நமக்குரிய மொழிக் கொள்கை – சி.இலக்குவனார்
நமக்குரிய மொழிக் கொள்கை
உரிமைநாட்டில் அந்நாட்டு மொழியே அந்நாட்டு மக்கள் கருத்தை அறிவிக்கும் கருவியாகப் பயன்படும். செருமன் நாட்டையோ ஆங்கில நாட்டையோ எடுத்துக் கொண்டால் அந்நாடுகளில் அந்நாட்டு மொழிகள்தாம் எல்லாவற்றுக்கும் என்பது யாவரும் அறிவர். ஆட்சித்துறை, அரசியல் துறை, கல்வித்துறை, சமயத்துறை, பண்பாட்டுத்துறை முதலிய யாவற்றுக்கும் அந்நாட்டு மொழி ஒன்றேதான். ஆகவே தேசியமொழி, ஆட்சிமொழி, தொடர்பு மொழி, கல்விமொழி சமயமொழி, எல்லாம் ஒரே மொழிதான். ஆனால் இங்கு நமக்கோ தேசியமொழி, சமயமொழி, எல்லாம் வெவ்வேறாக அமைகின்றன.
தேசியமொழி இந்தியாம், ஆட்சிமொழி ஆங்கிலமாம், சமயமொழி ஆரியமாம், பாட்டுமொழி தெலுங்காம், வட்டாரமொழி தமிழாம். என்னே விந்தை! தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும். முழு உரிமை பெற்ற நாளாகும். தமிழர்க்குத் தேசிய மொழியும், கல்வி மொழியும், தொடர்பு மொழியும், பாட்டு மொழியும் தமிழாகவே இருத்தல் வேண்டும். இவ்வாறு கூறுவதனால் வேற்று மொழிகளைத் தமிழர் கற்கக்கூடாது என்று கூறுவதாகக் கருதிட வேண்டா. வாய்ப்பும் வசதியும் தேவையும் இருந்தால் எத்துணை மொழிகள் வேண்டுமானாலும் ஒருவர் கற்கலாம். அதற்கேற்ப வசதிகளைச் செய்து தரவேண்டியது அரசின் பொறுப்பாகும். ஆனால் வேண்டாதார் மீது அவர் விரும்பாத வகையில் வேற்றுமொழிகளைக் கற்கவும் தம் மொழியை மறக்கவும் கூடிய திட்டத்தைச் சுமத்துதல் கூடாது. தமிழர்க்கு எல்லாம் தமிழ்தான் என்று கூறுவது ஒற்றுமைக்குக் கேடு பயக்கும் என்று சிலர் கருதலாம். அது தவறு. அவரவர்க்குரிய மொழியை அவரவர் போற்றுவதனால் ஒருநாளும் ஒற்றுமை கெடாது. ஒற்றுமையை உண்டு பண்ணுவதும் கெடுப்பதும் மொழியே என்பது முற்றிலும் பொருந்தாது. உள்ளப் பண்பால்தான் ஒற்றுமை ஏற்படும். ஆகவே ஒரு மொழிக் கொள்கையால்தான் ஒற்றுமை உண்டாகும் என்ற தவறான கொள்கையை விடுத்தலே நன்று.
பாரதக் கூட்டரசில் பல மொழி பேசும் நாடுகள் கூடியுள்ளன. கூட்டரசின் ஒற்றுமை வலிமையுற ஒரு பகுதிக்குரிய மொழிதான் ஆட்சிமொழியாக, தொடர்புமொழியாக இருக்க வேண்டுமென்று கூறுவது கூட்டரசுக் கொள்கைக்கே ஊறுபயப்பதாகும். ஒற்றைத் தனியரசை விரும்புவோர்தாம் ஒரு மொழிக் கொள்கையை வலியுறுத்துவர். பல நாடுகளின் கூட்டமைப்பில் எங்ஙனம் ஒரு பகுதியின் மொழியை மட்டும் ஏற்றுக் கொள்ள இயலும். ஆதலின் நம் பாரதக் கூட்டரசு என்றும் கூட்டரசாக வலிமை பெற்ற அரசாக கூட்டமைப்பில் சேர்ந்துள்ள பகுதிகளின் தேசிய மொழிகட்கு இடம் கொடுக்க வேண்டும். பாரதக் கூட்டரசு அமைப்பில் தமிழுக்கும் சமநிலை அளித்தல் வேண்டும். கூட்டரசின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக – கூட்டரசுத் தேர்வு மொழிகளுள் ஒன்றாகத் தமிழும் அமைந்தால்தான், தமிழர்க்கும் தமிழ்நாட்டுக்கும் உலக அரங்கிலும் மதிப்பு ஏற்படும். கூட்டமைப்பிலும் சரிசமமாகப் பழக இயலும். இன்றேல் பின்நிலையில் இரண்டாம் நிலைக் குடிமகனாகவே வாழ வேண்டிய நிலை தானே உறுதியாகிவிடும். ஆகவே மொழிக் கொள்கையை வகுப்பவர்கள் தமிழுக்கும் ஏனைய மாநில மொழிகட்கும் உரிய பங்கை உரிமையைத் தரும் வகையில் திட்டம் தீட்ட அன்போடு வேண்டுகின்றோம்.
செந்தமிழ்ச்செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்
குறள்நெறி : சித்திரை 3, 1996: 15.04.1965
Leave a Reply