பண்பிலார் அடிபணிகிறதே இவ்வுலகம்!- இலக்குவனார் திருவள்ளுவன்
பண்புடையோரைப் போற்றுவதன் மூலம் பண்பாளர் பெருகுவர். பண்பிலாரை ஒதுக்குவதன் மூலம் பண்பிலார் குறைவர். பண்புளாருடன் பழகப் பழக நம்மிடமும் நற்பண்புகள் பெருகும். பண்பிலார் பழக்கம் தீங்கினைத் தரும். இவையே பழந்தமிழர் பண்புநலனாக இருந்தன. ஆனால், இன்றைக்கு இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. செல்வமும் செல்வாக்கும் உள்ளவர் தீயராய் இருப்பினும் அவருடன் இழைவர். நற்பண்பாளர் குன்றிய செல்வமும் கீழான பதவியிலும் இருப்பின் அவரிடமிருந்து விலகுவர். இன்றைய சூழல் இவையே!
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று (மூதுரை 9)
என்னும் ஔவையாரின் நன்மொழியை மறந்து நல்லாரைப் பொல்லாராக எண்ணி ஒதுங்குகிறோம்.
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே – தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. (மூதுரை 10)
என்னும் ஔவையாரின் அறிவுரைக்கு இணங்கா மூடராய் வாழ்கிறோம்.
ஒருவர் நேர்மையானவராக இருப்பார்; நற்பண்புகள் உடையவராக இருப்பார்; அடுத்தவருக்கு உதவி வருவார்; ஆனால் வசதியற்றவராக இருப்பார். மற்றொருவன் குடியும் கூத்துமாகத் தீய பழக்க வழக்கங்கள் உடையவனாக இருப்பான். அதிகாரம் உடையவனாக இருப்பான்.அந்த அதிகாரத்தால் நமக்கு உதவி செய்திருக்க மாட்டான். எனினும் பொதுஇடங்களில் அவரும் அவனும் வந்தால், அவனுக்குத்தான் மரியாதை கிடைக்கும். அவனைச் சுற்றித்தான் கூட்டம் இருக்கும்.கயவனைக் காறித்துப்ப வேண்டா! பொதுஇடங்களில் ஒதுக்கிவைத்தாலாவது நாணப்பட்டுத் திருந்த வாய்ப்பு ஏற்படும் அல்லவா?
அலுவலகங்களில்கூட நேர்மையான அதிகாரியைவிட ஊழலதிகாரியைச் சுற்றித்தான் கூட்டம் இருக்கும். மேடைகளிலும் வெட்கமின்றிக் கூசாமல் ஊழல்வாதியைப் புகழவும் செய்வார்கள். ஊழல்வாதியைப்புகழும்பொழுது மேலும் அவன் அந்தப்பாதையில்தானே செல்வான். அலுவலக அறையைக்கூடக் காமக்கூடமாக மாற்றும் கயவன் சொல் கேட்க ஓடோடி ஒரு கூட்டம் வரும். தனக்குத் தரும்போலிப் பெருமையைக்கூட அவன் பயனாக்கிப் பெருமிதம் கொள்வானே தவிர, நல்ல திசைப்பக்கம் திரும்பிக்கூடப்பார்ப்பதில்லை.
அரசு அலுவலகங்களில்தான் இப்படி என்றில்லை. தனியார் அலுவலகங்களிலும் இதே நிலைதான். அலுவலகங்கள் என்றில்லை. கட்டடப்பணி, தையல்பணி முதலான பலர் பணியாற்றும் இடத்தில் மேற்பார்வை நிலையில் இருப்பவனுக்கு ஒவ்வொருவர் ஊதியத்தில் இருந்தும் பங்கு உண்டு. அத்துடன் பெண்களுக்குத் தொந்தரவு கொடுத்து இன்பம் காண்பவனாக அவன் இருப்பான். பொதுஇடங்களில் அவனுக்குத்தான் முதலிடம் (அல்லது முதல் மரியாதை) என்னும் பொழுது அதைப்பார்க்கும் அடுத்தவன் தானும் அந்த வழியில் செல்ல வேண்டும் என்று நினைப்பானா? அல்லது நல்ல வழியில் செல்ல வேண்டும் என்றுஎண்ணுவானா?
திரைக்காட்சிகளில், தொலைக்காட்சிகளில், கதைகளில் கற்பனைப் பாத்திரங்களுக்குத் துயரம் வரும் பொழுது கண்ணீர்விட்டுக் கலங்குகிறார்கள்! செய்திகளில் துயரச் செய்திகளைப் படிக்கும் பொழுதும்தாங்களும் துயரத்திற்கு ஆளாகிறார்கள்! ஆனால், நேரில் பார்க்கும் பொழுது வேடிக்கை பார்க்கிறார்களே தவிர, உதவ முன்வருவதில்லை! என்ன பண்பாடு இது!
தலைவனோ தலைவியோ தவறிழைத்துத் தண்டனை பெற்றால் வருந்துவது தவறில்லை. அவர்கள் விடுதலையடைய வேண்டும் என்று விரும்புவதிலோ இறை வழிபாட்டில் ஈடுபடுவதிலோ தவறில்லை. ஆனால், அவர்கள் தண்டனை பெற்றார்கள் என்பதற்காக, அப்பாவி மக்களின் உயிர் பறித்தும், உடலுறுப்புகளை இழக்கச் செய்தும் உடைமைகளைப் பறித்தும் அவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் மனம் எல்லாக் கட்சியினருக்கும் உள்ளதே! ஏனிந்தப் பண்பாடு? கட்சித்தலைவர்களும் தமக்காக விமானம் கடத்துபவர்கள், உயிரைப்பறிப்பவர்கள், பொதுமக்கள் சொத்துகளை அழிப்பவர்கள், வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்குத்தான் பதவிகள் அளித்து ஊக்கப்படுத்துகின்றனர். ஒருவர் நலனுக்காக ஊரையே பலியாக்குவது என்ன பண்பாடு?
இதே போல் தங்கள் தலைவர் இறந்தால் கட்டாயக் கடையடைப்புநடத்தி மக்களுக்குத் துன்பம் தந்து, பேருந்துகளை எரித்து, ஒல்லும் வகையெலாம் பிறருக்கு இன்னல் இழைத்து பிறர் இன்னுயிர் பறித்து அதில் இன்பம் காணும் கூட்டம் பெருகுகிறதே! அக்கூட்டத்திற்குத்தானே அரசியலில் சிறப்பு! ஏனிந்த நிலை?
தமிழ்நாட்டிற்கு அப்பால், இயற்கைப் பேரிடர்களாலும் போராலும் பிறவற்றாலும் துயரங்கள் ஏற்படும் பொழுது துயர்துடைப்பு நிதியை வாரி வழங்கும் தமிழ் மக்கள், நம் இன ஆருயிரான ஈழத் தமிழ் மக்கள் போரினாலும் இனப் படுகொலைகளாலும் ஏவுகணை, கொத்துக் குண்டு முதலானவற்றின் மூலமாகக் கூட்டம் கூட்டமாகவும் அழிக்கப்படுவது கண்டும் கேட்டும் கல்மனமாக இருப்பது ஏன்? எனப் புரியவில்லையே! தத்தம் தலைவர்கள் சொன்னால் வரும் துயர வெளிப்பாடு இயல்பாகப் பீறிட்டு எழும்பாதது ஏன்? கட்சித்தலைவர்களுக்குக் கொத்தடிமைகளாக இருக்கும் மக்கள் அவர்கள் சொன்னால் கூடுவதும் இல்லையேல் உதவாமல் ஓடுவதுமாக இருப்பது ஏன்? தலைவர்கள் தடம்புரண்டு தடுமாறிப் போகும் பொழுதும் அவர்களிடம் இடித்துரைக்காமல், அவர்கள் பின்னால் நடைபோடுவதில் பெருமை காண்பது ஏன்?
பெண்கள் தங்கள் மாராப்பு சற்று விலகினாலும் விரைந்து இழுத்திப் போர்த்தும் காலம் போய், எந்த அளவிற்கு உடை குறைவாக உடுத்துகிறார்களோ அதுவே நாகரிகம் எனக் கருதும் பண்பாடு எங்கே இருந்து வந்தது? தங்கள் பெண்குழந்தைகளைக் குழந்தைப்பருவத்திலிருந்தே இந்த (அ)நாகரிகத்தில் வளர்ப்பதைப் பெருமையாகக் கருதும் உலகமாக மாறிவிட்டதே நம் நாடு? பெண்கள் உடைகளைப்பற்றிக்கூறினால் கூறும் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல், ‘பெண்ணியத்திற்கு எதிரான ஆணாதிக்கம்’ என்று எதிர்த்துப் போராடுகிறார்களே தவிர, பண்பாட்டு அடிப்படையில் நாகரிகம் அமையவேண்டும் என்பதை ஏற்பார் இல்லையே!பெண்மையைத் துறக்கும் பெண்களுக்குக் கோயில் கட்டிக் கொண்டாடும் பண்பாடு வந்தது எங்ஙனம்? “மெதுவா, மெதுவாத் தொடலாமா” என்றுகேட்ட நிலை மாறி “என்னைக் கட்டிப்பிடிடா! ஒட்டி உறவாடடா” எனக் கேட்கும் நிலை வந்தது ஏன்? இப்பண்பிலாரே மதிக்கப்படுவது ஏன்?
“பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என்னும் பழமொழி அடிப்படையில் கவிஞர் கா.மு.செரீஃபு எழுதிய பாடலே இன்றைய நடைமுறையாக மாறிவிட்டதே!பெற்றோர் செல்வம் இருப்பினும் உழைத்து ஈட்டிப் பிறருக்கு உதவுவதே உண்மையான செல்வம் என்ற பண்பாட்டில் வாழ்ந்தவர்கள் பழந்தமிழர்கள். “செல்வத்துப் பயனே ஈதல்” (மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் : புறநானூறு 189) என்ற பண்பாடு மாறி அடுத்தவர் உழைப்பையும் செல்வத்தையும் சுரண்டுவதே வாழ்வின் பயன் என்ற நிலை எப்படி வந்தது? “பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டும் சுற்றத்தார்” (திருவள்ளுவர் :திருக்குறள் 521) அருகிப்போனதேன்?
கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு. (ஔவையார்: மூதுரை 26)
என்பதால்தான் கற்பவர்களை மாண்புடையவர்களாகக்கருதி மாணவர் என்றும் மாணாக்கர் என்றும் தமிழ் கூறுகிறது. ஆனால், இன்றைய மாணாக்கர்கள் மது மயக்கத்தாலும் கூடா ஒழுக்கத்தாலும் சீரழிகின்றனர்; சாதி வெறியாலும், கட்சி வெறியாலும் வெட்டுக்குத்து, கொலை முதலிய இன்னாச் செயல்களை இடையறாது ஆற்றுகின்றனர். பேருந்துப் பயணத்திலும்கூட அரிவாள் வெட்டுதான் என்ற நிலை நாளும் நம்மைக் கலக்குகிறது. இந்த நிலை வந்தது எவ்வாறு? பண்பாட்டுடன் வளர வேண்டும் என்ற பண்பு தொலைந்தது எங்கே? பண்பிலாரைப் போற்றும் உலகில் பண்பிலார்தானே உருவாகுவர்!
“இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.” (திருக்குறள் 920)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அறிவுறுத்தியும் இவையே வாழ்வில் இலக்கு எனக் கொண்டு வாழ்வோர் பெருகிவிட்டனரே! இன்ப நிகழ்வாக இருப்பினும் துன்ப நிகழ்வாக இருப்பினும் மது இல்லாமல் நடத்தக்கூடாது என்பதை நடைமுறையாகக் கொண்டு வாழ்வோர் பலராகி விட்டனரே! இத்தகைய பண்பிலார் பின்னர் உலக மக்கள் செல்வது ஏன்? பண்பிலார் பெறும் புகழில் மயங்கித் தாமும் பண்பு கெட்டுப் போகும் நிலை வந்தது எவ்வாறு?
பண்பற்ற செயல்களையும் அவற்றை அஞ்சாது செய்யும் பண்பிலாரைப் போற்றும் கொடுமையையும் அடுக்கிக் கொண்டே போகலாம். சுருங்கக் கூறின், பிறர்க்கென வாழுநரைப் போற்றாமல் தனக்கென வாழுநரைப் போற்றிக் கொண்டாடுவது ஏன்? ஏன்? ஏன்?
இதற்கான காரணங்களை அன்றே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா – இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா”
எனக் கூறி விட்டார். இந்நிலை மாறி, இன்னிலை எய்த
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்(திருக்குறள் 131).
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வழியில் நடப்போம்!
ஒழுக்கத்தைப் பேணுவோம்!
பண்புடையாரைப் போற்றுவோம்!
புரட்டாசி 26, 2045 / அக். 12, 2014
இதழுரை
Leave a Reply