெரும்பான்மையும் கோயில்களிலும் அவை சார்ந்த இடங்களிலும் இருக்கும். சில இடங்களில் கல்வெட்டுகள் பயிர் செய்யும் நிலங்கள், பாறைகள், குடவரைகள் போன்ற இடங்களிலும் இருக்கின்றன. இவையும் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் உள்ளன. இவற்றையும் இனம் கண்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(எ-டு): தேவிகாபுரம் அருகில் உள்ள நரசிங்கபுரத்தில் பயிர்செய்யும் நிலத்தின் நடுவே உள்ள கல்வெட்டு, இது நிலத்தின் உரிமையாளர் மனம் வைக்கும் வரையே இருக்கும்.
இது தேவிகாபுரம் அருகில் உள்ள செய்யானந்தல் ஊரில் உள்ள பாறைக்கல்வெட்டு, ஒதுக்கப்பட்ட காடுகளுக்கு நடுவே உள்ளது. இதுவும் பாதுகாக்கப்படவேண்டும்.
குளங்கள்
தமிழ்நாட்டில் பொதுமக்களின் நீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு பல ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள் அரசர்கள் காலத்திலேயே வெட்டிவைக்கப்பட்டு அவை பொதுமக்கள், கால்நடைகளின் குடிநீருக்கும், வேளாண்மைப்பயன்பாட்டிற்கும் பயன்பட்டுவந்தன. தற்போது இந்த நீர்நிலைகள் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் பரப்பு குறைந்தும் நீர்வரத்து குறைந்தும் வறண்டு காணப்படுகின்றன. இவ்வாறான ஏரி மற்றும் குளங்களிலும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன. மதகுகள், படிக்கட்டுகள், மண்டபங்கள் போன்றவற்றிற்கும் முதன்மை கொடுத்துப் பாதுகாக்க வேண்டும்.
ச.பாலமுருகன் துணை வட்டாட்சியர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருவண்ணாமலை கைபேசி – 9047578421 மின்வரி balu_606902@yahoo.com
Leave a Reply