நீதிமன்ற அணுகுமுறை அநீதிக்குத் துணை நிற்கிறது!

  தமிழ்நாடு சட்டமன்றத்தில் தகுதிநீக்கம் செய்யப்பெற்ற 18 ச.ம.உ.  முறையிட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வந்துள்ளது. ஆளுங்கட்சிக்குத் சாதகமாக அதே நேரம் நடுவுநிலைமையுடன் உள்ளதுபோல் இரு தீர்ப்புகள் வந்துள்ளன. தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்று வந்த தீர்ப்பு போல் பல வழக்குகளில் ஆளுங்கட்சிக்குச் சார்பாகவே தீர்ப்புகள் வந்துள்ளன. தகுதிநீக்கம் செல்லாது என்றால்  அரசிற்குக் கண்டம்தான். இப்பொழுது ஒரு நீதிபதி (மாண்பமை சுந்தர்) செல்லாது என்றாலும் மற்றோருவரான தலைமை நீதிபதி மாண்பமை இந்திரா (பானர்சி) செல்லும் என அறிவித்து விட்டார். ஆகப் பொதுவில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ளவும் பிறரை ஈர்க்கவும் ஆளும்அரசிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமிக்கும் சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சிதான். முன்னுரைக்காக இதைக் குறிப்பிட்டாலும் கட்டுரை குறிப்பிட விரும்புவது இதை யல்ல.

  காலங்கடந்த தீர்ப்பு அநீதிக்கு இணையானது என்பது நீதித்துறையின் முழக்கம். தமிழ்நாட்டுத் தலைமை நீதிபதி இந்திரா(பானர்சியும்) இதனை வலியுறுத்தி உள்ளார். குற்ற வழக்குகள், உரிமை வழக்குகள், பணியாளர் வழக்குகள், தேர்தல் வழக்குகள் என எப்பிரிவு வழக்காயினும் காலத்தாழ்ச்சியான தீர்ப்பு என்பது வாலாயமாக உள்ளது. இதனால், அப்பாவிகள் தண்டிக்கப்படுவது, உரிய தண்டனைக் காலத்திற்கு மேலும் விசாரணைக்காகச் சிறையில் இருப்பது, உடைமைகளை இழப்பது, குடும்ப நலம் பாதிப்பது, பணி நலன்களை இழப்பது, மக்களாட்சிக் கடமைகளை ஆற்ற முடியாமல் போவது, தகுதியற்றவர்கள் பயனடைவது போன்ற பல நலக்கேடுகள் நிகழ்கின்றன.

18 பேர் தகுதி நீக்கம்   தொடர்பான வழக்கின் போக்கும் இவற்றிற்கு ஒரு    சான்றாகும். பன்னீர் அணியினர் பதினொருவருக்கு ஒரு  வகையாகவும் தினகரன் அணியினர் பதினெண்மருக்கு வேறு வகையாகவும் தீரப்பு அளித்ததன் மூலம் இவற்றில் ஒன்று தவறு என்பதைப் பேரவைத் தலைவர் தனபால் வெளிப்படுத்திவிட்டார். மாநில மத்திய ஆளுங்கட்சிகளின் ஆதரவால் நடுவுநிலை தவறி நடந்துகொண்டதற்கு நாணவும் இல்லை அவர். தனி மனிதர் உயர் பாெறுப்பில் இருந்து செய்த தவறு  நாட்டுமக்களுக்குக் கேடு பயப்பதாய் அமைந்து விட்டது. இதன் தொடர்பில் பதினெண்மரும் தொடுத்த வழக்கு இவ்வாண்டு சனவரித்திங்கள் 23 ஆம் நாள்  கேட்பு முடிந்து தீர்ப்பிற்காக ஒத்தி வைக்கப்பட்டது.  தீர்ப்பு ஏறத்தாழ 5 மாதங்களை நெருங்கும் இப்பொழுதுதான் வந்துள்ளது.

  தீர்ப்பு ஒருவருக்குச் சாதகமாய் அமைந்தால் மற்றொருவருக்குப் பாதகமாய் அமையும். என்றாலும் தீர்ப்பு என்பது ஒன்றாகத்தான் இருக்க முடியும். இதனடிப்படையில் இவ்வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என்றால் வழக்கு  நீட்டிப்புக் காலத்தில் உரிய  தொகுதிகளின் மக்கள் தங்களுக்கான மக்கள் சார்பாளர் இன்றி இன்னலுற்றதற்கு என்ன பரிகாரம்? முன்பே தீர்ப்பு வந்திருந்தால் மறு தேர்தல் மூலம் தங்கள் தொகுதி உறுப்பினரைத் தேர்ந்தெடுத்து இருப்பார்கள் அல்லவா?

  தகுதி நீக்கம் செல்லாது என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் கடமையை ஆற்றமுடியாமல் போனதற்கும் மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்தவர்களால் உரிய பயனடையாமல் போனதற்கும்  யார் பொறுப்பு? இக்காலத்தில் பழிவாங்கப்பட்டுச் சட்டமன்றத்திற்குச் செல்ல முடியாமையால் பேரவையில் தொகுதித் தேவைகளைச் சொல்லி நிறைவேற்றவும்  சட்ட வாதுரைகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் பறி போயின அல்லவா?

 வழக்கு முடிவின் காலத்தாழ்ச்சியால் மக்களாட்சியின் மாண்பு சிதைக்கப்பட்டுள்ளது.   இனி  மறு  நீதிபதி உசாவல் நடைபெற்றுத் தீர்ப்பு வரும் வரையும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்குப் பாதிப்புதான்.

வழக்கினை நீட்டித்து மறு தேர்தல் வரை இழுத்துச் சென்றால், இவர்கள் வழக்கில் வெற்றி பெற்றாலும் பயனில்லை.  அல்லது தீர்ப்பு முடிவு எப்படியாக இருந்தாலும் மேல் முறையீட்டால் இது போன்ற நேர்வு மீண்டும்  ஏற்பட்டாலும் மக்களாட்சி என்பது கேலிக்குரியதாகிறது அல்லவா?

  மறு நீதிபதி உசாவலுக்குக் கால வரையறை  குறிப்பிட வேண்டும். அன்றாடம் வழக்கைக் கேட்டு மிகு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட  வேண்டும். இவ்வாறு செய்வதுதான் நீதித்துறைக்கும் மாண்பு; மக்களாட்சி முறைக்கும் மாண்பு. இது வரை நீண்ட காலம் எடுத்துக் கொண்டு இப்பொழுது கால வரையறை கேட்பது முறையா எனக் கருதக் கூடாது. தவறுகள் மீள நிகழாமல் தடுக்கப்படுகின்றன; திருத்தப்படுகின்றன எனக் கருத வேண்டும்.

தீர்ப்பு எதுவாயினும் விரைவில் வழங்கட்டும் உயர் நீதி மன்றம்!

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு. (திருவள்ளுவர், திருக்குறள் 482)

 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

 இதழுரை – அகரமுதல: வைகாசி 27, 2049 – ஆனி 02, 2049 / சூன் 10- 16, 2018