நரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்!

 இரு நாள் முன்னர், இராசசுதான் மாநிலத்தில் தோங்கு (Tonk ) தொகுதியில் தேர்தல் பரப்புரையில் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர(மோடி) கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர், இந்தியாவில் இருந்து கொண்டு சிலர் பாக்கித்தான் மொழியில் பேசுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியை எல்லா ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. ஆனால் இப்பேச்சின் தீய நோக்கத்தை யாரும் கண்டிக்க வில்லை.

பாக்கித்தானில் பாக்கித்தான் மொழி என ஒன்றும் கிடையாது. அங்கே உள்ள பல மொழிகளில் பஞ்சாபி, பசுதூ(Pashto), சிந்தி, சராய்கி(Saraiki), உருது, பலூச்சி(Balochi) ஆகியன முதன்மை மொழிகளாகும்.

பாக்கித்தான் மொழி என்றால் உருது என எண்ணி நரேந்திரர் அவ்வாறு பேசியுள்ளார். இந்த அறியாமை மிக்கவர்தான் நம் நாட்டை வழி நடத்துகிறார் என்பது கொடுமையான ஒன்றாகும். இவர் மீண்டும் வந்தால் அதைவிடக் கொடுமை வேறு இல்லை.

அத்துடன் நிறுத்தவில்லை. பாக்கித்தான் மொழி பேசுவோர் தனக்கு எதிராகச் சதி செய்வதாகவும் பேசியுள்ளார். தனக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சதி செய்வதாகக் கூறியிருந்தால், எதிர்க்கட்சியினர் போராட்டங்களை அவ்வாறு கூறுகிறார் எனக் கருதலாம். அல்லது பொதுமக்களில் ஒரு பகுதியினர் சதி செய்வதாகக் கூறியிருந்தாலும், பண மதிப்பிழப்பு போன்ற இவரது திட்டங்களால் மக்களிடையே ஏற்பட்டுள்ள எதிர்ப்பைக் கூறியிருப்பதாக எண்ணலாம். அல்லது உட்கட்சியில் சதி இருப்பதாகப் பேசியிருந்தாலும்  தவறில்லை. இந்த அச்சத்தின் வெளிப்பாடுதான் அவரது பேச்சு. தன்னைப் பதவியில் இருந்து துரத்த சிலர் முயல்கிறார்கள் என்ற கவலையே அவரை இவ்வாறு பேச வைத்துள்ளது. ஆனால், பாக்கித்தான் மொழி பேசுவோர் என்று குறிப்பிட்ட மொழி பேசுபவர்களையும் அவர்கள் சார்ந்த சமயத்தையும்  – மதத்தையும் – கூறுவது நாட்டிற்கே கேடு நல்கும் அல்லவா?

பாக்கித்தானில மிகுதியாகப் பேசப்படும் மொழி பஞ்சாபியாகும்.  2008 கணக்கெடுப்பின்படி  ஏறத்தாழ  47.17 % பேர் பேசுகின்றனர். அடுத்ததாகப் பசுதூ மொழியை 15.44 %  மக்கள் பேசுகின்றனர்.

சராய்கி மொழியை 10.42 % மக்கள் பேசுகின்றனர். ஐந்தாவதாகப் பேசப்படும் உருது மொழியைப் பேசுவோர் 7.59%தான். ஆனால், பாக்கித்தானில் உருது மொழி மட்டும் பேசுவதாக எண்ணிப் பேசியுள்ளார் போலும். அல்லது உண்மை தெரிந்துதான் அவ்வாறு பேசினார் என்றால், உள்நோக்கம் கொண்ட தீவினைப் பேச்சாகும்.

உருது பாக்கித்தான் மொழி மட்டும் அல்ல. இந்தியாவின் அரசமைப்புச்சட்டப்படி அரசின் கரும மொழிகளுள் உருதும் ஒன்று. இந்தியாவில் 5.74 % மக்கள் தாய்மொழி உருது ஆகும்.

உருது பேசுவோர் எண்ணிக்கை இப்பொழுது 7.0 கோடி ஆகும்.

இந்தியாவில் பஞ்சாபி பேசுநர் 3.3 கோடி; சிந்தி மொழி பேசுநர் 2.77 கோடி

அப்படியானால் பாக்கித்தானில் வழங்கும் முதன்மை மொழிகளைப் பேசும் 13 கோடி இந்திய மக்களையும் அவற்றைப் பேசக் கூடாது என்கிறாரா? இந்தியக் குடிமக்கள் தங்கள் தாய் மொழிகளை, அதுவும் அரசமைப்புச் சட்டத்தால் ஏற்கப்பெற்ற தாய்மொழிகளைப் பேசுவதைக் கண்டிப்பதை  யாரும் கண்டிக்காதது ஏன்? அவர் பேச்சிற்கு முதன்மை தரவில்லையா? தேர்தல் வெற்றிக்காக இந்துக்கள் வாக்குகளைப் பெறுவதற்காக இப்படிப் பேசினால் இந்துக்கள் வாக்குகளும் கிடைக்காமல் போய்விடும் என்பதை அவர் உணர வேண்டும்.

அவர் போற்றும் இந்தி, இந்துத்தானிக்கும் உருதுக்கும் உள்ள தொடர்பை அவர் அறிவாரா? அப்படி என்றால் உருது கலந்த இம்மொழிகளையும் விரட்டி விடலாமே!

உருது பாக்கித்தான் நாட்டுமொழி மட்டுமல்ல. ஆப்கானித்தான், பஃகுரைன்(Bahrain), வங்காளத்தேதசம், போதுசுவானா (Botswana), பிசி(Fiji), செருமனி, கயானா(Guyana), இந்தியா, மலாவி(Malawi), மொரீசியசு(Mauritius), நேபாளம், நார்வே,  ஓமன், கத்தார் (Qatar), சவூதி அரேபியா (Saudi Arabia), தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து,  ஐக்கிய அரபு அமீரகம்(United Arab Emirates), ஐக்கியப் பேரரசு(United Kingdom), ஐக்கிய அமெரிக்கா, சாம்பியா(Zambia) நாடுகளிலும் உருது மொழி பேசுநர் உள்ளனர்.

உருது மொழி பேசுவோரைக் கண்டிக்கிறார் என்றால் அதனைத் தாய்மொழியாகவும் பேசுமொழியாகவும் கொண்ட இசுலாமியர்களைக் கண்டிக்கிறார் என்றுதான் பொருள். தேர்தல் நேரத்தில் மத வெறியைத் தூண்டும் வகையில் பேசுவது முறைதானா?

ஒரு வேளை தன் தாய் அமைப்பு தனக்கு மாற்றாக ஒருவரைத் தேடுவதால் தன்னை நிலைப்படுத்த இப்படிப் பேசுகிறாரா என்றும் தெரியவில்லை. நோக்கம் எதுவாயினும் பேசியது மிகப்பெரும் தவறு. அதற்கு அவர் வருத்தத்தைத் தெரிவித்து நற்பண்பை நிலை நாட்ட வேண்டும்.

உலகின் பல பகுதிகளில் பேசப்படும் மொழியாக உருது உள்ளதால் அந்த நாடுகளின் பகையை இந்தியாவிற்குத் தேடித் தரும் செயலாக இஃது அமையுமல்லவா? ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் அணிசேரா நிலையையும் வலியுறுத்தும் இந்திய அரசு இவ்வாறு தடம் புரள்வது நாட்டிற்கு நல்லதல்ல. தேர்தல் ஆணையம் இதுபோன்ற பேச்சுகளுக்குத் தடை விதிக்க வேண்டும்.

எனவே, பாசகவில் உள்ள கற்றறிந்தவர்கள், பாக்கித்தான் மொழி என்றால் என்ன என்பதையும் அவரது பேச்சு மொழி வெறி, மத வெறி தூண்டுதலாக அமையும் என்பதையும் விளக்குங்கள்.

வெற்றி பெற வேண்டும் எனக் கடுமையாக உழைக்கும் மாண்புமிகு நரேந்திர(மோடி)அவர்களே!

“நுணலும் தன் வாயால் கெடும்” என்னும் தமிழ்ப்பழமொழியினை உணருங்கள்! இந்தியத் துணைக்கண்டத்து ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் சொல்லாலும் எழுத்தாலும் செயலாலும் நிலையான வெற்றி காணமுடியாது என்பதை உணருங்கள்!

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.(திருவள்ளுவர்,திருக்குறள் 127)

 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல