நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும்
இப்பொழுது (ஏப்பிரல் 24, 2014) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும் எனும் நோக்கில், தேர்தல் களம் அமைந்துள்ள சூழலை, உண்மை நோக்கில் பார்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு உள்ளது.
இந்திய ஒன்றியத்தில் வாழும் மொழிவழி இனங்கள், எவ்வகையிலும் ஆளுமையுரிமை அடைந்துவிடக் கூடாது என்பதில், ஆரியம் (பிராமணியம்) கண்ணும் கருத்துமாய் செயற்பட்டு வருகிறது. தனது கரவான நோக்கம் நிறைவேற, ஆரியம் எந்த வடிவத்தை வேண்டுமானாலும் சிறப்பாக எடுத்து செயற்பட்டு வெற்றியடைகிறது.
இந்திய ஒன்றியத்தின் மறைந்த தலைமை அமைச்சர் மதிப்புமிகு வி.பி.சிங் அவர்களைப் போன்ற நல்லதொரு தலைமை மீண்டும் முகிழ்த்து விடக்கூடாது என்பதில் ஆரியம் மிக விழிப்பாக உள்ளது. ஆனால் மொழிவழி இனங்களோ தமக்குத் தாமே பகையாகி அழிந்து வருகின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொழிவழி இனங்கள் வெற்றிபெற்று இந்திய ஒன்றியத்தைக் கூட்டாட்சி செய்யும் நிலை வந்துவிடக் கூடாது என்பதுதான் ஆரியத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.
ஆரியம் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு, கட்சி, முதலாளியம், தேர்தல், பிரித்தாளும் சூழ்ச்சி என்று எந்த வடிவிலும் பொருத்திக்கொண்டு செயற்படுவது தெரியாமல் செயற்பட்டு தன் இலக்கை அடைகிறது. தனது செயற்பாட்டிற்கு ஊக்கம் கிடைப்பதற்கு, வேற்று மதங்களையும், சமயங்களையும் பகை ஆற்றல்களாக உருவகம் செய்துள்ளது. மொழிவழி இனங்கள் ஒற்றுமை அடையாமல் இருக்க சிறுபான்மையினரைத் தலைமை ஏற்க வைத்து பிரித்தாளும் சூழ்ச்சியைச் செப்பமாக செய்து வருகிறது.
இவற்றைக் கடந்து இன ஒற்றுமை ஏற்பட்டால், பிரிப்பதற்குப் பெரும்புயலாக ஆரியம் செயற்படுகிறது. தமிழின ஒற்றுமைக்குத் தடையாக என்னென்ன உத்திகள் உலகில் உள்ளனவோ, அனைத்தையும் ஆரியம் பயன்படுத்தி தமிழினத்தைச் சீரழித்து வருகிறது. சாதி, மதம், சமயம், சடங்கு, கட்சி, இயக்கம், கொள்கை, கோட்பாடு, அறிவியல், ஆன்மிகம், கதை, காவியம், நாடகம், திரைப்படம், ஊடகம், உறவு, பணம், தொழில், வணிகம், ஆட்சி, சட்டம், வெளியுறவு என்று எல்லா வடிவங்களையும் தன்வயப்படுத்தி தமிழினத்தைத் தழைக்க விடாமல் செய்து வருகிறது. இவற்றைப் புரிந்துகொண்டால் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் களத்தை எளிதாக விளங்கிக் கொள்ளலாம். தெளிவான முடிவும் எடுக்கலாம்.
யாருக்கு வாக்களிக்கக் கூடாது?
v தமிழீழ விடுதலைப்போரை நசுக்கி, இனப்படுகொலை செய்த காங்கிரசு கட்சி, அதற்குத் துணைநின்ற தி.மு.க.
v தமிழர் நலனில் அக்கறை இருப்பதாக நடிக்கும் அ.இ.அ.தி.மு.க.
v மொழிவழி இனங்களின் விடுதலையை எதிர்த்து ஒடுக்குகின்ற பா.ச.க.
v இந்தியத் தரகர் நலனுக்காக உழைக்கும் மக்களை பாழாக்கும் சி.பி.எம்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும்?
- தமிழ்நாட்டில் தமிழே கல்விமொழி, ஆட்சிமொழி, வழிபாட்டு மொழி, நீதிமன்ற மொழி என்பதை சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்துவது.
- மாநில மொழிகளை நடுவணரசின் ஆட்சி மொழிகளாக ஏற்பளித்து நடைமுறைப்படுத்துவது.
- கல்வி, மருத்துவத் துறைகளில் தனியாருக்கு தடை விதிப்பது.
- இயற்கை வேளாண்மை மூலம் உழவர்கள் தற்சார்பு அடைவதற்கு துணை நிற்பது,
- தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமிழ்நாட்டின் இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் தனியார் நிறுவனங்களோ, அரசு நிறுவனங்களோ சூறையாடுவதை முழுமையாக தடை செய்து, தமிழ்நாட்டின் வாழ்க்கை அடிப்படைகளை காப்பது. மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முழுமையாக தடைசெய்வது.
- சாதிவழி கணக்கெடுப்பு எடுத்து எண்ணிக்கை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது. தமிழ்நாட்டில் மாவட்ட, மாநில அளவில் உயர் பதவிகளில் தமிழர்களை மட்டுமே அமர்த்துவது, தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவது.
- தமிழ்நாட்டின் நதிநீர் பங்கீட்டு உரிமைகளை நேர்மையாக நடைமுறைப்படுத்துவது. தண்ணீர் வணிகத்தை தடைசெய்வது.
- அணுஉலைகளை முழுமையாக தடை செய்வது.
- இந்திய ஒன்றியத்தின் மொழிவழி இனங்களின் இறையாண்மைக்கான வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவது.
- இந்தியா, கிழக்கு வங்காள விடுதலையை முன்னின்று உருவாக்கியதைப் போன்று, தமிழீழ விடுதலையை வென்றெடுக்க துணை நிற்பது. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது.
போன்றவற்றை நடைமுறைப்படுத்த உறுதியளிக்கும் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் நாம் வாக்களிப்போம்.
அரசியல் நிலைப்பாடு
தமிழ்நாட்டில் எந்த இந்தியக்கட்சியும் (தேசிய) ஒரு இடத்திலும் வெற்றிபெறக் கூடாது. அ.இ.அ.தி.மு.க, தி.மு.க இரண்டும் வலிமையிழக்க வேண்டும். அதுதான் தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நன்மையாக அமையும். அதற்குரிய முடிவை தமிழ்நாட்டு வாக்காளர்கள் எடுக்க வேண்டும்.
மொழிவழி இனங்களின் இறையாண்மையைக் காக்கும் வகையில், இந்திய அரசியல் அமைப்பை மாற்றி அமைக்கும் நோக்கில், மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சி அமைய வேண்டுமென விரும்புகிறோம். ஆனால் அதற்கான சூழல் இன்னும் வரவில்லை.
ஆதலால், தில்லியில் அமையவுள்ள கூட்டணி ஆட்சியில், மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு, மேலோங்கிய வண்ணம் அமைதல் வேண்டும். மாநிலக் கட்சிகள், அதிகார-வருவாய் பகிர்வில் மட்டும் குறியாக இல்லாமல், மொழிவழி இனங்களின் தன்னுரிமையை வென்றெடுக்கும் திசையை நோக்கி நகர வேண்டும். இல்லையேல் ஈழத்திற்கு நடந்த கொடுமைதான் இங்குள்ள மாநிலங்களுக்கும் வாய்க்கப்பெறும்.
தமிழின வாழ்வியலை வளரச்செய்து, தேர்தலில் பங்கேற்காமல் தேர்தலைத் தீர்மானிக்கும் இயக்கத்தால் மட்டுமே தமிழினத்தை மேம்படுத்த முடியும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இத்தேர்தல், தமிழினப் பகைவர்கட்கு ஆக்கமாக அமைந்து விடக்கூடாது என்பதற்காக இந்தகைய நிலைப்பாட்டை முன்மொழிகிறோம்.
தேர்தலில் நாம் ஏன் செயலாற்ற வேண்டும்?
அரசியல் கட்சி என்பது நுட்பமான வணிக நிறுவனமாகவும், அரசு அமைப்பு என்பது மக்களை ஒடுக்கும் எந்திரமாகவும் வளர்ந்தே வருவது வெளிப்படையாகத் தெரிந்த உண்மையாகும். இருப்பினும் இப்பொழுதுள்ள ஆட்சிமுறையைப் பயன்படுத்தியே கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் தம் மாநில உரிமைகளை எல்லா வகையிலும் போற்றிப் பாதுகாத்து வருகின்றன
தன்னை உணர்ந்து வாழும் இனங்கள் இந்திய ஒன்றியத்தில் நிமிர்ந்து வாழ்கின்றன. நாம் நம்மை உணராததால் வேற்று இனத்தாரே தொடர்ந்து நம்மை ஆட்சி செய்கின்றனர். பார்ப்பனர்களும் வேற்று மொழியினரும் அரசைப் பயன்படுத்தி தங்களின் பணிகளை எளிதாகச் செய்துகொள்ள முடிகிறது. நாம் தெருவில் போராடி உதைபடுவதற்கு மட்டுமே பழக்கப்படுத்தி உள்ளோம். அடிப்படைத் தேவைக்காக அண்டிப் பிழைப்பதை ஒழித்து, ஆளும் உரிமையை அடைதல் வேண்டும்..
எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழர் தலைமையேற்கும் நிலை வரும்பொழுதுதான் தமிழ்நாட்டில் தமிழரும், பிறரும் நன்றாக வாழமுடியும்.
பணத்திற்காக வாக்குரிமையை விற்காமல், ஆளும் உரிமையை மீட்பதற்காகச் சிந்தித்து வாக்களிக்கும் பண்பை உயிராக ஏற்க வேண்டும். இல்லையேல் நம்மை யாராலும் காப்பாற்ற இயலாது. கட்சி அடிமையாய் வாக்களித்தால் ஒவ்வொரு ஐந்து ஆண்டிற்கும் நாம் அடிமையாகத்தான் இருக்க முடியும்.
ஆதலால் இனிவரும் காலங்களில் தொண்டு செய்யும் கட்சிகளே வெற்றிபெற முடியும் என்ற சூழலை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நாம் வாழ்வாங்கு வாழமுடியும். எனவே ஒவ்வொரு தமிழரும், வாக்காளரும் சிந்தித்து வாக்களித்து நம் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும்..
சாதி, மதம், கட்சி, இயக்கம், கொள்கை இவற்றின் பெயரால் தேக்கம் அடையாமல், தமிழர் நலன் – தமிழ்நாட்டு நலன் எனும் அடிப்படையில் நாம் ஒருங்கிணைந்து வெற்றிபெற வேண்டும்.
தலைவர்கட்கு அடிமையாகாமல் தற்சிந்தனை உடையவர்களாக வாழ்வோம்.
கட்சிக்காக இனம் அடிமையாய் இருப்பதை ஒழித்து இனத்திற்காக கட்சிகளைப் பணிய வைப்போம்.
நம் அடிமை உணர்ச்சி மாறாத வரை ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை ஒடுக்குவதை தொடரத்தான் செய்வார்கள். ஆதலால் ஆட்சியாளர்களின் வன்முறைகளை நிறுத்துவதற்கு கட்சியைக் கடந்த பொதுவுணர்வில் இணைவோம்! உரிமைகளை வெல்வோம்!!
தமிழர் மாமன்றம்
862, த.நா.வீ.வா குடியிருப்பு,
திருக்கச்சூர்,
மறைமலைநகர்,
9092928777 / 9952569195
thanmaanan@gmail.com
Leave a Reply