பதிவுத்துறையின் தமிழ்ச் செயலாக்கத்திற்கு

முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம்

 

  தமிழ்நாட்டில் தமிழ்தான் ஆட்சி மொழி என்றாலும் இது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தைப் பெருமளவில் நிறைவேற்றிவந்த துறைகளில்கூட, இணையப் பயன்பாடு, கணிணிப் பயன்பாடு ஆகிய காரணங்களால் தமிழ் ஒதுக்கப்பட்டு வருகிறது. இவற்றிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த முடியும். என்றாலும்  தக்க வழிகாட்டியின்றியும், சோம்பல், ஆர்வமின்மை ஆகியவற்றாலும் ஆங்கிலப் பயன்பாடு பெருகி வருகிறது.

  இச்சூழலில் பதிவுத்துறையின் தமிழ்ப்பயன்பாட்டிற்கு எதிராக ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.

  பதிவுத்துறையில் பிற துறைகளைப்போலவே தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இணையப் பக்கங்கள் உள்ளன. ஆனால் குறிப்பிட்ட நேர்வில் தமிழில் மட்டுமே பதியும் முறையில் இருப்பதாகவும் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என்றும் வழக்குரைஞர் பிரகாசுராசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

  பதிவுத்துறையில் காலத் தாழ்ச்சியை இல்லாமல் ஆக்கவும் ஊழலுக்கு வழிவகுக்காமல் இருக்கவும் எளிய வெளிப்படையான ஆளுமை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துகள் அடிப்படையில் (simplified and transparent administration of registration) இது STAR என ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிறது. இதன் மேம்பட்ட புதிய வடிவம் ஃச்டார்(STRAR) 6.7 எனப்படுகிறது.

இதில் தமிழில் மட்டுமே பதிய முடியும் என்பதால் வழக்கு  தொடுத்துள்ளார்.

  சென்னையில் தகவல் துறையில் பணியாற்றுநர் வெளிமாநிலத்தவராக உள்ளமையாலும் அவர்கள் தமிழில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யாத  காரணத்தால், அவை மறுக்கப்படுவதாலும் ஆங்கிலம் தேவை என்கிறார். இதற்கு நாம் இசைந்தால் இந்தி, தெலுங்கு, மலையாளம் என ஒவ்வொரு மொழியினரும் இதே போல் கேட்டுப் பெறும் அவல நிலை மேலோங்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  எந்த நாட்டிலும் அந்த நாட்டு மக்கள் மொழியின் பயன்பாட்டிற்கு எதிராக ஒருவர் செயல்பட்டு மானமுள்ள மனிதராக நடமாட இயலாது. நம் நாட்டில்தான் தமிழுக்கு எதிரானவர்கள் செல்வாக்கு உள்ளவர்களாக உள்ளனர். அதனால்தான் துணிவாக அவர் வழக்கு  தொடுத்துள்ளார்.

  இவ்வழக்கில்(ஆகத்து24,2018 அன்று) நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணிய பிரசாத்து ஆகியோர் அடங்கிய அமர்வு மேம்படுத்தப்பட்ட இப்புதிய வடிவில் (எண் 6.7.) ஆங்கில மொழியிலும் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்த அரசுக்கு உத்தரவிட்டனர். இதனைச் செயல்படுத்தி 27.08.2018 அன்று அறிக்கை அளிக்குமாறும் ஆணையிட்டுள்ளனர்.

  இவ்வழக்கிற்கான கேட்பு நேற்று(ஆக,27) வந்தது. அப்பொழுது “பத்திரப் பதிவு விதிப்படி அந்தந்த மாநில மொழியில் தான் பத்திரம் பதிவு செய்ய முடியும். ஆங்கிலத்தைச் சேர்க்க முடியாது” என கொள்கை முடிவைக் காரணம் காட்டி தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.

  இந்த முடிவைத் தெரிவித்த தமிழக அரசிற்கும் செயலர் திரு க.பாலச்சந்திரன் இ.ஆ.ப., பதிவுத்துறைத்தலைவர் திரு குமரகுருபரன் இ.ஆ.ப. ஆகியோருக்கும் பாராட்டுகள். இக்கொள்கை முடிவில் உறுதியாக நிற்குமாறும் இணையப்பக்கம் முழுமையும் தமிழில் அமைய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகிறோம்.

 ஆனால்,  “பத்திரப்பதிவு முகப்புப் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவு செய்யும் வகையில் மென்பொருளை மாற்றக் கருதிப்பார்க்க  முடியுமா?” என்று நீதிபதிகள் கேட்டு வழக்கை வரும் 30.08 அன்று ஒத்தி வைத்துள்ளனர். இதில் காட்டும் விரைவைப் பிற வழக்குகளிலும் எதிர்பார்க்கிறோம்.

  பெரும்பாலும் அரசின் இணையப்பக்கங்கள் ஆங்கிலப் பயன்பாட்டிற்கு முதன்மை அளிக்கும் வகையில்தான் உள்ளன. தமிழ்நாட்டில் அயல்மொழிகள் ஆட்சி செய்வதால் மண்ணின் மக்கள் இடர்ப்படுகின்றனர். ஆங்கிலமறிந்தவர்கள் அல்லது வழக்குரைஞர்கள் மூலமே ஆங்கிலப்பயன்பாடு உள்ள இடங்களில் விண்ணப்பிக்கின்றனர். அவ்வாறிருக்க அயல்மொழியினர் தமிழ் உள்ள இடங்களில் வழக்குரைஞர்கள் மூலம் தத்தம் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம் அல்லவா?

  தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் முழுமையாக நிறைவேற்றப்படவும் அனைத்துத் துறைகளிலும் இணையப்பக்கங்கள் முழுமையும் (தமிழறியார் புரிந்து கொள்ள மட்டும் ஆங்கிலத்தில் தந்துவிட்டுத்) தமிழிலேயே பதியும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் மாண்பமை நீதிபதிகள் நெறியுரை வழங்க வேண்டும். பல நல்ல தீர்ப்புகளை வழங்கி வழக்காளர்கள் மனத்தில் இடம் பெற்றுள்ள மாண்பமை நீதிபதிகள் தமிழ் சார்பான நல்ல தீர்ப்பை வழங்கி உலகத்தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பெற வேண்டும்.

  தமிழ்வளர்ச்சித்துறை, பதிவுத்துறை தொடர்பான இவ்வழக்கில் தன்னையும் இணைத்துக்கொண்டு தமிழ்மட்டுமே இணையப் பதிவுகளில் இலங்கும் நிலைக்கு உயர் நீதிமன்றம் மூலம் ஆணை பெற வேண்டும்.

  விருதுகள், பொருளுதவிகள், விழாக்களில் சிறப்பாகச் செயல்படும் தமிழ்வளர்ச்சித்துறை ஆட்சிமொழிச் செயலாக்தக்தில் சுணக்கமே காட்டி வருகிறது. அரசு அலுவலகங்கள் பலவற்றில் சென்று பார்த்த பொழுது ஆங்கிலப்பயன்பாடே மிக்கு இருக்கும் வருந்தத்தக்க நிலையே காணப்பட்டது. ஏதேனும் துறையில் தமிழ்ச்செயல்பாடின்மை குறித்துத் தெரிவித்தால் எங்கள் துறைக்கு உரியதல்ல என உரிய துறைக்கு அனுப்பித் தகவல் தெரிவிக்கும் காலம் கடந்த பணியை மட்டுமே செய்கிறது. அவ்வாறில்லாமல் முனைப்புடன் செயல்படவேண்டும்.

  இவ்வழக்கின் மூலமே முதலில் குறிப்பிட்டவாறு முழுமையான ஆட்சிமொழிச் செயலாக்கத்திற்கான நெறியுரைகளையும் ஆணைகளையும்  தமிழ்வளர்ச்சித்துறை பெற வேண்டும்.

  அரசின் கொள்கை முடிவில் தலையிடுவதில்லை என்ற நீதிமன்ற நிலைப்பாட்டை இதிலும் கடைப்பிடிக்குமாறு மாண்பமை நீதிபதிகளை வேண்டுகிறோம்.

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.(திருவள்ளுவர், திருக்குறள் 111)

[பொதுநோக்கில் பாராமல் பகுதிதோறும் ஆராய்ந்து முறையோடு பொருந்தி நீதி வழங்குவதே நடுவுநிலைமை என்னும் அறமாகும்.]

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை, அகரமுதல