நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை! பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2 – சந்தர் சுப்பிரமணியன்
நாம் தமிழுக்கு உண்மையாக இல்லை!
பேரா.மறைமலை இலக்குவனாரின் நேருரை 1/2
பெரும்பேராசிரியர் திரு இலக்குவனார் அவர்களின் புதல்வர் பேராசிரியர் திரு மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு, அண்மையில் தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கிச் சிறப்பித்தது. பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட காணல்.
1.? அண்மையில் தமிழக அரசால் திரு.வி.க. விருது உங்களுக்கு வழங்கப்பட்டது. என் சார்பிலும் இலக்கியவேல் வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகள். அது குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?
அரசு பல்வேறான விருதுகளை இலக்கியப் பணியாற்றிய அறிஞர்களுக்கு வழங்கிவந்து கொண்டிருக்கிறது. திரு.வி.க. விருது என்பதால் எனக்குள் ஓர் இன்பம். ஏனென்றால் என்னுடைய ஆசிரியர்களான திரு அ.கி.பரந்தாமனார் அவர்களும் திரு இளங்கோவன் அவர்களும் இவ்விருதினைப் பெற்றவர் ஆவர். என் ஆசிரியர்கள் பெற்ற விருதினை நானும் பெற்றதால் மிகவும் மகிழ்வுறுகிறேன்.
2) ? விலங்கியல் துறையில் இளமறிவியல் பட்டம் பெற்ற நீங்கள் முதுலைப்படிப்பிற்குத் தமிழைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
நான் மருத்துவம் கற்க விரும்பியே விலங்கியல் துறையில் சேர்ந்தேன். கல்லூரியில் சிறப்புத்தமிழ் ஒரு பாடமாக அமைந்திருந்தது. மேலும் முதலாண்டு படிக்கும்போதே, என் தந்தையார் நடத்திவந்த பத்திரிகையில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன். அறிவியல் கட்டுரைகளைப் படைப்பதில் எனக்கு ஆர்வம் பெருகியது. என் தந்தையார் நடத்திவந்த குறள் நெறி பத்திரிகையில் அவருக்கு உதவலானேன். அக்காலக்கட்டத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் என்னைத் தமிழ் படிக்கத் தூண்டியது. ஆதலால், நான் தமிழ் முதுகலைப் பட்டத்தில் சேர்ந்தேன்.
3) ? உங்களுடைய தந்தையார், உடன் பிறந்தவர்கள், என ஒரு பெரிய தமிழ்க்குடும்பத்தில் பிறந்த நீங்கள் அத்தகைய சூழல் எவ்வாறு உங்களை உருவாக்கியது என்று பகிர்ந்து கொள்ள இயலுமா?
எனக்குப் பின்னால் என்னுடைய தம்பி திருவள்ளுவர் தங்கை மதியழகி ஆகியோர் தமிழ்பால் ஈடுபடத்தொடங்கினர். என்றாலும், எனக்குத் தமிழைக் கற்றுவித்தலில் ஆர்வம் அதிகம். அந்நாட்களில், பொதுவாக, மொழியாசிரியர்கள் மாணவர்களின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றினர். இத்தகைய சூழல் என்னை தமிழாசிரியராகப் பணியாற்றத் தூண்டின.
4) ? நீங்கள் ஆசிரியர் பணியிலிருந்தவாறே உங்களுடைய தமிழாய்வுப்படிப்பை முடித்தீர்களா?
ஆம். பணியில் இருந்துகொண்டே என்னுடைய ஆய்வுப் படிப்பை முடித்தேன்.
5) ? உங்கள் நூல்களில் பெரும்பான்மையானவை திறனாய்வு வகையைச் சார்ந்தே அமைந்துள்ளன. இதற்கான சிறப்புக் காரணம் ஏதேனும் உள்ளதா அல்லது அது இயல்பாகவே அமைந்ததா?
திறனாய்வு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. நான் என் தந்தையாரின் நாளிதழில் பணியாற்றியபோது, வாரம் தோறும் வரும் அவ்விதழில் வெளிவந்த நூல்திறனாய்வுக் கட்டுரைகளை நான் தான் எழுதிவந்தேன். தலைசிறந்த நூல்கள் திறனாய்வுக்காக வரும் என்பதால், பல்வேறான நூல்களைப் படிக்கும் ஆர்வத்தையும் இச்செயல் தூண்டிவிட்டது. இதைத்தவிர, செந்தமிழ்ச்செல்வி, தென்மொழி, போன்ற பிற இலக்கியஇதழ்கள், நாளிதழ்களிலும் என் திறனாய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
6) ? ‘இலக்கியத் திறனாய்வு – ஓர் அறிமுகம்’ என்னும் நூலையும் எழுதியுள்ளீர்கள். இந்த நூல் இலக்கியத்திறனாய்வு செய்பவர்களுக்கு ஒரு கையேடாக அமையும் விதத்தில் எழுதப்பட்ட நூலா?
ஆம். இலக்கியத்திறனாய்வுக்கு ஐம்பெரும் அணுகுமுறைகள் (Five Great Approaches) உள்ளன என்று வில்பெர்க்கு என்னும் அறிஞர் எழுதியுள்ளார். மூலப்பாடத்திறனாய்வு, புதிய திறனாய்வு, உளவியல் அடிப்படையிலான திறனாய்வு, குமுக(சமூக)வியல் அணுகுமுறை, தொன்மவியல் அணுகுமுறை என்ற அவ்வகைகளில் நூல்குறித்த திறனாய்வு அமைதல் வேண்டும் என்பது அவரது கோணம். அத்தகைய பல்துறைசார் அணுகுமுறை குறித்து விவாதிக்கும் நூல்கள் தமிழில் அக்காலத்தில் இல்லை. தமிழில் இதுகுறித்த முதல் நூலே என்னுடைய “இலக்கியத் திறனாய்வு – ஓர் அறிமுகம்” என்னும் நூல். இந்நூல் அக்காலத்தில் பரவலாகப் பேசப்பட்ட ஒன்று.
7) ? இந்த நூல் ஏதேனும் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக அமைந்துள்ளதா?
ஆம். மதுரை பல்கலைக்கழகத்தில் பாடமாக ஆக்கப்பட்டது. ஆனாலும், சரியான முறையில் சந்தைப்படுத்தப் படாததால் அவ்வளவாகப் பயன்படுத்தப் பெறவில்லை. சரியாகச் செய்திருந்தால் இது நிலையான இடத்தைப் பிடித்திருக்கலாம். தமிழில் முன்னோடியாகத் தொன்மவியல் அணுகுமுறையை அறிமுகப்படுத்தியது நான்தான். இந்த நூலுக்குப்பின்னர், அறிஞர் மணவாளன் ஒரு சிறிய நூலை எழுதியுள்ளார். பின்னர் என் ஆசிரியர் திரு மகாதேவன் எழுதியுள்ளார். என்னுடைய இந்த நூல் இப்போது பதிப்பில் இல்லை. ஆனால் திரு பேராசிரியர் மெய்யப்பன் அவர்களின் மூலம் நான் பின்னர் எழுதிய பல நூல்கள் – மார்க்கசியமும் திறனாய்வும், உளவியலும் திறனாய்வும், சமூகவியலும் திறனாய்வும் போன்றவை – உள்ளன. இவற்றின் அடுத்த பதிப்பாக, விரைவில் இவை ஒரே தொகுப்பாக வெளிவர உள்ளன. வாசிப்பாளர்(‘ரீடர்)’ என்று குறிப்பிடுவதுபோல், மூலமும், மூலத்திற்கு எடுத்துக்காட்டுகளைக் காட்டியும் பதிப்பிடத் திட்டமிடப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட கோட்பாடுகளுடன், அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டுகளுமாக இந்நூல் அமையும்.
8) ? புதுக்கவிதைகளின் பால் உங்களுக்கு ஆர்வம் அதிகமெனப்படுகிறது. நீங்கள் புத்துக்கவிதை குறித்து மூன்று நூல்களை (புதுக்கவிதையின் தேக்கநிலை, புதுக்கவிதை – முப்பெரும் உத்திகள், சமூகவியல் நோக்கில் புதுக்கவிதை) எழுதியுள்ளீர்கள். இதுகுறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவியலுமா?
இயல்பாகவே எனக்குக் கவிதையின்பால் ஈடுபாடு உண்டு. குறிப்பாகப், பாரதிதாசனின் கவிதைகள் என்னுடைய பொழிவுகளில் வெகுவாரியாக அமைந்திருக்கும். அவர்வழி வந்த முடியரசனும் வாணிதாசனும் மரபுக்கவிதைகளில் தேர்ந்தவர்கள். என்றாலும், அவர்கள் முறையாக அறிமுகப்படுத்தப்படவில்லை. அதனால் அவர்களுடைய கவிதைகளை என் பொழிவுகளில் குறிப்பிடுவது வழக்கம். பின்னர், திரு வி.ஆர்.எம். செட்டியார், திரு சிலம்பொலிச்செல்லப்பன்வன் ஆகியோர் மட்டுமே பாரதிதாசன் வழியில் வந்த மற்ற கவிஞர்களின் கவிதைகளை தம்முடைய பொழிவுகளில் பயன்படுத்தினர். இவ்விருவர் தவிர பாரதிதாசன் வழிவந்த முடியரசன், வாணிதாசன் கவிதைகளை யாரும் திறனாய்வு செய்யவில்லை.
புதுக்கவிதையைக் குறித்தமட்டில், அது ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டுள்ளது. அதனால் எப்படி ஏற்றுக்கொள்வது, எப்படித் தவிர்ப்பது என்ற குழப்பமான நிலை உள்ளது. ‘புதுக்கவிதையில் தேக்க நிலை’ என்னும் என் நூலே தமிழ் உரைநடை வரலாற்றில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பிய நூலாகும். புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து ஆறு திங்கள் இந்த நூல் குறித்த விவாதங்கள் தொடர்ந்தன. ‘தாய்’ என்னும் இதழ், இந்த நூல் குறித்த கருத்துகளைப் பதிப்பிக்க மட்டுமே தொடர்ந்து ஆறு இதழ்களில் பக்கங்களை ஒதுக்கியது. கல்கி போன்ற பத்திரிகைகள் இதுகுறித்த திறனாய்வுகளை வெளியிட்டன. இப்புத்தகம் குறித்து, கருத்துப்படங்களும்(கார்ட்டூன்களும்) இடம்பெற்றன. ஆனாலும் யார் மீதும் எனக்குத் தனிப்பட்ட வகையில் விருப்பு வெறுப்பென்று ஏதும் இல்லை. புதுக்கவிதைகளில், குறிப்பிட்ட சொற்றொடர்கள், படிமங்கள் எப்படி திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்துப், பட்டியலிட்டுக் காட்டியிருந்தேன். காதல் எப்படி வணிகமயமாக்கப்படுகிறது என்பது குறித்தும் எழுதியிருந்தேன்.
புதுக்கவிதை குறித்த என்னுடை அடுத்த நூலில் புதுக்கவிதைப் படிமங்களுக்கும் மரபு வழி உருவகங்களுக்குமான ஒற்றுமை வேற்றுமைகள், அங்கதம், முரண் போன்றவற்றின் பயன்பாடு, உரைவீச்சில் எப்படி இவை மேலும் சாத்தியப்படுத்த எளிதாக அமைகிறது என்று பல கோணங்களில் ஆய்வுசெய்து எழுதியிருந்தேன். புதுக்கவிதைக்கு ஒரு இலக்கண நூல் போலமைந்த நூலது. இந்நூல் ஆய்வாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.
9) ? இன்றைய கவிதைகளில் அத்தகைய தேக்கத்தைக் காண்கிறீர்களா? தேக்கம் நீங்க நீங்கள் சொல்லும் வழி யாது?
நெடிய சிந்தித்துப்பார்ப்போமாயின், தேக்கத்தை இரு நிலைகளில் காணலாம்: ஒன்று, கவிஞர்களின் உள்ளம், சமூகப்போக்கிற்கு ஏற்ப இயங்கி அதன்வழியில் படைப்புகளை ஆக்குவது என்பதில் தோன்றும் பிழை; மற்றொன்று, சந்தைப்படுத்துதலில் வெளியீட்டாளர்களின் நோக்கத்திற்கு ஏற்ப, படைப்பாளிகள் தத்தம் படைப்பின் திறன்களை மாற்றிக்கொள்ளும் நிலை. இத்தகைய தேக்கம் இருக்கிறது என்பதில் ஐயம் இல்லை. என்றாலும் இன்றைய இளைஞர்கள், சமுதாயத்தின் சீர்கேடுகளை விவாதிக்கும் வகையில் தத்தம் படைப்புகளை வெகுவாரியாக படைத்துவருகிறர்கள். புதிய உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த நிலையில் தேக்கம் ஏதும் இல்லை.
10) ? உங்களுடைய ஒரு படிநிலை – பரிமாணம், இதழியல். பழைமைக்கும் புதுமைக்கும் பாலம் கட்டும் வகையில் அச்சுவழியிலும் மின்பதிப்பாகவும் இதழ்களை நடத்தி வருகிறீர்கள். இது குறித்து வாசகர்களுக்கு நீங்கள் தெரிவிக்க நினைக்கும் செய்தி ஏதேனும் உண்டா?
இணையம் என்பது ஒரு பெரிய கொடையாகும். படைப்பாளிகள் தங்களுடைய கருத்துகளை உடனுக்குடன் வெளியுலகத்திற்கு கொண்டுவர இயல்கிறது. நான் என்னுடைய சிறுவயதிலேயே ‘மொட்டுகள்’ என்னும் கையெழுத்து இதழை நடத்திவந்தேன். பின்னர் தந்தையார் நடத்திவந்த குறள் நெறி இதழில் எழுதத் தொடங்கிப் பின், அதன் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினேன். என் தந்தையின் மறைவுக்குப்பிறகு, நானே நடத்தியும் வந்தேன். அந்த ஆசை இன்னும் இருப்பதால்தான், இன்று இணையத்தைக் களமாகக் கொண்டுள்ளேன். வாசகர்களும் இணையத்தின் பரப்பைப் பயன்படுத்திக்கொள்ளுதல் அவசியம். இணையம் என்பது, அருட்கொடை, அறிவியற்கொடை.
(தொடரும்)
திருவிக விருதாளர் பேரா.மறைமலைஇலக்குவனாரின் நேருரை
– இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன்
இலக்கிய வேல் – ஏப்பிரல் 2017
Leave a Reply