நம் எண்களை அறியாமல் இருக்கலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
நம் எண்களை அறியாமல் இருக்கலாமா?
தமிழ் எண்கள் என்றால் என்ன? தமிழர்களாகிய நாம் தமிழில் பயன்படுத்தும் எண்கள்தாம் தமிழ் எண்கள். அப்படி என்றால் இப்பொழுது பயன்படுத்தி வரும் 1,2,3, முதலான வரிசை எண்கள் தமிழ் இல்லையா? அரபி எண்கள் என்று சொல்லப்பட்டாலும் தமிழ் எண்களில் இருந்து உருவான அவை உலக எண்களாக மாறி விட்டன. அப்படி என்றால் அவற்றைப் பயன்படுத்தினால் என்ன தவறு? அவற்றைப் பயன்படுத்தினாலும் நம் மொழிக்குரிய நம் எண்களைப் புறக்கணிக்கக் கூடாது அல்லவா? பிற மொழியினர் அவ்வாறு தத்தம் மொழி எண்களைப் பயன்படுத்தும் பொழுது நாம் மட்டும் தமிழ் எண்களை விலக்கி வைப்பது தவறல்லவா? இந்தியாவில் உள்ள பிற மொழியினர் அன்றாடப் பயன்பாட்டில் கூடத் தங்களுடைய மொழி எண்களைப் பயன்படுத்தி வருகின்றனர். நாம் நம் எண்கள் என்ன என்று தெரியாமல் இருப்பது நமக்கு இழுக்கல்லவா? எனவே, நம் எண்களை நாம் அறிவோம்!
தமிழ் எண்களைக் குறிப்பிடும் பாடல்கள் தமிழில் உள்ளன. அவற்றுள் பலராலும் எடுத்துக்காட்டாகக் கூறப்படுவது கம்பர் கால ஒளவையார் பாடிய பாடல் ஒன்று. அப்பாடல் ‘எட்டேகால் இலட்சணமே’, எனத் தொடங்கும். தமிழில் எட்டு என்பதை ‘அ’ என்னும் எழுத்தாலும் கால் என்பதை ‘வ’ என்னும் எழுத்தாலும் குறிப்பர். எனவே எட்டே கால் இலட்சணம் என்றால் அவலட்சணம் என்றாகிறது. பாடல்களில் மட்டுமல்ல அன்றாடப் பயன்பாடுகளிலும் தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.
தமிழில் ஒன்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கங்களும் மேல்வாய் இலக்கம் எனப்பட்டன. கோடி என்றால் கடைசி என்று பொருள். இப்பொழுதும் கோடி வீடு, கடைக்கோடியில் என்றெல்லாம் நாம் பயன்படுத்துகிறோம். முன்னொரு காலத்தில் கோடி என்பதே கடைசி எண்ணாக இருந்துள்ளது. பின்னர் மிகுதியான பல எண்கள் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. அவற்றை எண்ணால் குறிக்காமல் எழுத்தால் குறித்துள்ளனர். அவ்வாறு பேரெண்களைத் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்ற முறையில் குறிப்பிட்டதை உணர்த்தும் வகையில் தொல்காப்பிய நூற்பாவும் உள்ளது.
சங்க இலக்கியமான பரிபாடலில் நெய்தல், சங்கம், கமலம் முதலிய பேரெண்கள் குறிக்கப்படுகின்றன.ஒன்றுக்குப் பிறகு 52 சுழியன்களை அல்லது சுன்னங்களைச் சேர்த்துக் குறிப்பிடும் பேரெண் பூரியம் எனப்பட்டது. இப்பொழுது 1 இற்கு அடுத்து 20 சுழிகள் உள்ள எண்ணைப் பூரியம் எனக் குறித்துக் குறிப்பிட்டு வருகின்றனர். இது தவறாகும்.
ஒன்றுக்குக் கீழ்ப்பட்டவை கீழ்வாய் இலக்கங்கள் எனப்பட்டன.
அவை ஒன்றுக்குப் பின்னே இருப்பதால் பின்னம் எனப்பட்டன. அவை இருவகையாகப் பகுக்கப்பட்டன. ஒன்று என்னும் முழு எண்ணை இரண்டு இரண்டாகப் பகுத்துப் பயன்படுத்தும் முறைமை ஒன்று. இப்பகுப்பு, அரை – ½, கால் – ¼, அரைக்கால் – 1/8, வீசம் அல்லது மாகாணி – 1/16, அரைவீசம் – 1/32, கால்வீசம் – 1/64, அரைக்கால்வீசம் – 1/128, என்ற வகையில் அமையும்.
மற்றொரு பகுப்பு முறைமை ஒன்று என்னும் முழுமையான எண்ணை ஐந்தாகப் பகுத்து அதன் பின்னத்தை இரண்டிரண்டாகப் பகுத்துக்கொண்டு சொல்வது. இதில் நான்மா – 1/5, இருமா – 1/10, ஒருமா – 1/20, அரைமா – 1/40, காணி – 1/80, அரைக்காணி – 1/160, முந்திரி – 1/320, எனப் பின்னத்தின் பெயர்கள் அமையும். இத்தகைய பின்னங்களும் தமிழ் எண்களால் குறிக்கப்பட்டிருந்தன. அதுவே, தமிழுக்கு உள்ள சிறப்பு.
தமிழில் கணக்கியலை விளக்கும் வகையில், ஏரம்பம், சினராலயம், கணித இரத்தினம், சிறு கணக்கு முதலிய பல நூல்கள் முன்பு இருந்துள்ளன. இன்றும் கணக்கதிகாரம், ஆத்தான கோலாகலம், கணித தீபிகை ஆகியவை இருக்கின்றன.
தமிழ்க்கணக்கு நூல்களில் தமிழ் எண்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டில் வெளிவந்த பின்ன வாய்ப்பாட்டிலும்தமிழ் எண்கள்தாம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த எல்லைக் கற்களிலும் தமிழ் எண்கள் குறிக்கப்பட்டு வந்தன. ஆனால் இந்தியர் ஆட்சியில் அவை காணாமல் போயின. ஆங்கிலேயர் ஆட்சியில் பணத்தாள்களில் தமிழ் எண்கள் இருந்தன. இன்றும் மொரிசீயசு பணத்தாளில் தமிழ் எண் உள்ளது. ஆனால் இந்தியர் ஆட்சியில் பணத்தாளில் தமிழ் எண்கள் தொலைக்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழுக்கு இருந்த முதன்மை, இந்தியர் ஆட்சியில் இல்லாமல் போனது. அப்படி என்றால் இந்தியாவில் தமிழும் தமிழரும் இல்லையா?
இருபத்து மூன்று என்றாலும் உ(இரு) ௰ (பத்து) ௩ (மூன்று) உ௰௩ என்றும் இருநூற்று இருபத்து ஏழு என்பது உ௱உ௰எ எனவும் முன்னர்க் குறிப்பிட்டனர்.
உரோமன் முறையும் இவ்வாறுதான் ஆனால் உரோமன் முறையில் மாற்றம் செய்தால் எண்மதிப்பு மாறும். சான்றாக 15 என்பது I என்பதையும் என்பதையும் V சேர்த்து IV எனக் குறிப்பிட்டால் ‘4’ என ஆகிறது. X என்பதையும் என்பதையும் V சேர்த்து XV என எழுதினால்தான் எண் மதிப்பு சரியாக அமையும் ஆனால் தமிழில் இடமதிப்பிற்கு ஏற்க ‘கரு’ என எழுதினால் மதிப்பு மாறாது. எனவே இவ்வழக்க முறையையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பத்திரப்பதிவு முதலான ஆவணங்களில் பழைய முறைபின்பற்றப்பட்டு வந்துள்ளதை உணர்ந்து அவ்வெண்களை நாமும் அறிந்து பின்பற்ற வேண்டும்.
௦(0), ௧(1), ௨(2), ௩(3), ௪(4), ௫(5), ௬(6), ௭(7), ௮(8), ௯(9), ௰(10)
என்பனவே, சுன்னம் அல்லது சுழியம் முதல் பத்து வரையிலான தமிழ் எண்கள். இவ்வெண்களிலிருந்தே இன்றைக்குப் பயன்படுத்தும் அடைப்பிற்குள் குறிப்பிட்டுள்ள 0 முதல் 10 வரையிலான அடிப்படை எண்கள் உருவாயின. பின் வரும் படம் தமிழ் எண்கள் எவ்வாறு உலக எண்களாக மாறியுள்ளன என்பதைக் காட்டும்.
பத்திற்கு மேல்,
௰௧(11), ௰௯(19), ௨௰(20), ௨௰௧(21) …..௯௰௯(99), ௱௧ (101)… ௯௱ (900), ௲ (1000), ௲ ௱(1100), ௲௯௱(1900), ௨௲(2000), …. ௯௲(9,000), ௰௲(10,000), … ௯௱௲(90,000), ௱௲(100,000) ௱௱௲(100,00,000)
என்பனபோல் எழுத வேண்டும். அஃதாவது அறுபத்து ஏழு என்றால் ஆறு பத்தும் ஏழும் என்பதுபோல் ஆறு பத்தைக்குறிப்பிட்டு ஏழைக் குறிக்க வேண்டும். எண்பதாயிரத்து எட்டு என்றால் எட்டுபத்துஆயிரமும் எட்டும்என்பதுபோல் குறிக்க வேண்டும். அறுபதில் ஆறு பத்துகள் உள்ளமையையும் எண்பதாயிரத்தில் எட்டு பத்தாயிரம் உள்ளமையையும் குறிப்பதுபோல் எல்லா எண்களையும் விரித்துக் கூற வேண்டும்.
பத்து முதலான தமிழ் எண்கள் எழுகையில் இரண்டு நூற்றாண்டுகளாக உலக நடைமுறை பின்பற்றப்படுகிறது. ‘௰’ என்பதே ‘10’ ஆகும். ஆனால் பலர் ‘க0’ என்றே குறிக்கின்றனர். ‘௰’ எனக் குறிப்போரும் 11 முதல் கக, உ௩, ௪அ என்பன போன்று பயன்படுத்துகின்றனர். அஃதாவது பத்து ‘௰’ வர வேண்டிய இடத்தில் ஒன்றைக்/’ க’ குறிக்கின்றனர். இருபது, முப்பது, நாற்பது முதலானவை வரும் இடங்களில் பத்து எண்ணை விலக்கி விட்டு இரண்டு, மூன்று, நான்கு என்பனபோல் குறிக்கின்றனர்.
கீழ் வாய் இலக்கம்
இவைபோன்ற பெருமதிப்பிலான எண்களும் மிகவும் குறைந்த மதிப்பிலான பின்ன எண்களும் வேறு எம்மொழியிலும் நடைமுறையில் இல்லை. இதன்மூலம் பழந்தமிழரின் கணக்கு அறிவியல் தலைசிறந்து இருப்பதை உணரலாம்.
மேலும் சுழி என்றும் குறிக்கப்படும் ‘0’ ‘சுன்னம்’ தமிழர்களின் கண்டுபிடிப்பே; பிற மொழிகளில் ‘சுன்ன’ என்பது போன்று மாறி அளிக்கப்படுகிறது.
பயன்பாட்டில் இல்லாத எதுவும் மறைந்தொழியும், எனவே தமிழின் வடிவங்களைப் பிரிவு எண்கள், துணை எண்கள், உட்பிரிவு எண்கள் போன்ற முறைகளில் பயன்படுத்தலாம்.
திண்ணைப்பள்ளிக்கூடங்களிலேயே பல்வகைக் கணக்குகளும் நீட்டலளவை, முகத்தலளவை, எண்ணிக்கை அளவை முதலலான பல வகை அளவை முறைகளும் பயிற்றுவிக்கப்பட்டன. அவற்றை நாம் தனியாக வேறொரு கட்டுரை மூலம் பார்ப்போம்.
அறிவியலுக்கு அடிப்படை கணக்கு என்பதால் கணக்கறிவியலில் உயர்நிலையுற்றிருந்த பழந்தமிழர் பிற அறிவியல் துறைகளிலும் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை.
இன்றைக்கு நாம் தாய்த்தமிழ் வாயிலான கல்வியையும் இழந்து தமிழர்க்குரிய கல்விமுறையையும் இழந்து அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறோம். இனியேனும் விழித்தெழுவோமா?
– இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, மார்ச்சு 17, 2020
ஆகா!… அற்புதமான கட்டுரை ஐயா!
எனக்குத் தமிழ் எண்கள் தெரியும். ஆனால் பழைய முறையில் அவற்றை எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பது தெரியாது. நீங்கள் கட்டுரையில் கீழ்வாய் இலக்கம் உட்தலைப்புக்கு முந்தைய பத்தியில் குறிப்பிட்டுள்ளது போல் ‘௰’-வுக்கு மாறாகப் புதிய முறையில் ‘0’-ஐப் பயன்படுத்தித்தான் தமிழ் எண்களைப் பயன்படுத்தி வந்தேன். அதாவது ௧௦, ௧௧, ௧௨ என்பது போல். தங்கள் கட்டுரை மூலம் பழந்தமிழர் எண்ணியல் முறையைக் கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி ஐயா!