eezham02

ஐநா மனித உரிமை மன்றம்: பன்னாட்டு நீதிப் பொறியமைவே தமிழர் கோரிக்கை! – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே.பாரதி அறிக்கை

UNHRC

  ஐநா மனித உரிமை மன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா முன்மொழிந்து நிறைவேறிய தீர்மானத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பன்னாட்டுப் புலனாய்வுக் குழு தன் அறிக்கையை 16.09.2015 ஆம் நாள் ஐநா மனித உரிமை மன்ற 30 ஆவது கூட்டத் தொடரில் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஐநா மனித உரிமை மன்ற ஆணையர்  செய்யது அல் உசைன் அவர்களின் அறிக்கையும் வெளிவந்துள்ளது.

   இதுநாள்வரை தமிழர்களாகிய நாம் சிங்கள அரசின் மீது பட்டியலிட்டு வந்த குற்றச்சாட்டுகள் பன்னாட்டளவில் அறிந்தேற்கப்படவில்லை. பிரேமன் அறிக்கை, ஐநா மூவல்லுநர் குழு அறிக்கை, தப்ளின் தீர்ப்பாயத் தீர்ப்பு ஆகியவை நம் போராட்டங்களுக்கு வலுச் சேர்த்துள்ளது உண்மை. ஆனால், அவற்றில்  உள்ளவற்றைப் பன்னாட்டு ஏற்பாகக் கருதுவதற்கில்லை. முதன்முறையாகப் பன்னாட்டு மன்றத்தில் சிங்கள அரசின் மீதான குற்றச்சாட்டுகள் அறிந்தேற்கப்பட்டிருப்பது நமது நீண்ட போராட்டத்தின் குறிப்பிடத்தகுந்த வெற்றி!

    தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை, சித்திரவதைக் கூடம் அமைத்துச் செய்யப்பட்ட கொடுமைகள், வெள்ளைமூடூர்தி(வேன்) மூலம் காணாமலாக்கப்படல், கட்டமைக்கப்பட்டத் தொடர் பாலியல் வன்கொடுமை, உணவு, மருந்தைத் திட்டமிட்டுத் தடுத்துச் செய்த கொலைகள், சரணடைந்தோர் படுகொலை, இசைப்பிரியா,  பாலச்சந்திரன் படுகொலைகள் முதலான பல குற்றச்சாட்டுகளைச்  சிங்கள அரசின் மீது அறிக்கை சொல்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள்  மீதும் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் சிற்சில குற்றச்சாட்டுகளைப் புலிகளே ஏற்று வருத்தம் தெரிவித்தவைதாம். நம்மைப் பொறுத்தவரை விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளையும் சிங்களப் பேரினவாத அரசையும்  சமப்படுத்துவதை ஏற்பதற்கில்லை. அதேபோது பன்னாட்டுச் சட்டங்களின்  பார்வையில் இரு தரப்பினரையும் விசாரணைகுட்படுத்துவது புரிந்துகொள்ளக் கூடியதே. இலங்கை மீது சொல்லப்படும் போர்குற்றங்கள் முதலானவை  நீட்சி பெற்று முழுமைப்படுத்தப்படும் பொழுது அது இனப்படுகொலை எனும் முடிவைப் பெறும் என உறுதியாக நம்புகிறோம்.

     புலனாய்வு முடிவுகளின் மீது உள்நாட்டு நீதிமன்ற விசாரணை போதாது என்பதற்கு அறிக்கை முன் வைக்கும் காரணங்கள் பல. இலங்கையின்  குற்றவியல்  நீதித்துறையின் திறனின்மை; போர்க்குற்றம், மனித உரிமை மீறலைச் செய்த கட்டமைப்பின் நிலைத்தன்மை; சாட்சிகளைக் பாதுகாக்கப் பொறுத்தமற்ற பொறிமுறை;பன்னாட்டுக் குற்றங்களைக் கையாள்வதற்குரிய விதிகள் ஏதுமற்ற சட்ட அமைப்பு; பாதுகாப்புத் துறை, நீதித் துறையின் சிதைவு; அடக்குமுறைக் கட்டமைப்புகளில் மாற்றமின்மை; காணாமலடிக்கப்படுவதை ஒப்புக்கொண்டாலும் அதற்குரியோரைக் கண்டறியாததும் தண்டிக்காததும்; அதன்பிறகும் சில தருணங்களில் தொடர்ந்த வெள்ளைமூடூர்தி(வேன்) கடத்தல் – இத்துணைக் காரணங்களை முன்வைத்து உள்நாட்டு நீதிமன்ற விசாரணையை மனித உரிமை மன்றப் புலனாய்வு அறிக்கை அடியோடு மறுப்பது வரவேற்கத்தக்கது.

   உள்நாட்டு நீதிமன்ற விசாரணையை மறுத்துப் பன்னாடும் உள்நாடும்  இணைந்த கலப்பு நீதிமன்ற விசாரணையை அறிக்கை பரிந்துரைக்கிறது. உள்நாட்டு நீதிமன்ற விசாரணைக்கு எதிராக இலங்கை அரசின் மீது சொல்லப்படும் அத்துணைக் குற்றாய்வுகளும் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கும் பொருந்தும். கலப்பு நீதிமன்ற விசாரணை என்பதும் இறுதிப் பார்வையில் உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே! இருதரப்பினரின் போர்க்குற்றம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் குழுவில் புலிகளை இடம்பெறச் செய்வது எவ்வளவு  அபத்தம், அநீதி எனச் ப்பன்னாட்டு ஆளுமை கருதுமோ அதற்கு எவ்வகையிலும் குறைவில்லாத அபத்தம், அநீதி இலங்கை அரசை  இடம்பெறச் செய்வதுமாகும். வடக்கு மாகாணச் சபை முதல்வர் விக்னேசுவரன் அவர்கள் ” இவ்வழக்கை விசாரிப்பதற்கு இலங்கையைச் சேர்ந்த  தமிழ் நீதிபதிகளை நியமித்தாலும் கூட எமக்கு நீதி கிடைக்காது” எனக் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

     ஐநாவின் அறிக்கைக்குப் பிறகு கொழும்பில் நடைபெற்ற சூ.இரி.செயவர்த்தனே (J. R. Jayewardene)நினைவு நாள் நிகழ்வில் இலங்கைத் தலைமையாளர்(பிரதமர்) இரணில் விக்ரமசிங்கே பேசுகிற போது கலப்பு விசாரணை குறித்துப் பேசுவதை விடுத்துத் தேசிய விசாரணையை (உள்நாட்டு விசாரணை) முன்வைப்பதுதான் தேசியத்தைப் பாதுகாக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் தங்களுக்குச் சாதகமான விசாரணை வடிவத்தை நோக்கி இலங்கை அரசு நகர்ந்துவிட்டதை அவர் உரையிலேயே காண முடிகிறது. பன்னாட்டு ஒத்துழைப்புடன் உள்நாட்டு விசாரணை 2016 சனவரியில் தொடங்கப்படும் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா பேசியுள்ளார். கலப்புப் பொறியமைவு எனபது வேறு மங்கள சமரவீரா குறிப்பிடுவது வேறு.  சமரவீராவோ இரணிலோ கலப்புப் பொறியமைவு எனும் திரைமறைவில்  உள்நாட்டு நீதிமன்ற விசாரணைக்குத்தான் அடித்தளமிடுகிறார்கள். கலப்புப் பொறியமைவுக்கான ஆதரவு எனபது இறுதியாக இலங்கைக்குத் தப்பிக்கும் வழி திறந்துவிடத்தான் பயன்படப் போகிறது. நாம் எச்சரிக்கையோடு இருப்போம். முதலில் பன்னாட்டு விசாரணை என்றோம்; பன்னாட்டுப் புலனாய்வு என்றோம்; இப்போது பன்னாட்டு நீதிப் பொறியமைவு  என்போம்!

    தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய பன்னாட்டு நீதிப் பொறியமைவே வேண்டும் என இந்திய அரசு ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். இதற்கு மாறாக, உள்நாட்டுப் பொறியமைவு என்றோ, கலப்புப் பொறியமைவு என்றோ அமெரிக்கா முதலான எந்நாடு தீர்மானம் கொண்டு வந்தாலும் இந்தியா அதை எதிர்த்து வாக்களித்துத் தோற்கடிக்க வேண்டும். தமிழகச் சட்ட மன்றத் தீர்மானத்தின் மூலம் பன்னாட்டு நீதிப் பொறியமைவே  ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் கோரிக்கை என்பதைப் பறைசாற்றி உள்ளோம். இதற்கு இந்திய அரசை இணங்கச் செய்யும் வகையில் ஒட்டுமொத்தத் தமிழகமும் போராட முன்வர வேண்டும் என அழைக்கிறோம்.

-வே.பாரதி 

 98651 07107

kodi_flag_tha.the.vi.iyakkam

http://tamilthesam.org/?p=1007