நிதியமைச்சர் தியாகராசனின் உரிமைக்குரலும்

‘ஒன்றியம்’ சொல்லாட்சியும்

ஒன்றிய அரசின் 43 ஆவது சரக்கு-சேவை வரிகள்(G.S.T.) கூட்டம் 28.05.2021 இல் நடைபெற்றது. இதில் பேசிய தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் மாநில உரிமைகளுக்குக் குரல் கொடுத்துச் சிறப்பாகத் தன் பங்களிப்பைச் செய்துள்ளார். “ஒரு மாநிலத்தின் வருவாய், மக்கள் தொகை, பொருளாதாரம், உற்பத்தி மதிப்பு, நுகர்வு மதிப்பு போன்றவற்றின் அடிப்படையிலேயே வாக்குகளும் பேசும் நேரமும் அளிக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் அவர் தெரிவித்த  எச்சரிக்கை, “மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியங்கள் இல்லை” என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும் அவர், ஒன்றிய அரசுக்கென தனியான வாக்காளர்கள் இல்லை. “ஒன்றிய அரசு மனக்கசப்புடனும் வேண்டா வெறுப்புடனும் செயல்படும் நன்கொடையாளராக இருக்க முடியாது.” என்றும் துணிவுடன் பேசியுள்ளார்.

“மாநிலங்களிடம் இருந்து பெற்று மத்திய அரசு திருப்பித் தரும் நிதி தமிழகத்திற்கு 30% அளவுக்கே உள்ளது. ச.சே.வரி(G.S.T.) முறை அடிப்படை ஆதாரம் இல்லாமல் ஆட்டம் கண்டுள்ளது. அது முழு ஆய்வு இல்லாமல் கொண்டு வரப்பட்டது. ச.சே.வரி (G.S.T.) முறையில் மாற்றம் கொண்டு வந்தால்தான் அது நீடிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது” என்றும் தெளிவாகப் பேசியதன் மூலம், மாநில அரசின் உரிமைகளையும் மத்திய அரசின் கடமைகளையும் தெரிவித்துள்ளார் எனலாம்.

“மாநிலத்தில் தன்னாட்சி! மத்தியில் கூட்டாட்சி!” என்னும் முழக்கம் மீண்டும் வலுப்பெற வேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்தும் வகையில் பேசிய அமைச்சர் தியாகராசனுக்கும் அவரது பின்புலத்தில் உள்ள முதலமைச்சர், தமிழக அரசிற்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீதிக்கட்சித் தலைவரின் வழித்தோன்றல் மாநில நீதிக்காகக் குரல் கொடுத்ததில் வியப்பில்லை. இஃது அவரது குரல் மட்டுமல்ல. நீதிக்கட்சி வழி வந்த தி.மு.க.வின் குரலும் இதுதான் என்பது மகிழ்ச்சிக்குரியது.

அவர் உரையில் இடம் பெற்ற முதன்மையான சொல்லாட்சி ‘ஒன்றிய’ அரசு என்பதாகும். இது குறித்தே இப்போது நாம் காணப்போகிறோம்.

ஒன்றியம் என்பது இந்திய அரசியல் யாப்பு தந்துள்ள சொல்லாட்சியே! இதைப் புரியாமல் சிலர் எதிர்க்கிறார்கள். நாளிதழ் ஒன்றின் செய்தியாளர் இது குறித்துக் கட்டுரை எழுதியுள்ளார். அதில்,

“’மத்திய’ அரசு தெரியும். ‘மைய’ அரசு தெரியும். கொஞ்சம் தமிழ் கற்ற புலவர்கள் ‘நடுவண்’ அரசு என்று கூறுவர். ஆனால், ‘மத்திய’ என்ற பயன்பாட்டை மறுக்கவேண்டும் என்பதற்காக ஒன்றியம் பயன்படுத்தப்படுகிறது” என்கிறார்.

“ஒன்றியம் என்று, இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு தமிழக அமைச்சரால் பேச முடிகிறது. ‘ஒரு தேசம்’ என்ற சிந்தனையை, இளைஞர்கள் மனத்தில் இருந்து, முளையிலேயே கிள்ளியெறியவே, ‘ஒன்றியம்’ என்ற சொல், பயன்பாட்டுக்கு வந்துள்ளது”  என்கிறார் அவர்.

ஒரு கருத்து குறித்த விவாதம் எழுப்பப்பட்டதெனில் அதைப்பற்றி நன்கு ஆராய்ந்து நம் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பதே அடிப்படை ஞானம். ஆனால், ஆளாளுக்கு இது குறித்துத் தான்தோன்றித்தனமாகக் கருத்து தெரிவிக்கின்றனர். முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும் “ஒன்றியம் என்று பயன்படுத்தக்கூடாது. மத்திய அரசு என்றுதான் பயன்படுத்த வேண்டும்” என்று சொல்வதுதான் வியப்பாக உள்ளது.

இந்திய அரசியல் யாப்பு ஒன்றியம் என்றுதான் குறிக்கிறது. அவ்வாறிருக்க அச்சொல்லைப் பயன்படுத்துவதைத் தவறாகக் குறிப்பது ஏன்?

இதன் முதல் வரியே “இந்தியா, அஃதாவது பாரதம் அரசுகளின் ஒன்றியம்” என்கிறது. Union of States என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. ‘State’ என்றால் அரசு என்றுதான் பொருள். நாம் மாநிலம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகிறோம். அரசியல் யாப்பின் படி ஒன்றிய அரசும் ‘State’  தான். இந்தியிலும் ‘இராச்சியங்களின்/அரசுகளின் ஒன்றியம்’ என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது. இங்கே இராச்சியம் என்றால் அரசுதான். மாநிலம் அல்ல!

அது மட்டுமல்ல! இந்திய அரசியல் யாப்பில் மத்திய அரசாங்கம் என்பது 6 இடங்களில் மட்டுமே குறிக்கப்பெற்றுள்ளது. அதுவும் கூட்டுறவு அமைப்புபோன்ற இடங்களில்தான் குறிக்கப் பெறுகிறது. ஆனால் ஒன்றியம் என்பது 435 இடங்களில் குறிக்கப் பெற்றுள்ளது.

மேலும், ‘ஒன்றியம்’ எனத் தனி இயற்பிரிவே ஐந்தாவதாக அமைந்துள்ளது.  இதில் 52 முதல் 151 வரையிலான 100 பிரிவுகளும் ஒன்றியம் குறித்தே கூறுகிறது.

இந்திய அரசியல் யாப்பின் 300 ஆவது பிரிவில், “இந்திய அரசின் மீது வழக்கு தொடுப்போர் இந்திய ஒன்றியம் என்ற பெயரைப் பயன்படுத்தலாம், அரசும் இப்பெயரைக் கொண்டு வழக்கு தொடுக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசியல் யாப்பு ஒன்றியம் என்பது குறித்து இத்தனை முதன்மையை அளித்திருக்கும் பொழுது, “அந்தச் சொல்லில் தப்பில்லை. அதன் பயன்பாட்டுக்குப் பின், பிரிவினைச் சிந்தனையும், திராவிட அரசியலும் இருக்கிறது” என எழுதுவதும் பேசுவதும் எங்ஙனம் சரியாகும்? 

ஒன்றிய அரசை மத்திய அரசு/ மைய அரசு/ நடுவண் அரசு என்று சொல்லி அதிகாரங்களைக் குவித்துக் கொண்டதனால், மாநில அரசுகள் உரிமை இழந்து வாடுகின்றன. இப்போக்கு நிறுத்தப்பட ஒன்றிய அரசு என்ற அரசியல் யாப்பின்படியான சொல்லாட்சி பயன்பாட்டில் நிலைக்க வேண்டும்!

மாநில அரசுகள் பந்தாடுப்படுவதற்கும் இந்தத் தவறான சொல்லாட்சியே காரணம். எனவே, இனி நாம், அரசியல்யாப்பின்படியான ஒன்றிய அரசு என்று சொல்லி உண்மையான ஒன்றிய அரசைப் போற்றுவோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல