படை வீரர்கள் மரணமும் கட்சி அரசியலும்

படையில் சேருபவர்கள் தாய் மண்ணைக் காதலிப்பதுடன் இறப்பையும் காதலிக்கிறார்கள். எனவே, போரில் இறப்பு நேரும் என்பதை எதிர்பார்த்து வீர மரணத்தை எதிர்நோக்கியே இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது நடைபெற்ற  புல்வாலா தாக்குதல் போர்ச்சூழலில் நிகழவில்லை; எதிரி நாட்டுடனான  போரின் பொழுது கொல்லப்படவில்லை. எதிரிநாட்டுடன் இணக்கமாக உள்ள    தீவிரவாதிகள் மேற்காண்ட தாக்குதல் இது. எனவே, இது கடுமையான கண்டனத்திற்கு உரியது.

சம்மு காசுமீர் மாநிலத்தில்  புல்வாமா மாவட்டத்தில் இரத்னிபோரா பகுதியில் மத்திய ஆயுதப்படைக் காவலர்கள்(சிஆர்பிஎப்) வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த ஊர்தி வரிசையில்  300 அயிரைக்கல்(கிலோ) எடை கொண்ட வெடிபொருட்களை விளையாட்டுப் பயன்பாட்டு (எசுயுவி)ஊர்தியில் (Sport-utility vehicle) ஏற்றிவந்து மோதச்செய்தனர். இத் தற்கொலைப் படைத்  தாக்குதலில் மோதப்பட்ட ஊர்தியில் இருந்த 44 வீரர்கள் பலியானர்.

தாக்குதல் தொடர்பான நடவடிக்கைகள் ஆளுங்கட்சியின் நலன்சார்ந்ததாக – கட்சி அரசியல் நோக்கில் – பிறர் பார்க்கின்றனர். எனவே, இதை அரசியலாக்க வேண்டா என்கின்றனர். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சி அரசியலாக்குவதாகக் கூறி அவ்வாறு கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றர்.

ஆனால்,  வீணான செலவுச் சுமையை மக்கள் மீது திணிப்பதுடன், வீரர்கள் உயிர்களையுப்  பலி கொடுத்தும் அவர்களின் குடும்பத்தினரைத் துயரத்தில் ஆழ்த்தியும் அரசியல் ஆதாயம் அடைவது ஆளுங்கட்சிகளின் செயல்களாகப் பன்னாடுகளிலும் பார்க்க முடிகிறது. நாம் நம் நாட்டு நிகழ்வுகளைப் பார்ப்போம்.

 முதல் உலகப் போரில் 74,000 இந்தியவீரர்கள் தங்கள் வாழ்வை இழந்தனர். இரண்டாம் உலகப் போரில் 87,000 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். இவர்கள் தவிர எதிரி நாடுகளால் சிறைவைக்கப்பட்டு இறந்தவர்கள் விவரங்கள் சரியாகத் தெரிவிக்கப்படவில்லை.  

பிற நாடுகள் நலன்கருதி நம் நாட்டு வீரர்கள் போரில் ஈடுபட்டு இன்னுயிர் இழந்தவை யாவும் அரசியலாக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளன. சிரீமாவோ பண்டார நாயக்காவிற்கு எதிராக உள்நாட்டில் – இலங்கையில் – ஆட்சிக்கவிழப்பு முயற்சிகள் நடைபெற்ற போது இந்திய வீரர்கள் சென்று காப்பாற்றினர். கலவரக்காரர்கள் என்றும் புரட்சிகாரர்கள் என்றும் சொல்லப்பெற்ற 30,000 சிங்களர்கள் இறந்தனர். அப்பொழுது இந்திய வீரர்களும் இறந்தனர். ஆனால், அவ்விவரம் சொல்லப்படவில்லை.

வங்காளத் தேச விடுதலைக்காக ‘முக்தி வாகினி’ என்ற பெயரிலும் வெளிப்படையாகவும் இந்தியப் போர் வீரர்கள் பங்கேற்ற பொழுது பலர் சாவைத் தழுவினர். விவரம் மறைக்கப்பட்டது. 

இலங்கையில்  தமிழர்களுக்கு உதவும் போர்வையில் இந்திய அமைதிப்படை சென்றதே அப்பொழுதும் இந்திய வீரர்கள் இறப்பைத் தழுவினர். தாம்பரத்தில் கூடப் பல வீரர்களின் உடல்களை வானூர்திகளில் கொண்டு வந்து இறக்கினர். ஆனால், வழக்கம்போல் விவரங்கள் மறைக்கப்பட்டன.

ஐ.நா.வின் பன்னாட்டுப் போர்ப்படையில் இந்திய வீரர்களும் உள்ளனர். பல நாட்டுப் போர்களில் இந்திய வீரர்களும் இறந்துள்ளனர். இவ்விவரங்களும்     தெரிவிக்கப்பட வில்லை. இவையெல்லாம் தெரிவிக்கப்பட்டால் வீரர்களின் மீதான கழிவிரக்கம் அரசின் மீதான வெறுப்பாக எதிர்ப்பாக மாறும் என்ற அச்சத்தால் சொல்லப்படவில்லை.

மேற்குறித்த நிகழ்வுகளில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டால் மக்கள் உணர்வுகள் அரசிற்கு அதிராகத் திரும்பும் என்ற அச்சமே ஆள்வோருக்கு இருந்தது.

அதே நேரம் மக்களின் துயர உணர்வும், நாட்டைக் காக்கும் உணர்வில் ஏற்படும் எழுச்சியும் ஆளுங்கட்சிக்குச் சார்பாக மாற்ற எண்ணும்பொழுது அரசால் அரசியலாக்கப்படும் என்பதே உண்மை.

வீரர்கள் இறந்த செய்தி அறிந்த பொழுதும் தலைமையர் ஆவணப்படப்பிடிப்பை  நிறுத்தாமல் தொடர்ந்து இருந்தைமையாலும் முன்னரே உளவுத்துறை எச்சரித்திருந்ததாலும் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு கண்டுங்காணாமல் இருந்துவிட்டதோ என்ற அச்சம் பலதரப்பாரிடம் உள்ளது.

இதைப்பற்றி மிகுதியாகச் சொன்னால் நாட்டுப்பகைவர் என்ற முத்திரை குத்தி செய்தியை மறைக்கப் பார்ப்பர் என்ற அச்சமும் எதிர்த்தரப்பாரிடம் உள்ளது.

எல்லா நாடுகளிலும் அவரவர் நாட்டு வீரர்கள் இறந்தால் வீரமரணம் என்பதும் எதிரி நாட்டு வீரர்கள் கொல்லப்பட்டால் கொக்கரிப்பதும் வழக்கமாக உள்ளது. ஆனால், எல்லா உயிர்களும் சமமே! உயிரிழப்புகள் தடுக்கப்பட போரில்லா பெருவாழ்வு தேவை.

எல்லா நாட்டு மக்களுக்கும் எதிரிகளைச் சிக்கலின்றி அணுகும் முறையும் அறவழியில் தீர்வு காணும் முறையும் கற்பிக்கப்படவேண்டும். மண்ணாசையும் தலைமைத்துவ அதிகார வெறியும் நீக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் போர் ஒழியும். அந்தச் சூழலில் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் அழிவதும் தடுக்கப்படும்.

  போரில் மடியும் வீரர்களை விட  அல்லலுறும் வீரர்களின் குடும்பத்தினர், மனச் சிதைவிற்கு ஆளாவோர், போதிய கல்வியை இழப்போர், வேண்டிய வளர்ச்சியை இழப்போர் மிகுதி. போர்களினால் பெண்களும் சிறுவர் சிறுமியரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே, போரில்லா உலகை அமைக்க எல்லா நாட்டுத் தலைவர்களும் முன் வர வேண்டும்.

பெரும் உலகப்போர் ஏற்பட்டு உலகமே அழியும் நிலை வராமல் இருப்பதற்காகவாவது அனைத்து நாடுகளும் குறள் நெறியைப் பின்பற்றித் தாக்குதல்களும் எதிர் எதிர்த் தாக்குதல்களும் போரில் கொண்டுபோய் முடிக்காதிருக்கப் பாடுபட வேண்டும்!

தற்கொலைப் படையாள் தாக்குதலில் உயிர் இழந்த காவலர்களுக்கு வீர வணக்கங்கள்!

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்

கழல்யாப்புக் காரிகை நீர்த்து (திருவள்ளுவர், திருக்குறள் 777)

 

இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல