thevaneya paavvanar01

அகச் செம்மை பண்பாடு; புறச் செம்மை நாகரிகம்

நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது.

இலக்கணப் பிழையின்றிப் பேசுவதும், எல்லாவகையிலும் துப்புரவாயிருப்பதும், காற்றோட்டமுள்ளதும் உடல் நலத்திற் கேற்றதுமான வீட்டிற் குடியிருப்பதும், நன்றாய்ச் சமைத்து உண்பதும், பிறருக்குத் தீங்கு செய்யாமையும், நாகரிகக் கூறுகளாம்; எளியாரிடத்தும் இனிதாகப் பேசுவதும், புதிதாய் வந்த ஒழுக்க முள்ள அயலாரை விருந்தோம்புவதும், இரப்போர்க்கிடுவதும், இயன்றவரை பிறருக்குதவுவதும், கொள்கையும் மானமுங் கெடின் உயிரை விடுவதும், பண்பாட்டுக் கூறுகளாம். சுருங்கச் சொல்லின் உள்ளத்தின் செம்மை பண்பாடும், உள்ளத்திற்குப் புறம்பான உணவு, உடை, உறையுள் முதலியவற்றின் செம்மை நாகரிகமும் ஆகும். ஆகவே, இவற்றை முறையே அகநாகரிகம், புறநாகரிகம் எனக் கொள்ளினும் பொருந்தும்.

மாளிகையிற் குடியிருப்பதும், பட்டாடை யணிவதும், அறுசுவையுண்டி யுண்பதும், இயன்றவரை பிறருக்குதவுவதும், கொள்கையும் மானமுங் கெடின் உயிரை விடுவதும், பண்பாட்டுக் கூறுகளாம். சுருங்கச் சொல்லின் உள்ளத்தின் செம்மை பண்பாடும், உள்ளத்திற்குப் புறம்பான உணவு, உடை, உறையுள் முதலியவற்றின் செம்மை நாகரிகமும் ஆகும். ஆகவே, இவற்றை முறையே அகநாகரிகம், புறநாகரிகம் எனக் கொள்ளினும் பொருந்தும்.

மாளிகையிற் குடியிருப்பதும், பட்டாடை யணிவதும், அறுசுவையுண்டி யுண்பதும், இன்னியங்கியில் அல்லது புகைவண்டி முதல் வகுப்பிற் செல்வதும், வேலைக்காரரை வைத்தாள்வதும், பொறிகளைக் கொண்டு வினை செய்வதும், இன்பமாய்ப் பொழுது போக்குவதும், செல்வ வாழ்க்கையேயன்றி நாகரிக வாழ்க்கை யாகா.

“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
 செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
 சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
 புன்கண் அஞ்சும் பண்பின்
 மென்கட் செல்வம் செல்வம்என் பதுவே” (நற்றிணை 210 : 5-9)

என்று நற்றிணையும் கூறுதல் காண்க. நெடிய மொழிதல் = அரசரால் மாராயம் பெறப்படுதல். கடிய ஊர்தல் = விரைந்த செலவினையுடைய குதிரை யானை தேர் முதலியவற்றின் மேல் ஏறிச் செல்லுதல். செல்வம் அன்று = நாகரிகம் அன்று. மென்கட் செல்வம் = கண்ணோட்டம் என்னும் பண்பாட்டுக் குணம்.

நாகரிகத்தினும் உயர்ந்த நிலையே பண்பாடாயினும், நாகரிகமின்றியும் பண்பாடுண்டு. காட்டில் தங்கும் முற்றத் துறந்த முழுமுனிவர் ஆடையின்றியும் நீராடாதும் மண்ணில் இருப்பர்; ஆயினும், அவர் பண்பாட்டில் தலைசிறந்தவராவர். கரவாது கரைந்து இனத்தோடு உண்ணும் காக்கையும், வேலாற் குத்திய விடத்தும் வாலாட்டும் நன்றியறிவுள்ள நாயும், ஒரு காலத்தில் ஒரே பெடையோடு கூடிவாழும் வானப் பறவையினமும், நாகரிகமில்லா அஃறிணை யாயினும் பண்பாட்டில் மக்களினும் விஞ்சியவையே.

“மக்கள் தாமே ஆறறி வுயிரே
 பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.” (மரபு. 33)

என்னும் தொல்காப்பிய நூற்பாவும்,

“கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக்
 கைம்மை யுய்யாக் காமர் மந்தி
 கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
 ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
 சாரல் நாட” (69)

என்னும் குறுந்தொகைச் செய்யுட் பகுதியும் இங்குக் கருதத்தக்கன.

பண்டைக் காலத்தில், நாகரிகம் என்னும் சொல்லையே பண்பாடென்னும் பொருளிலும் ஆண்டனர். அதனாலேயே, பண்பாட்டுக் குணமான கண்ணோட்டத்தை நாகரிகம் என்றார் திருவள்ளுவர்.

“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
 நாகரிகம் வேண்டு பவர்” (குறள். 580)

திருந்திய நிலை என்னும் பொதுக் கருத்தில், நாகரிகமும் பண்பாடும் ஒன்றாதல் காண்க.

பண்பாடு நாகரிகத்தினும் சிறந்ததாயினும், நாட்டிலும் நகரிலும் கூட்டு வாழ்க்கையில் வாழ்பவர் நாகரிகமின்றி யிருத்தல் கூடாது. கூட்டு வாழ்க்கையில் நாகரிகமின்றி யிருப்பவர்க்குப் பண்பாடும் இருத்தல் முடியாது. ஊரிலிருப்பவர் உலகப்பற்றை நீத்தவரேனும், உடல் நீங்கும்வரை நீர்ச்சீலையாவது அணிதல் வேண்டும்.

  • ஞா.தேவநேயப்பாவாணர்