நாலடியார் காட்டும் நல்வழித் தொடர்! – முன்னுரை

‘நாலு பேர் நாலு விதமாகப் பேசுவான் அதுதான் வாழ்க்கை’ என்று எல்லாரும் ஒரே மாதிரியாகத்தான் பேசுகிறார்கள். தமிழர்களின் வாழ்வில் நான்கு என்பதற்கு அப்படிப்பட்ட முதன்மையாக இடம் உண்டு. வாழ்க்கையை நகர்த்தும்போதும் நான்கு பேர் உதவி தேவை. வாழ்வை முடித்த பின்னும் நான்கு பேர் உதவி தேவை. வாழ்வை நகர்த்த உதவும் நான்காய், நமக்கு வாய்த்திருக்கிறது நாலடியார்.

சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நான்கு அடி வெண்பாக்களால் ஆன 400 பாடல்களின் தொகுப்பு நாலடியார் எனப் பெறுகிறது. நாலடி நானூறு எனவும் அழைக்கப்பெறும். ‘வேளாண் வேதம்’ என்றும் குறிப்பிடுவர்.

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”, “சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது”, “பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்” என்று கூறப்படுவனவற்றால் திருக்குறளுக்கு இணையாக மதித்துப் போற்றப்படும் நூல் நாலடியார் என அறியலாம்.

நாலடியார்ப் படிகள் சிலவற்றில் “வளம் கெழு திருவொடு வையகம் முழுவதும்” எனத் தொடங்கும் தனிப்பாடல் உள்ளது. இதில் இந்நூலுக்கு அதிகாரம் வகுத்தவர் பதுமனார் என்றும் இவ்வதிகாரங்களை முப்பாலுக்கும் அடைவுபடுத்தி உரை கண்டவர் தருமர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரடி வெண்பாவாலான திருக்குறளுக்கு நாலடி வெண்பாவால் விளக்குவதே நாலடியார் என்பர். எனவே, பதுமனார் திருக்குறளைப்போல் அதிகாரத்துக்குப் 10 பாடல்கள் வீதம் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 அதிகாரங்களில் 400 பாடல்களைப் பகுத்தார் என்பா். பின்னர் வந்த உரையாசிரியர்கள் அறத்துப்பால், பொருட் பால், காமத்துப் பால் என முப்பாலாகப் பகுத்து, இயல் பாகுபாடுகளும் செய்திருக்கின்றனர்.

அறவியல் 13, பொருளியல் 24, இன்பவியல் 3 எனப் பகுக்கப்படடதாக இந்தப் பாடல் கூறுகிறது.

இப்போது இன்பவியலில் கடைசி அதிகாரம் மட்டும் குறிக்கப்பெற்றுப் பிற இரண்டும் (பன்னெறி, பொது) பொருளியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு அதிகாரங்களும் தனித்தனி இயலாகக் குறிக்கப்பெற்றுள்ள படிகளும் உள்ளன.

‘பொதுமகளிர்’ என்னும் ஓர் அதிகாரத்தை (38) ‘இன்ப துன்பஇயல்’ என்றும், ஏனை இரண்டு அதிகாரங்களையும் (39, 40) ‘இன்ப இயல்’ என்றும் தருமர் கொள்வர்.

இந்த நூலைத் தொகுத்து முறைப்படுத்திய பதுமனாரும் மதிவரர் என்பவரும் தருமர் என்பவரும் உரை எழுதியதாகத் தனிப் பாடல்கள் கூறுகின்றன. இளம்பூரணர் முதலிய தொல்காப்பிய உரையாசிரியர்களும் பரிமேலழகரும் அடியார்க்கு நல்லாரும் தத்தம் உரைகளில் நாலடியாரில் இருந்து பாடல்களை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர்.

தம் அன்பைப் புரிந்துகொள்ளாமல் நாட்டை விட்டு நீங்கிய சமண முனிவர்கள் எண்ணாயிரவர் எழுதிய பாடல்களைப் பாண்டிய வேந்தர் வைகை ஆற்றில் எறிந்தார்; அவற்றுள் நீரோட்டத் திசையில் செல்லாமல் எதிர்த்து வந்த 400 பாடல்கள் தொகுக்கப் பெற்றதாகக் கதை உள்ளது. சங்கத்தமிழ் வளர்த்த பாண்டிய வேந்தர் பாடல் சுவடிகளை ஆற்றில் எறிந்ததாகக் கூறுவது நம்பும் படியாக இல்லை.

நானிலம் போற்றும் நாலடியார் பாடல்களின் அடிப்படையில் நல்ல கருத்துகளை, இனி மின்னம்பலம் தமிழின் முதல் அலைபேசி நாளிதழில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடராய்க் காண்போம்.

(நாளை மறுநாள் தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்
மின்னம்பலம், 29.08.2019