http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/05/modi02-300x300.jpg

நரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்!

 

நரேந்திர(மோடி)யையும் அவர் சார்ந்த இராசுட்டிரிய சேவா சங்கம் என்னும் அமைப்பையும் இந்து   வெறி பிடித்தவர் என்றும் இந்து வெறி அமைப்பு என்றும் பலரும் கூறி வருகிறோம். உண்மையில் அவரோ அவர் சார்ந்த அமைப்போ இந்து சமய வளர்ச்சிக்கான குறியீடு அல்ல.

இத் துணைக் கண்டத்தில் எவ்வாறு பல்வேறு இன மக்களையும் இந்தியர் என அழைக்கிறார்களோ அதுபோல்தான் பல சமயங்களின் கூட்டே இந்து என்னும் சமயமும். எவ்வாறு, அரசியல் அடிப்படையில் நாம் இந்தியர் எனப்பட்டாலும் வரலாற்று அடிப்படையில் இந்தியர் அல்லரோ, அதேபோல்தான் வரலாற்று அடிப்படையில் நாம் இந்துக்கள் அல்லர்.

 தமிழ் மக்களுக்கு ஒரு கடவுள் நம்பிக்கை உண்டு. அதே நேரம் பிறப்பிறப்பில்லா அக்கடவுளுக்குப் பல்வேறு வடிவம் கற்பித்தும் பல்வேறு பெயரிட்டு அழைத்தும் வழிபட்டு வந்தனர், வருகின்றனர்.

 

வேறு வேறு உருவும் வேறு வேறு இயற்கையும்

நூறு நூறு ஆயிரம் இயல்பினதாகி

என்றும்

 

“ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்

திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ?”

 

என்றும்

மாணிக்கவாசகர் கூறுகிறார்.

நானா வித உருவாய்நமை ஆள்வான்

என்றும்

பல பல வேடமாகும் பர நாரிபாகன்

 

என்றும் திருஞானசம்பந்தர் உரைக்கிறார்.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை

என்கிறார் திருநாவுக்கரசர்.

 

  அருவ வழிபாட்டிலிருந்து உருவ வழிபாட்டிற்கு மக்கள் மாறி வந்தாலும் எல்லா உருவமும் எல்லாப் பெயர்களும் குறிப்பது ஒரு கடவுளையே என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவேதான், பொதுவாக முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுபவர்கள், திருமால் கோயிலுக்கும் சென்று வழிபடுகின்றார்கள்; இடையிலே வந்த கணபதியையும் வணங்குகின்றனர். அம்மன் கோயில் எதுவாக இருந்தாலும் சென்று வழிபடுகின்றனர். எல்லாக் கோயில்களுக்கும் செல்லும் பழக்கம் இருப்பதால்தான் கிறித்துவர்களின் வேளாங்கண்ணிக்கும் இசுலாமியர்களின் நாகூருக்கும் செல்கின்றனர். ஆனால், பிற சமயத்தவரிடம் இந்த இறையொருமைப் பண்பைப் பார்க்க இயலாது. இன்றைக்குத்தான் கிறித்துவத்திலோ இசுலாத்திலோ சேர்ந்திருந்தாலும் பொங்கல் விழாவைத் தமக்குரியதல்ல என்பவர்களும் பொங்கல் அளித்தால் உங்கள் கடவுளுக்குப்படைத்து வழிபட்டு இருப்பீர்கள், வேண்டா என்போரும் மிகுதியாக உள்ளனர்.

  1967 இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. கருத்து செலுத்தி நம் சமயம் இந்து என்பதல்ல, தமிழம் என நடவடிக்கை எடுத்திருப்பின் சிறப்பாக இருந்திருக்கும். அந்த எண்ணம் நம் உள்ளத்தில் விதைக்காத காரணத்தால் யார் இந்து என்றாலும் அவருக்கு அடிமைப்படும் போக்கும் ஏற்பட்டு உள்ளது. அதே நேரம் நரேந்திரரையும் சார்ந்தவர்களையும் இந்து என்று ஏன் சொல்ல முடியவில்லை என்பதையும் பார்க்க வேண்டும்.

 

  அவர்கள் தம்மை இந்துக்களாகக் கருதினால், சிங்களப் பௌத்தர்கள் இந்துமீனவர்களைக் கொன்றொழிப்பது கண்டும் அவர்களுக்குக் கை கட்டிப் பணிவிடை செய்வார்களா? இரு நூறாயிரம் இந்துக்கள் ஈழத்தில் இனப்படுகொலைக்கு ஆளான பின்னும் கொலைகாரர்களுடன் கொஞ்சிக் குலவுவார்களா?

 

  இந்துக்களைக் கொன்றொழிப்பவர்களுக்கு பாசக அரசுகள் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்குமா?

  அயல் சமயத்தினர் நுழையத் தடை உள்ள இந்துக் கோயில்களில் இந்ததுக்களை அழித்தொழிப்பவர்களுக்குச் சிறப்பு மதிப்பு அளிப்பார்களா?

 

  இந்துக்களைக் கொன்ற பக்சே கூட்டத்துடன் சுசுமா நட்பு பூணுவதும் அவர்கள் வாகை சூடவும் வாழ்வாங்கு வாழவும் நரேந்திரர் வாழ்த்துவதும் இது போன்ற நிகழ்வுகளும் இவர்கள் இந்துக்களல்லர் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

 

  இவர்கள் தங்களை ஆரியத்தைக் காக்க வந்த பிறவிகளாக எண்ணுவதும் ஆரிய வெறியில் உழல்வதுமே இவர்கள் உண்டாக்கும் எல்லாத் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணம்.

 

  இவர்கள், இந்துக்களாக இருந்தால், பல மொழி பேசும் பல்வேறு இன மக்கள் இந்து என்று அழைக்கப்படும் பொழுது அயல்நாட்டிலிருந்து இறக்குமதியான சமற்கிருதத்தைத்திணிப்பார்களா? இங்கே வந்த பின்பு தமிழைப் பார்த்துத் தன் எழுத்து வடிவத்தை அமைத்துக் கொண்ட, பேச்சு வழக்கில்லாத சமற்கிதத்திற்குப் பிறஎல்லா மொழிகளையும் விடக் கூடுதல் செலவு செய்து பிற மொழியினர் செல்வத்தை வீணாக்குவார்களா?

  நரேநதிரர் பிராமணர் அல்லரே என்பார் சிலர். ஆரியத்தை முன்னிறுத்தப் பயன்படுத்தப்படும் இராமரும் கண்ணன் என்னும் கிருட்டிணரும் பிராமணரல்லரே! ஆரியம் ஆரியரல்லாத முகத்தை முன்னிறுத்தித்தான் ஆரியத்தைப் பரப்புகிறது. ஆரியத்திற்குக் குரல் கொடுக்காவிட்டாலும் கை கொடுக்காவிட்டாலும் இருக்கின்ற இடம் இல்லாமல் போய்விடும் என்பதை அறிந்தவர்கள் ஆரியராகக் காட்டிக் கொண்டுதான் செயல்படுவர்.

 

இந்துக்களுக்காகக் குரல் கொடுக்காத, இந்துக்கள் அழிவிற்குக் காரணமானவர்களைத் தண்டிக்கக் குரல் கொடுக்காத, இந்துக்களை அழித்த- அழித்து வருகின்ற கொலைகாரர்களுடன் உறவாடகின்றவர் இந்துவே அல்ல என்னும் பொழுது எவ்வாறு இந்து வெறியராக இருக்க முடியும்?

நாம் இந்துவாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆரியர் அல்லர் என்பதை உணர வேண்டும். ஆரிய மொழியோ ஆரிய வழிபாடோ ஆரியக் கல்வியோ ஆரிய முதன்மையோ எதுவாயினும் நம்மை அழிக்கும் ஆயுதம் என்பதை அறிய வேண்டும்.நாம் யார், எவர் என அடையாளம் கண்டுகொண்டு ஆரியத்தை வேரறுக்காவிட்டால், நாடு நாடாக இருக்க முடியாது! நாம், நாமாக இருக்க முடியாது!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

மார்கழி 6, 2045 / திசம்பர் 21, 2014  http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png