பன்னீர்செல்வம் அணியினர் தகுதியிழப்பு

– தனபால் அறிவிப்பு

(கற்பனைதான்)

   சட்டப்பேரவைத்தலைவர் மாண்புமிகு ப.தனபால் இன்று திடீரென்று  ஊடகத்தினரை வரவழைத்தார். அப்பொழுது அவர்,  முதல்வர் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எதிராக வாக்களித்த பன்னீர் அணியைச்சேர்ந்த  11 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும் இப்பொழுது் தகுதி நீக்கம செய்த தினகரன் அணியினரின் தகுதி நீக்கத்தை விலக்கிக் கொள்வதாகவும் தி.மு.க. உறுப்பினர்கள் 21 பேர் மீதான நடவடிக்கையைக் கைவிடுவதாகவும் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது,

“ஆளாளுக்கு அம்மா ஆவி பேசியது, ஆதன்(ஆன்மா) பேசியது என்றெல்லாம் சொல்கிறார்களே! நம்முடன் அம்மா பேசினால் குழப்பம் தீருமே!

  ஆளுங்கட்சியிலிருந்து விலகாத பொழுதும் சட்ட மன்றத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்காதபோதும் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனத் தெரிவித்த பொழுது வானளாவிய  அதிகாரம் என அமுக்கி அறிவிக்கச் செய்து விட்டனரே!

 ஒடுக்கப்பட்ட பிரிவில் இருந்து முதல்வர் வருவது குடிமக்களுக்குச் செய்யும் நன்மையாயிற்றே! ஏற்றுக்கொண்டால் என்ன என்று எண்ணியபொழுது மோடிவித்தை காட்டி நாற்காலியில் கட்டிப்போட்டனரே!

  அரசிற்கு எதிர்த்து வாக்களிக்காத 18 பேரைச் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து தகுதி நீக்கம் செய்து அவர்கள் தொகுதியைக் காலியிடமாக அறிவித்தது சரி என்றால், அதற்கு முன்னர் அரசிற்கு எதிராக வாக்களித்த பன்னீர் அணியினரை அப்பொழுதே தகுதி நீக்கம் செய்யாதது சரிதானா?

 என்றெல்லாம் மக்கள் கேள்விக்கணைகளை எழுப்பும்போது குழம்பித் தவித்தேன்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழிகாட்டமாட்டார்களா என ஏங்கி அப்படியே தூங்கி விட்டேன்.

தூங்கும்போது கனவு வந்தது. கனவில் பேரொளி வந்தது. பேரொளியில் அம்மா தோன்றினார். “மகனே நீ ஏன் கவலைப்படுகிறாய்? நீ எல்லாருக்கும் பொதுவாகச் செயல்படுபவன் என்றுதானே உன்னைப் பேரவைத்தலைவராக ஆக்கினேன். அதை அப்பொழுதே கூறியுள்ளேனே!

 நீ, கட்சி உறுப்பினர்போல் செயல்பட்டுக் கட்சிக்காரர்கள் ஆட்டுவிப்பதற்கெல்லாம் ஆடலாமா?” என்று கேள்விகேட்டார்.

 பின் எனக்குச் சில கட்டளைகள் இட்டார். “இவற்றை நிறைவேற்று. குழப்பங்கள் தீரும்” என்றார்.

  பின்னர் ஒளி மங்கியது. அம்மா உருவமும் மறைந்தது. நான் உடனே விழித்துக் கொண்டேன். அம்மா கட்டளைகளை அப்படியே தாளில் எழுதி வைத்துக் கொண்டேன். அவற்றை நிறைவேற்றும் வகையில் இப்பொழுது் சில அறிவிப்புகளை வெளியிடுகின்றேன்.

  1. சட்ட மன்றத்தில் அரசிற்கு எதிராக வாக்களிக்காத நிலையில் தனிப்பட்ட உட்கட்சிச்சிக்கலால் கருத்து மாறுபாடு கொண்டு செயல்படுபவர்களைத் தகுதிநீக்கம் செய்தது தவறு என உணருகின்றேன். எனவே, தகுதிநீக்க ஆணையைத் திரும்பப்பெற்றுக் கொள்கின்றேன். இவர்களின் சட்டமன்றத் தொகுதிகள் ஒழிவிடங்களாக உள்ள என அறிவித்ததையும் திரும்பப் பெற்றுக்கொள்கின்றேன். இதன்படி இந்த 18 பேரும் இடை வெளியின்றிச் சட்டமன்ற உறுப்பினரக்ளாக நீடிக்கிறார்கள் என்று மறு ஆணை பிறப்பிக்கின்றேன்..
  1. முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி சட்ட மன்றத்தில் பிப்பிரவரி 18 அன்று காலை நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் அதற்கு எதிராகப் பன்னீர்செல்வம் உட்பட அவரது அணியினர் 11 பேர் வாக்களித்துள்ளனர். எனவே, இவர்கள் கட்சித்தாவல் சட்டப்படி பதவி வகிக்கத் தகுதியற்றவர் ஆகின்றனர். இவர்கள்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது தவறுதான். அதனைச் சரிசெய்யப் புரட்சித்தலைவி அம்மாவின் கனவுக் கட்டளைக்கிணங்க அவர்களைக் கட்சித்தாவுதல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றேன். பன்னீர்செல்வம் அணியினர் 11 பேரும் சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கிறார்கள். அவர்கள் இப்பொழுது ஆளுங்கட்சியுடன் இணைந்துள்ளார்கள். அவர்களிடம் உறுப்பினர் அட்டை கொடுத்து அவர்கள் கட்சியில் சேர்க்கப்படுவதற்குத் தடையில்லை. ஆனால், இதனால் இவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆக முடியாது– எப்பொழுது தகுதியிழந்துவிட்டார்களோ அப்பொழுதே அவர்கள் தொகுதிகள் ஒழிவிடங்களாகிவிட்டன. அதன்பின்னர் அவர்கள் தாய்க்கட்சியில் சேருவதால் புத்துயிர் பெறாது.  அவர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு உரிய எச்சலுகையும் பெற முடியாது. 6 மாதங்களுக்குள் அத்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கிறேன்
  1. சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் இருபத்தொருவர் (குட்கா முதலான) போதைப்பொருள்களைக் கொண்டு வந்தனர். ஆனால், தங்களின் பயன்பாட்டிற்கோ பிறரது பயன்பாட்டிற்கோ இதனைக் கொண்டுவரவில்லை. இதற்கு முன்பு சட்டப்பேவையில் இட்டிலி முதலானவை கொண்டுவந்து காட்டியதுபோல் பேரவைத்தலைவருக்கு, இவை எல்லாம் தாரளமாகக் கிடைக்கின்றன எனக் காட்டத்தான் கொண்டுவந்தனர். எனவே, இதனைத் தவறாகக் கருதியது தவறு. எனவே, அவர்கள்மீது எந்நடவடிக்கையும் இராது எனவும் இதுவரை அவர்களுக்கு எதிராக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கிறேன்.
  1. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சரவையினர், அல்லது அவரது அணியினர் அல்லது அவர்கள் சார்பாக யாரும் பேரவையில் நம்பிக்கை பெறும்வரை என்னைச் சந்திக்கக்கூடாது. என்னிடம் எதுவும் தெரிவிக்க வேண்டும் என்றால் மின்னஞ்சலில் தெரிவிக்கலாம். அல்லது ஊடகம் வாயிலாகவும் கருத்தைத் தெரிவிக்கலாம். ஆனால், அத்தகைய கருத்து உரிமை மீறலாக இருந்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  1. தினகரன் அணியினர், முதல்வர்மீதுதான் நம்பிக்கையின்மையைத் தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியின் மீதல்ல. எனவே, எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற ஆளுங்கட்சி உறுப்பினர் கூட்டத்தைக் கூட்டித் தன் மீதான நம்பிக்கை வாக்கைப் பெற வேண்டும். சட்டமன்றத்தில் தேவையான பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றால் அவரே முதல்வராக நீடிப்பார் இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. மாறாக அவர் கட்சி உறுப்பினர்களின் போதிய பெரும்பான்மையைப் பெறத் தவறினால் ஆளுங்கட்சியினர் வேறொருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அவர் ஆட்சி அமைக்கும் உரிமையைப் பெற வேண்டும். கட்சி ச.ம.உறுப்பினர்களிடம், சட்டமன்றத்திற்குத் தேவையான  பெரும்பான்மை ஆதரவைப் பெற்றால் யார்மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் தேவையில்லை. எனவே, அதற்கு இசைவளிக்கப்படமாட்டாது.

இவையாவற்றையும் புரட்சித்தலைவி அம்மா கனவில் இட்ட கட்டளைகளுக்கிணங்கத் தெரிவிக்கின்றேன் எனவும் இவற்றுக்கு எதிராகப் பேசுவோர்  மீது சட்டமன்றத்தை அவமதித்ததாக வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கிறேன். இதற்கு முன்பு நான் எடுத்த முடிவு அப்போதைய சூழலில் எனக்குச் சரியெனப்பட்டதால் எடுத்த  முடிவு எனவும் எனினும் தவறாகப் படுவதால் அதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவிக்கிறேன்.”

இவ்வாறாகச் சட்டமன்றப் பேரவைத்தலைவர் மாண்புமிகு ப.தனபால் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

  இதைக்கேள்வியுற்ற தினகரன் அணியினரும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் மக்களாட்சி மீண்டும் மலர்கிறது என மகிழ்ந்தனர். தொடர்பான வழக்குகளுக்கு இனிமேல் வேலையில்லை. எனவே, அவற்றைத் திரும்பப்பெற்றுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

 பிற  எதிர்க்கட்சியினரும் இவற்றை வரவேற்றனர். பொதுமக்களும் தனபால் தானாகவே முடிவெடுக்கும் நிலைக்குப் புரட்சித்தலைவியின் ஆவி உதவியது  அறிந்து  வியந்தனர். அதே நேரம் பாசகவின் முகவரான ஆளுநர் இனி என்ன  செய்ய முடியும்? பாசகவின் கனவு தகர்ந்து விட்டதே என்றும் கூறிக்கொண்டனர்.

(கற்பனைதான்! என்றாலும் இப்படியெல்லாம் நடந்தால் நன்றாகத்தானே இருக்கும்)

இலக்குவனார் திருவள்ளுவன்