நாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு!

வெறியயர் வெங் களத்து வேல்மகன் பாணி

முறியார் நறுங் கண்ணி முன்னர்த் தயங்க,

மறிகுளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி

யறிவுடை யாளர்க ணில்

பொருள்: பலிபீடத்தின் அருகில் உள்ள ஆடு தன்னை வெட்டிக் கொல்லப் போகிறார்கள் என உணராமல் எதிரில் உள்ள பூமாலையில் கட்டப்பட்டுள்ள இலைதழைகளை உண்கிறது. இதைப்போன்று நிலையற்ற இளமை இன்பத்தில் மகிழ்தல் நல்லறிவுடையாளர்களிடம் இல்லை.

சொல் விளக்கம்: வெறி=வெறியாடுதலை; அயர்=செய்கின்ற; வெம்=கொடிய; களத்து=பலிக்களத்தில்; வேல்மகன்=பூசாரி; பாணி=கையில், முறி=தளிர்; ஆர்= நிறைந்த; நறும்=மணக்கும்; கண்ணி=மாலை; முன்னர்=தன் முன்னாக; தயங்க= அசைந்து தொங்க; மறி=ஆடு; குளகு=தழையுணவு; உண்டன்ன=உண்டு மகிழ்தல் போலும்; மன்னா=நிலைபெறாத; மகிழ்ச்சி=மகிழ்ச்சி; அறிவுடையார்கண்= நல்லறிவு உடையவர்களிடம்; இல்= இல்லை

அடையாளமாக வேலைக் கையில் பிடித்துக் கொண்டு ஆடும் மகன்என்பதால் வெறியாட்டம்ஆடுபவன் வேல் மகன் எனப்படுகிறான்.

ஆட்டிற்கு இருக்கும் அறியாமை போன்று நிலையற்ற கேளிக்கை இன்பங்களில் ஈடுபட்டு நிலையான நற்செயல்களில் கருத்து செலுத்தாமல் அறிவற்றவர்கள் உள்ளனர்.

‘பதிபக்தி’ படத்தில் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்

இரைபோடும் மனிதருக்கே

இரையாகும் வெள்ளாடே

இதுதான் உலகம், வீண்

அனுதாபம் கொண்டு நீ

ஒரு நாளும் நம்பிடாதே !

என்னும் பாடல் ஏமாறும் ஆடுபோல் இருக்கக்கூடாது என்று எச்சரிக்கிறது. ஆனால், அவ்வாறு கெடுவழியிலான இன்பங்களை நிலை என எண்ணி நிலையான அறவினைப் பயனை உணராதவர் உள்ளனர்.ஆனால், அறிவுள்ளவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள் என்கிறது நாலடியார்.

நிலையற்ற தீவினை இன்பங்களில் ஏமாறாமல் நிலையான அறவினை இன்பம் கொள்க.

(இன்பம் தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம், 17092019