நாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம்? – இலக்குவனார் திருவள்ளுவன்: மின்னம்பலம்
நாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம்?
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
பொருள்: குற்றமில்லாப் பெருஞ்செல்வம் பெற்றால் ஏர் ஓட்டி பெற்ற உணவைப் பலருடனும் பகுத்துண்க. ஏனெனில் செல்வம் வண்டிச்சக்கரம் போல் மேல் கீழாகமாறி மாறி உருளும்.
சொல் விளக்கம்: துகள் தீர்=குற்றமற்ற; பெரும்=பேரளவு சொத்து; தோன்றியக்கால்=தோன்றினால் (அஃதாவது தோன்றாமலும் இருக்கலாம்); தொட்டு=அது முதல்;பகடு = எருது; நடந்த=உழுத; கூழ்= உணவை, பல்லாரோடு= பற்பலருடன்; உண்க=உண்பாயாக; அகடு உற=உறுதி பொருந்த; யார் மாட்டும்= யாவரிடத்தும்; நில்லாது=நிற்காது; செல்வம்=செல்வமானது; சகடக்கால்= வண்டிச்சக்கரம்; போல= போல; வரும்= மேல் கீழாய் மாறி வரும்.
அகடு என்றால் வயிறு என்றும் பொருள் உண்டு. உண்பதைக் குறிப்பதால் சுவைக்காக அச்சொல்லையே உறுதியைக் குறிக்கப் பயன்படுத்திய நயம் நோக்கத்தக்கது.
பெருஞ்செல்வம் என்பது பேரளவு என்று மட்டுமல்லாமல் பெருமை மிக்க செல்வம் என்றும் கொள்ள வேண்டும். நல்வழியில் திரட்டிய செல்வம்தான் பெருஞ்செல்வம்ஆகும். அகடுற என்பது எவ்வளவுதான் செல்வத்தைப் பிடித்து வைத்துக் காக்க உறுதியாக எண்ணினாலும் நிலைக்காது என்பதைக் குறிப்பிடுகிறது.
பல்லாரோடு என்பதன் மூலம் குடும்பத்தினர், சுற்றத்தார், நண்பர், விருந்தினர், பணியாளர் எனப் பல பிரிவினரையும் குறிப்பிடுகிறது.
“நீ தேடும்போது வருவதுண்டோ விட்டுப்
போகும்போது சொல்வதுண்டோ”
எனச் ‘சக்கரம்’ என்னும் திரைப்படத்தில் ‘காசேதான் கடவுளடா’ என்று தொடங்கும் பாடலில் வரும். இவ்வாறு சொல்லாமல் கொள்ளாமல் போகும் செல்வம் என்பதால் நாம் இறுக்கி வைத்துப் பாதுகாக்கக்கூடாது.
செல்வம் வேண்டும் என்பதற்காக எந்த வழியில் வேண்டுமென்றாலும் பெறலாம் என்பது தமிழர் நெறியல்ல. எனவேதான் குற்றமற்ற வழியில் பெற்ற – துகள்தீர் – பெருஞ்செல்வம் எனக் கூறப்பட்டுள்ளது.
செல்வம் யாரிடத்திலும் நிலைத்து நிற்காது என்பதால், அது வந்ததும் உடனே பலர்க்கும் அளிக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும்.
செல்வத்தைத் தவறான வழிகளில் பயன்படுத்திச் சீரழிவோர் இதனை நினைத்து அறவழியில் செல்வம் பெற்று அறவழியில் அனைவரும் பயனுறச் செலவழிக்கவேண்டும். நிலையில்லாச் செல்வத்தால் நிலைபுகழ் பெற அதுவே வழி.
தேர்தலுக்குத் தேர்தல் பணத்தை மக்கள் கண்ணில் காட்டுவோர் இயல்பான காலத்தில் மக்களுக்காகச் செலவழித்து மக்கள் உள்ளங்களில் இடம் பெறலாம் அல்லவா?
(இன்பம் தொடரும்)
Leave a Reply