நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்!

எண்ணிய இலக்கை அடைந்து வெற்றி காண வாழ்த்த வேண்டும். இலக்கை அடைந்து விட்டார் என்றால்  – வெற்றி கண்டுவிட்டார் என்றால்  – பாராட்ட வேண்டும். அந்த வகையில் இரண்டாம் முறையாகத் தலைமை யமைச்சர் பொறுப்பேற்கும் வகையில் வெற்றி கண்டுள்ள நரேந்திர(மோடி)க்குப் பாராட்டுகள்!

இலக்கு மட்டுமல்ல, இலக்கை அடையும் வழியும் நேர்மையானதாக – அறவழிப்பட்டதாக – இருக்க வேண்டும் என்பது தமிழர் நெறி. “எந்த வழியில் சென்றேனும் இலக்கை அடை” என்பது ஆரிய நெறி. இன்றைய தேர்தல் நெறி என்பது இரண்டாம் வகையைச் சேர்ந்தது. எனவே, பா.ச.க.வைமட்டும் குற்றம் கூறிப் பயனில்லை. தேர்தல் ஆணையத்தைக் கூட்டாளியாகச் சேர்த்துக் கொண்டது, வருமானவரித்துறை முதலான மத்திய அரசுத் துறைகளின் செயல்பாடுகளைத் தன் போக்கில் அமைத்து எதிர்க்கட்சியிினரையும் எதிர்ப்பவரையும் மிரட்டுவது, படைத்துறைச் செயல்பாட்டைத் தனிப்பட்ட வெற்றியாகத் திரித்துப் பரப்புவது போன்ற செயல்பாடுகளைப் பேராயக்(காங்.)கட்சி ஆட்சியிலிருந்தாலும் செய்திருக்கும். ஆள்வோருக்கு இப்படி வழிகாட்ட என்றே தன்னல அதிகாரிகள் இருக்கின்றனர். எனவே, பா.ச.க.வைமட்டும் குறை கூறிப் பயனில்லை.

பா.ச.க.ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே மகாராட்டிரக் கூட்டுறவு வங்கி ஊழல் முதலான பல ஊழல் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் நரேந்திர(மோடி) தனக்குத்தானே நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டு ஊழலற்ற கட்சி எனப் பா.ச.க.வையும் ஊழலற்றவர் எனத் தன்னையும் மக்கள் பாராட்டுவதாகப் பரப்புரை மேற் கொண்டார். உண்மை உறங்கியது; அவரது சொல்வன்மை வென்றது; ஆட்சிக்கட்டிலில் தொடர்கிறார்.

பணமதிப்பிழப்பிற்கு முன்னர், 2016 ஆகத்து முதல் நவம்பர் 8 வரை, பீகார், உ.பி., தில்லி, அரியானா, இராசசுத்தான் போன்ற பல மாநிலங்களில் பா.ச.க.வினர் கோடிக்கணக்கான பணத்தை வங்கி வைப்புக் கணக்குகளில் செலுத்தினர். அதன்பின்னரே பணமதிப்பிழப்பு அறிவிப்பு வந்தது. இதன் மூலம் பலகோடிக் கணக்கான பா.ச.க.வின் பணம் காப்பாற்றப்பட்டது.  இவ்வாறு விக்னேசு சய்சுவால்(தகவல்உரிமைச்சட்டப்போராளி,தில்லி) முதலான பலரும் மெய்ப்பித்தனர். திருமணம் முதலான ஆடம்பர விழாக்களைப் பா.ச.க.வினர் நடத்தினர். பா.ச.க.வினர் கணக்கின்றிப் புதிய பணத்தாள்களை மாலையாக அணிந்து கொண்டு படங்கள் எடுத்து வெளியிட்டனர். மக்கள் தாங்கள் பட்ட இன்னல்களையும் தங்களில் சிலர் மடிந்த துயரங்களையும் மறக்கும் வகையில்  நரேந்திர(மோடி) இனிமையாகப் பேசினார்; வெற்றி வாகை சூடினார்.

பணமதிப்பிழப்பால் தொழில்கள் நொடித்தன, வேலைவாய்ப்புகள் பறிபோயின.

சரக்கு-சேவை வரியால் ( G.S.T.) தொழில்துறை அழிவைச்சந்தித்தது.

மருத்துவப் பொதுத்தேர்வால் ஏழை மாணாக்கர்களின் கனவுகள் சிதைந்தன, அனிதாக்கள் இன்னுயிர் இழந்தனர்.

மத்திய அரசின் முதன்மைத் துறைகள் காவி வண்ணமாக மாற்றப்பட்டன.

வருமானவரித்துறை முதலான துறைகள் பா.ச.க.வின் ஏவல்படையாக்கப்பட்டன.

பா... ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளை அல்லல் படுத்தியது.

பதினைந்து நூறாயிரம் விலையிலான குப்பாயம்(கோட்டு) அணிந்து கொண்டு கூச்சமின்றி ஏழைத்தாயின் மகன் எனச் சொல்லி மக்களை ஏமாற்றி வருவது.

நம்நாட்டில் இருப்பதைவிடப் பிறநாடுகளில் மிகுதியான காலம் இருப்பது.

எனக் கணக்கிலடங்காக் குறைகள் இருப்பினும் அமித்துசா, நரேந்திர(மோடி) சிறப்பாகச் செயல்பட்டு  வெற்றியை ஈட்டியுள்ளனர்.

எனவே, 6 திங்களேனும்   புதிய அரசைக் குறை கூறாமல் அவர்கள் போக்கில் ஆளவிடவேண்டும். அதுதான் மக்கள் முடிவிற்கு அளிக்கும் மதிப்பாகும்.

அதேநேரம், நரேந்திர(மோடி) தன் கட்சிக்குவாக்களிக்காத மாநிலங்களைப் புறக்கணிக்காமல், அம் மாநில மக்கள் புறக்கணித்த காரணங்களை உணர்ந்து அவற்றைச் சரி செய்ய வேண்டும்.

அனைத்து இந்தியத் தேர்வு முறைகளை அகற்ற வேண்டும்.

இந்தி, சமற்கிருதத் திணிப்புகளைக் கைவிட வேண்டும்.

மக்கள் நலன்களுக்கு எதிரான செம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம், கூடங்குளம் அணுமின்னகம்,  நெடுவாசல் நீரகக் கரிமம் (Hydro Carbon) திட்டம் போல் நாடு முழுவதும் உள்ள மக்கள்அழிப்புத் திட்டங்களை ஒழிக்க வேண்டும்.

பா...வளர்ச்சிக்கான கருத்துகள் வருமாறு:

கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும் உடனிருந்த தோழமைக்கட்சித் தலைவர்களைப் புறக்கணித்ததுபோல இல்லாமல், தமிழகத் தோழமைக் கட்சித் தலைவர்களுக்குப் பதவிகள் வழங்க வேண்டும்.

பா.ச.க.வின் ஒற்றை உறுப்பினராக இருந்த பொன்.இராதகிருட்டிணனுக்கு அமைச்சர் பதவி வழங்காமல் அதிகாரமற்றத் துணை அமைச்சர் என்னும் பொம்மைப் பதவி வழங்கப்பட்டது. இம்முறை யாரும வெற்றி பெறாக் காரணம் அவர்கள் அல்லர். பா.ச.க.வின் கொள்கையே!  தமிழ்நாட்டுத் தோல்விக்குத் தமிழகத் தலைவர் தமிழிசை காரணமானவர் அல்லர். எனவே, இந்த அளவிற்காவது வாக்குகளைத் திரட்டித் தந்த தமிழிசைக்கு அமைச்சர் பதவியும் மாநிலங்களவை பதவியும் வழங்க வேண்டும்.

எச்.இராசாவைத் தமிழக அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும்.

ஆட்சியின் பொழுது ஒட்டிக் கொண்டிருப்பவர்களைப் புறக்கணித்துஉண்மையிலேயே பயன்பாராமல் உங்கள் கட்சிக்கென உழைக்கும் இதழாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் ஆகியோருக்குப் பதவிகள் அளித்துச் சிறப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வியும் தமிழ்மொழிக்கல்வியும் இருக்கும் கல்வித்திட்டத்தையே செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் முறையாகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.

இந்தியப்பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மத்திய அரசின் ஆட்சி மொழியாகத் தமிழை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஈழத்தமிழர் படுகொலைக்குகக்காரணமான இனக் கொலையாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே சிறந்தவர்” என்னும் பெயரைப் போக்கும் வண்ணம் வாய்மை வழியில் செயல்பட நரேந்திர(மோடி)யை வேண்டுகிறோம்.

பா.ச.க. நேர்மையான முறையில் வெற்றியை நிலைக்கச் செய்ய இவற்றில் கருத்து செலுத்துமாறு   நரேந்திர(மோடி), அமித்து சா இருவரையும் வேண்டுகிறோம்.

17 ஆவது நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை என்னும் மாபெரும் வெற்றி கண்ட இருவருக்கும் பாராட்டுகள்.

இரண்டாவது முறையாகத் தலைமையமைச்சர் பொறுப்பேற்பதற்கு நரேந்திர(மோடிக்கு) வாழ்த்துகள்!

இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியின் சோர்வு (திருவள்ளுவர், திருக்குறள் 531)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரைஅகரமுதல