நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி!
நாடாளுமன்றத்தில் நரேந்திர(மோடியின்) பாசக அரசிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் எண்ணிக்கை அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மாநிலத் தன்னாட்சி எழுச்சி அடிப்படையில் வெற்றியே கிட்டியிருக்கிறது.
“நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது எண்ணிக்கை அடிப்படையிலான விளையாட்டு அல்ல; மத்திய அரசின் தோல்விகளை மக்களுக்கு வெளிப்படுத்த எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும்” என்று முன்னமே பேராயக்கட்சி(காங்கிரசின்) மூத்தத் தலைவர் ஆனந்து (சருமா) தெரிவித்திருக்கிறார். அப்படியானால் தீர்மானம் அடிப்படையில் உரையாற்றிய எதிர்க்கட்சிகள் மத்திய ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த அளவில் இது வெற்றிதானே!
பாசகவின் தேதிய மக்கள்நாயகக் கூட்டணியில் இணைந்திருந்த தெலுங்கு தேசக்கட்சி தன் மாநிலமான ஆந்திராவிற்குச் சிறப்புத் தகுதி தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றே கூட்டணியில் இருந்து விலகியது; நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவந்தது. அவ்வாறு கொண்டு வந்த தெலுங்கு தேசக் கட்சி இந்திய அளவிலான சிக்கல்களையும் போதிய அளவில் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் மாநில நலன்பற்றியே பேசியுள்ளமையால் மாநில நலன்கள் இந்திய அளவில் முதன்மை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத் தன்னாட்சியின் எழுச்சிக்கான வெற்றியாக இதைக் கருதலாம்.
மக்களவையில் மொத்தம் 545 உறுப்பினர் இடங்கள் உள்ளன. இவற்றுள் 11 இடங்கள் காலியாக உள்ளன. எஞ்சிய 534 பேர் கொண்ட அவையில் அவைத்தலைவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டார். எனவே 533 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், பாசகவிற்கு ஆதரவான சிவசேனா, பிசு சனதா தள உறுப்பினர்களே வாக்கெடுப்பைப் புறக்கணித்ததால் 451 உறுப்பினர்கள்தாம் இருந்தனர். இதுவே பாசகவின் சரிவு நிலையை உலகிற்கு உணர்த்தி விட்டது. அதிகாரத்தில் உள்ளதால் வெற்றியைக் காத்துக் கொண்டதே தவிர உண்மையில் பாசக செல்வாக்கு கரைந்து கொண்டுள்ளது என்னும் உண்மையை வெளிப்படுததியதில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றுவிட்டது.
தெ.தே. நா.உ. செயதேவு(கல்லா) கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரப்பகுப்பே நடுநிலை தவறியதாக உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்த தெலுங்குதேசம் கட்சிக்கு 13 நிமையங்கள் ஒதுக்கப்பட்டன. தீர்மானத்திற்கு ஆதரவான காங்கிரசிற்கு 38 நிமையங்களும் திரிணாமூல் காங்கிரசுக்கு 15 நிமையங்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால் பாசக ஆதரவுக் கட்சியான அதிமுகவுக்கு 29 நிமையங்கள் ஒதுக்கப்பட்டன. ஆளும் கட்சியான பாசகவுக்கு 3 மணி நேரம் 33 நிமையங்கள் ஒதுக்கப்பட்டன. பெரும்பான்மை எண்ணிக்கையில் அதிகாரத்தில் இருந்தபொழுதும் பாசகவிற்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கிலியை ஏற்படுத்தியுள்ளது புரிகிறது. அந்த அளவில் தீர்மானம் வெற்றிதான். ஆட்சி நிலைப்பிற்காக அடிமையாக இருக்கவேண்டிய கட்டாயச் சூழல் அதிமுகவிற்கு. இருப்பினும் அதிமுக உறுப்பினர்கள் பாசக அரசிற்கு எதிராகவே உரையாற்றினர். எனவே வாக்கெடுப்பில் பாசகவிற்கு ஆதரவாக வாக்களித்தாலும் வாக்குரையில் எதிராக இருந்தமை தீர்மானத்திற்கு வெற்றிதானே!
அதிமுக மக்களவைக் குழு தலைவர் வேணுகோபால் “மத்திய அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால் இந்த அரசைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்” என எச்சரித்ததும் அதிமுக நா.உ.செயவர்தன் மாநிலக் கோரிக்கைளை முன் வைத்ததும் பாசகவின் செயல்பாடின்மையை வெளிப்படுத்திய அளவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு வெற்றிதான்.
“சொந்தக் கட்சியினரே இந்த ஆட்சியை விரும்பவில்லை” என்னும் உண்மையை உலகறிய சமாசுவாதிததலைவர் முலாயம்(சிங்கு யாதவு) பதிந்துள்ளதும் தீர்மானத்திற்கு வெற்றிதான்.
காசுமீர் முன்னாள் முதல்வர் பரூக்கு அப்துல்லா. திரிணாமுல் காங்கிரசு நா.உ.சுகதாராய்., நா.உ. தினேசு திரிவேதி, ஆம்ஆத்மி நா.உ. பகவந்துமான் எனப் பிறரின் பாசக குறித்த உரைகள் நாட்டுமக்கள் உணர்வை மக்களுக்கு வெளிப்படுத்திய அளவில் வெற்றிதான்.
இராகுல்(காந்தி) தன் உரையை முடித்ததும் நரேந்திரரைச் சென்று தழுவியதைக் குறையாகக் கூறுகின்றனர் ஆளுங்கட்சியினர். அடுத்தவர் உரையாற்றும் பொழுது அவர் செல்லவில்லை. தன் உரையை முடிக்கும் தறுவாயில்தான் அவர் இருக்கைக்குச் சென்றுள்ளார். திடீர்த் திட்டமிட்டு பாக்கித்தான் சென்று அந்நாட்டுத் தலைமையமைச்சரைக் கட்டித்தழுவிய நரேந்திர(மோடியின்) செயலைப் பாராட்டியவர்கள் இதைக் குறை சொல்வது ஏற்கத்தக்கதல்ல. அவரது உரையும் பேசும் பாங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது; பாசகவிற்கு எதிரான தலைமையானது இராகுல் அல்லது காங்கிரசு அல்லாத் தலைமை என்ற முயற்சிக்கு எதிராகத் திருப்பி விடும் வகையில் இருந்தது.
அதிவீரராம பாண்டிய மன்னன் வெற்றிவேற்கை என்னும் இலக்கியத்தில்,
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய் போலும்மே; மெய்போலும்மே
எனப் பொய்யர்கள்பற்றிக் கூறியிருக்கிறார். அதற்குச் சான்றாகத் தலைமையமைச்சர் நரேந்திர(மோடியின்) மறுமொழி உரை அமைந்தது. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதலைவர் அல்லர். அவ்வாறிருக்க 125 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னை அகற்ற யாருக்கும் உரிமை இல்லை என்று பேசி, அனைத்து மக்கள் தலைவராகப் பொய்வேடமிடுவது தவறு. அவர் பேச்சு முறை சிறப்பாக இருந்தது. ஆனால், பேச்சில் உண்மையின்மையால் சிறப்பான உரையாக அமையவில்லை. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குச் சரியாக மறுமொழி அளிக்க இயலாமல் சமாளிப்பில் நேரம் கடத்தியதும் நம்பிக்கை யில்லாத் தீர்மானத்திற்கு வெற்றிதான்.
நான்காண்டுகளில் நாடாளுமன்றத்திற்கு 19 நாள் மட்டும் வருகை தந்து சில மணிநேரம் மட்டுமே தலை காட்டியவர் உலகம் சுற்றும் நரேந்திர(மோடி). அவரை நாள் முழுவதும் அவையில் இருக்கச் செய்ததே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றிதானே!
தன் செல்வாக்கு தேய்வதைப் பாசக உணர்ந்து தன் மக்கள்நலன்களுக்கு எதிரான செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டால் அதற்கும் வெற்றியாக அமையும்.
ஆனால், இந்திய அளவிலான எக்கட்சியாயினும் அக்கட்சி தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் எதிராகத்தான் நடந்து கொள்கின்றன. இதை எதிர்த்துத் தமிழகக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதில்லை. ஆந்திர மாநில நலன்களுக்காகத் தெலுங்கு தேசம் குரல் கொடுத்த இந்நிகழ்வைப்பார்த்த பின்னராவது தமிழகக் கட்சிகள் மனம் மாறினால் நமக்கு இது வெற்றிதான்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். (திருவள்ளுவர், திருக்குறள் 505)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை, அகரமுதல
Leave a Reply