Ilakkuvanar+03

தமிழைக் காத்தவரை நாம் மறக்கலாமா?

நோபல் பரிசுத் தகுதியாளர்

புரட்சித்தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்

  விருந்தோம்பல், நன்றிமறவாமை முதலிய பண்புகள் தமிழ்மக்கள் கடைப்பிடித்து வருவனவாக இருப்பினும் மறதியும் நம்மைக் காத்தாரைப் போற்றாமையும் இன்றைய தமிழ் மக்களின் அரும் பண்புகளாகத் திகழ்ந்து நம்மைத் தலைகுனியச் செய்கின்றன. எனவேதான் தனக்கென வாழாமல் தமிழ்க்கென வாழ்ந்து மறைந்த தவப்புதல்வர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரைத் தமிழுலகும் மறந்து விட்டது; நம் சமுதாய மக்களும் மறந்து விட்டனர். சங்கத்தமிழை மீட்டுப் பரப்பிய அவர் புலமையும் தொண்டும் குறள் நெறியைப் பரப்பிய அவரின் சீரும் சிறப்பும் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் ஆக்கி அகிலமெங்கும் பரப்பிய அரிய முயற்சியும் நோபல் பரிசுக் குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பின் நோபல் பரிசினைத் தவறாமல் பேராசிரிய மணியாம் இலக்குவனார்ப் பெருந்தகைக்கே அளித்திருப்பர். ஆனால் தமிழ்நலம் கருதித் தன் வாழ்வை அமைத்துக் கொண்ட அவர் பெயரில் மணிமண்டபமோ பல்கலைக் கழகமோ ஆட்சி வளாகமோ சிலையோ இன்றைக்கு அமைக்கப்பட வில்லை.

  பேராசிரியரின் மாணவர்கள் துறைத்தலைவர்களாய், துணைவேந்தர்களாய், உயர் அதிகாரிகளாய், நீதிபதிகளாய், தூதர்களாய், அமைச்சர்களாய், பேரவைத் தலைவர்களாய்த் திகழ்ந்திருப்பினும் அவர் புகழ் நினைவு போற்றப்படுவதில்லை என்பது நமக்குத் தலைகுனிவான செயல் ஆகும். தமிழாய்ந்த தலைமகனாய் ஐந்தாம் முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் மாணவர்தாம். அவர்மீது பெருமதிப்பும் பேரன்பும் கொண்ட கலைஞர் அவர்கள், பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களைத் தமிழ்த்தாய் எனவே உருவகப் படுத்தியவர். உலகிலேயே மொழிக்கென சிறைசென்ற முதல் பேராசிரியர் அவர்களுக்குத் தனியாக நினைவு மண்டபம் அமைத்திருக்க வேண்டும். ஆனால் மொழிப்போர் தியாகிகள் மண்டபத்தில் நூற்றோடு நூற்றுஒன்றாகப் பேராசிரியர் படம் உள்ளது. இதனை உள்ளத்தில் இருத்திப், பேராசிரியர் நினைவாக ஏதும் நினைவகம் அமைக்க முத்தமிழறிஞரை வேண்டுகிறோம்.

  சங்கத் தமிழை வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும் என வாய்க் கொழுத்த சிலர் பேசியபொழுது கிளர்ந்தெழுந்து மக்களைத் திரட்டிச் சங்கத் தமிழ்ச் சிறப்பைப் பேராசிரியர் விளக்கியதுடன், ‘சங்க இலக்கியம்’ என்னும் இதழ் நடத்தியும் நாடெங்கும் சங்கஇலக்கியங்களைப் பரப்பியவர். புலவர்கள் சிலரிடம் மட்டும் இருந்த சங்க இலக்கியம் பாமரரும் அறியும் சிறப்பைப் பெற்றது. இத் தொண்டு பெற்ற பயனின் உச்ச அளவே இன்று கலைஞரின் சங்கத்தமிழ் உலகெங்கும் சிறப்பைப் பெற்றுள்ள நிலை.

  வகுப்பறைகளில் ஆங்கிலத்தில் குரல் கொடுத்த நிலையை மாற்றி,  ‘உள்ளேன் ஐயா’ எனக் குரல் கொடுக்கச் செய்தவர் – பிழையற்ற தமிழில் பேசவும் எழுதவும் பொதுமக்களை ஆயப்படுத்தியவர் – தனித்தமிழில் இதழ்கள் நடத்திப் புரட்சி செய்தவர் – தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்திப் பேராடியவர் – தமிழ்ப்பணிகள் காரணமாகப் பதவிகளை இழந்தவர் – பாரதிதாசனின் தமிழ் இயக்கப் பாடல்களுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் – செம்மொழி காக்கச் சிறை சென்ற செம்மல்- ஆராய்ச்சி அறிஞர் – வறுமையில் வாடிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவியவர் – தவறு செய்பவர் யாராயினும் இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் ஆகத் திகழ்ந்து கண்டித்தவர் – தமிழ் நலம் கெடும் இடங்களிலெல்லாம் தலையிட்டுப் புரட்சி செய்தவர்.

  இத்தகைய பேரறிஞர் வேறு சமுதாயத்தில் தோன்றியிருந்தார் என்றால் அளவிடற்கரிய சிறப்புகளைப் பெற்றிருப்பார். ஆனால், நம் சமுதாயத்தில் தோன்றிய தவக் குறைவால் உரிய போற்றுதலைப் பெறாமல் உள்ளார். மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு நிதியமைச்சர் முதலான மூத்த தலைவர்கள்தாம் அவரின் தூய வாழ்வையும் இழப்புகளையும் நன்கு உணர்ந்தவர்கள். நல்லாட்சி நடத்தும் தமிழக அரசு செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களுக்கு இறப்பிற்குப் பின் வழங்கும் விருதுகளை வழங்கியும் பேராசிரியர் நூல்களை நாட்டுடைமை ஆக்கியும் பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் படைப்பாளர்களுக்கும் இதழாளர்களுக்கும் விருதுகள் வழங்கியும் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்குப் பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரைச் சூட்டியும் தமிழ்ப்பணியாற்றிட வேண்டுகிறோம்.

தரவு: கூடல்மலர்

(2006-2007ஆண்டு அறிவிப்பின்படி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.)