தலைப்பு-அறநெறிப்பயிற்சி, இலக்குவனார் திருவள்ளுவன் ; thalippu_araneripayirchi_thevai_ilakkuvanar-thiruvalluvan

நீதித்துறையினருக்கு அறநெறிப் பயிற்சி தேவை!

 அரசின் நாற்பெரும் தூண்களுள் ஒன்றாக விளங்குவது நீதித்துறை. இந்தியாவில் மக்களாட்சி இந்த அளவிற்கேனும் இருக்கின்றது எனில், அதற்குக் காரணம் நீதித்துறைதான்.  பல்வேறு நேரங்களில் நீதிபதிகள் மக்களின் காவலர்களாக விளங்கும் வகையில் தீர்ப்பு வழங்குகின்றனர்’ இதனால் மக்கள் நம்பிக்கை மூச்சில் வாழ்கின்றனர்.  அதே நேரம் சட்டம் யாவர்க்கும் சமம் என்பது பொய்த்துப்போனதற்குக் காரணமும் நீதித்துறைதான் என்பதுதான் கொடுமையானது.   பல நேரங்களில் மக்களின் காப்புநிலையிலிருந்து நழுவித் தாக்கு நிலையில் காலூன்றுவதே இன்றைய தலையாய சிக்கலாகின்றது.

குற்றத்தின் அளவு, குற்றம் சாட்டப்பட்டவரின் சூழல், சட்டத்தின் ஆட்சி ஆகியவவற்றைக் கருத்தில் கொண்டு நடுவுநிலையாக நீதி வழங்க வேண்டியவர்கள் நீதிபதிகள். ஆனால், பதவி உயர்வு எதிர்பார்ப்பால் அரசின் அரவணைப்பு, சாதி, சமய,இன அடிப்படையில் பார்வை, வழக்குரைஞரின் செல்வாக்கு முதலியவற்றின்  அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புகளும் உள்ளன.

நிதிபதியின் தரமான தீர்ப்புகளுக்குச் சான்றாக இரு தீர்ப்புகளைச் சொல்லலாம்.

  மறுமணம் செய்ததால் காப்பீடு  தர மறுத்த  நிறுவனத்தாரிடம் மறுமணத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றுகூறி காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பது போன்ற மனித நேயம் சார்ந்தும்  சீர்திருத்தம் சார்ந்தும் தீர்ப்புகளை வழங்கி வருபவர் நீதிபதி விமலா.

  குமரி மாவட்டத்தில் காப்பியக்காடு என்னும் ஊரில் தனியார் நிலத்தில்  தொல்காப்பியர் சிலை வைப்பதற்குக் காவல்துறை எதிராக இருந்தது. இது தொடர்பான வழக்கில், நீதிபதி விமலா தொல்காப்பியத்தின் சிறப்பை உணர்த்தித் தடையை விலக்கியுள்ளார்.

  பாடங்களில் திருக்குறளைச் சேர்கக் வேண்டும் என்று தொடுத்த வழக்கில் நீதிபதி மகாதேவன் திருக்குறள் முழுமையும் படிக்கும் வகையில் திருக்குறளைக் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என்றார்.

  இருவருமே உலகின் மூத்த  தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தை அளித்த தொல்காப்பியருக்கும்  தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய உலகப்பொது நூலாம் திருக்குறளுக்கும் முதன்மை அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தீர்ப்பு  அளித்துள்ளனர்.

    இப்படி நல்ல தீர்ப்புகளை எலலா நீதிபதிகளும் வழங்கத்தான் செய்கின்றனர்..

  உண்மையின் பக்கம் பார்வை செலுத்தாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாக செம்மொழி தொடர்பான வழக்கின் தீர்ப்பைக் குறிப்பிடலாம். வழ.காந்தி செம்மொழி தொடர்பான மத்திய அரசின் வரையறைக்கிணங்கச் செம்மொழித்தகுதிகள் பிற மொழிகளுக்கு வழங்கப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்திருந்தார்., வெறும்  காலமூப்பு மட்டும் செம்மொழித் தகுதியாகாது. ஆனால், தனித்தியங்கும் ஆற்றலும் உயர்தனிச்சிறப்புமற்ற தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா  ஆகிய மொழிகளுக்குச் செம்மொழித் தகுதியேற்பு வழங்கியது முறையற்றது எனத் தெரிந்தும் மத்தியஅரசு முறைப்படி செயல்பட்டதுபோல் கருத்து தெரிவித்து மத்திய அரசிடமே முறையிடுமாறு தீர்ப்பு வழங்கியுள்ளனர். உண்மையின் பக்கம் நின்றிருந்தால் பிற மொழிகளுக்குச் செம்மொழித் தகுதியேற்பு வழங்கியது முறையற்றது எனத் தீர்ப்பு உரைத்திருக்க வேண்டும். அல்லது அவ்வாறு வழங்கியது சரியெனக்கருதினால், இன்னின்ன காரணங்களால் அவையும் செம்மொழியே எனத் தெரிவித்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் நீதிமன்றம் தலையிடுவதற்கு எந்தக் காரணமும் இல்லை எனத் தீர்ப்பு வழங்கி மத்திய அரசின் தவறான அறிந்தேற்பு ஆணைகளை மறைமுகமாக ஏற்றுக்கொண்டு நிலைக்கச்செய்துள்ளது எந்த வகையில் அறமாகும்?

  நீதிபதிகள் அவ்வப்பொழுது செய்திகள் அடிப்படையில் தாமே வழக்கைப் பதிந்து நடவடிக்கை எடுத்து அறம் வழங்கியுள்ளனர்.

 இராசீவு கொலை வழக்கில் அப்பாவிகள் எழுவர் சிக்க  வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் சுமத்தியவர்கள், உசாவியவர்கள், தீர்ப்பாளர்கள் எனப் பல நிலைகளில் உள்ளவர்களும் இவ்வழக்கு இட்டுக்கட்டப்பட்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் வெவ்வேறு நிலைகளில் வழங்கிய தீர்ப்புகள் உண்மையின் பக்கம் நில்லாமல் போனது ஏன்? உண்மையான சாந்தனைத் தான்தான் சுட்டுக்கொன்றதாக ஒருவன் கொக்கரித்த பின்பும் அப்பாவி சாந்தனை விடுதலை செய்யாதது ஏன்?

  பொய்யான விவரங்கள் தந்தும் உண்மையை மறைத்தும் தண்டனைக்குக் காரணமானவர்கள்,  மனந்திருந்தி உண்மை கூறியுள்ளனர். இருப்பினும் இந்திய நீதி மன்றம் தூங்குகின்றது. நீதிமன்றம் தானாகவே பதிந்து வழக்கில்  எழுவருக்கும்  விடுதலை வழங்காவிடட்டாலும் இடைக்காலமாகப் பிணை வழங்கலாம் அல்லவா? பின்னர் இவ்வாறு அப்பாவிகளைத் தண்டிக்கக் காரணமானவர்களிடம் உசாவி உண்மையறிந்து அதற்கிணங்க எழுவருக்கும் விடுதலை வழங்கலாம் அல்லவா?  விடுதலைக்கு வாய்ப்புகள் இருப்பினும் அவற்றை மறுப்பது இந்திய நீதித்துறைக்குக் களங்கம் என்பது புரியவில்லையா? தனி மனிதக் குடும்பத்தைக் காரணமாகக்கூறித் தமிழின எதிர்ப்பாகச்  செயல்படும் மத்திய அரசின் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அவர்கள் குடும்பம் நாளை இன்னலுறும் என்ற அச்சம் வரவில்லையா? அவர்கள் வழிமுறையினர்  துயரக்கடலுள்  மூழ்குவர் என்பது குறித்துக் கவலை யில்லையா?

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். (திருவள்ளுவர், திருக்குறள் 577)

நீதிபதிகளுக்குக் கண்ணோட்டம் வேண்டுமெனில் அவர்கள் அறஉணர்வு உள்ளவர்களாக இருந்தால்தான் இயலும்.

தமிழ்நாடு அறவாணர்கள் தலைமை தாங்கி நடத்திய நாடு. தான் தவறு செய்துவிட்டோம் என்று அறிந்த அளவில் உயிர்விட்டான் பாண்டிய  வேந்தன். தன் செய்கை தவறான எண்ணத்திற்கு வித்திடுகிறது  என உணர்ந்ததும் தன் கையைத் துண்டித்துக் கொண்டான் மற்றொரு பாண்டிய வேந்தன். அறத்தைக் காப்பதற்காகத் தங்கள் உயிர்களையே விட்ட தலைவர்கள் வாழ்ந்த நாடு இந்நாடு. ஆனால், இன்று அற வுணர்வு மங்கிக் கிடக்கின்றது. நீதிபதிகள் அறவுணர்வுடன் செயல்பட்டால் அறம் மீண்டும் தழைக்கும். எனவே, அவர்களுக்கு அறநெறிப்பயிற்சி தேவை.

அண்ணல் காந்தியடிகள், இந்தியா  முழுவதும் ஒற்றுமையுடன் இருக்க  வேண்டுமெனில் அனைவரும், மிகுதியான அறக்கருத்துகள் உடைய தமிழ்மொழியைப் படிக்க வேண்டும் என்றார். எனவே, பிற மொழியாளர்கள்  அல்லது தமிழறியாத் தமிழ்நாட்டவர்கள், நீதிபதவிக்கு வர வேண்டுமெனில் தமிழ் இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என வரையறுக்க வேண்டும்.

   சிறந்த வழக்குரைஞர்கள் நீதிபதிகளாகின்றனர். அவர்கள், தங்கள் கட்சிக்காரர்களைக் காப்பதற்காக உண்மையின் பக்கமாக வாதிட்டும் இருப்பார்கள்; உண்மைக்கு மாறாகவும் வாதிட்டு இருப்பார்கள். சிறந்த வாதத்திறமை உள்ளதாலேயே அறவாணர்களாக ஆகி விட முடியாது. நேடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பிற பதவிகளில் இருந்து பணிமாறியும் நீதிபதிகளாக வருபவர்கள், அவரவர் பட்டறிவு, கல்வியறிவு, பணியறிவு  அடிப்படையில்தான் வழக்கினை நோக்குவார்கள். ஆனால்,  எல்லாரும் அறவுணர்வுடன் திகழ்கிறார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, நீதிபதிகளுக்குத் தமிழ் இலக்கியங்கள் கூறும் அறநெறிகளைப் பயிற்சிவழி உணர்த்த வேண்டும். இப்பயிற்சி காலமுறை இடைவெளிகளில் பணிமுழுவதும் தொடர வேண்டும்.

தமிழ் அறக் கருத்துகளைச் சட்டப்படிப்பிலேயே பாடமாக வைக்க வேண்டும்.

நீதித்துறையினர் தாமாகவே முன்வந்து அறநெறிப்பயிற்சி அளிக்க முன்வரவேண்டும் எனவும்தமிழ்நாடு அரசு இதற்கென உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகின்றோம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை

அகரமுதல 152, புரட்டாசி 02, 2047 / செப்.18, 2016

அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo