பன்னீர் தொடர்தலே சாலவும் நன்று!

  மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். ஆனால், முதலிரு முறையும் முதல்வர் என்ற பெயரில் இரண்டாமவராகத்தான் இருந்தார். இப்பொழுதுதான் உண்மையாகவே முதல்வராகவே பொறுப்பேற்றுள்ளார் எனலாம். எனவே, அவரது தனித்த செயல்பாடுகள் வெளிவருகின்றன.   ‘வருதா’ புயல் என்னும் பெரும் சூறைக்காற்றின் பொழுது எடுத்த நடவடிக்கையும், களத்திலிருந்து சிக்கல்களை எதிர்நோக்கி அலுவலர்களை ஒருங்குபடுத்தி ஆவன செய்தனவும் அனைத்துத் தரப்பாரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

  இப்பொழுது சிலர் சசிகலாவே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். ஆனால், அவர் இதுவரை கட்சிப்பொறுப்பு குறித்தோ ஆட்சிப் பொறுப்பு குறித்தோ எதுவும் சொல்லவில்லை. அவரே இரண்டின் பொறுப்பையும்  ஏற்க வேண்டும் என்று கட்சியினர் விரும்புவதில் தவறில்லை. ஆனால், ஒரு வகையில் காலம்கடந்த செயலாகவும் மற்றொரு வகையில் காலத்திற்கு முந்தைய செயலாகவும் உள்ளது இம்முழக்கங்கள்.

  செயலலிதா இறந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தை இடைக்கால முதல்வராகத் தேர்ந்தெடுத்திருக்கலாம் / அல்லது அமர்த்தியிருக்கலாம். (1969 இல்  அறிஞர் அண்ணா இறந்தபொழுதும் 1987இல் எம்ஞ்சியார் இறந்தபொழுதும் என) இரு முறை நாவலர் நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராக இருந்தமையையும், குல்சாரிலால் நந்தா (1964இல் சவகர்லால் நேரு இறந்தபொழுதும் 1966இல்இலால் பகதூர் சாத்திரி இறந்தபொழுதும் என) இருமுறை இடைக்காலத் தலைமையமைச்சராக இருந்தமையையும்  முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அறிவர்.

  இம்முன் நிகழ்வுகள்போல், ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால முதல்வராகப் பொறுப்பேற்றிருப்பின் இப்பொழுது முதல்வர் பொறுப்பு குறித்துப் பேசுவதும் செயல்படுவதும் பொருத்தமாக இருக்கும். ஆனால், இடைக்கால முதல்வர் என்னும் நிலை வேண்டா என முடிவெடுத்து முதல்வராகப் பொறுப்பில் அமரச் செய்ததும் இப்பொழுது முதல்வர் பொறுப்பு குறித்துப் பேசுவது நிலையான ஆட்சிக்கும்  கட்சியின் ஒற்றுமைக்கும் உலை  வைக்கும்.

  செயலலிதா இருந்த பொழுதே சசிகலா சட்டமன்ற உறுப்பினராவதும் ஆட்சிப் பொறுப்பில்  பங்கேற்பதும் இயலாதன அல்ல. ஒரு வேளை பிறர் எழுதுவது போல், அப்பொழுது செயலலிதா  இவற்றுக்கு எதிரான நிலையில் இருந்திருந்தாலும் உடன்பிறவாத் தங்கை வற்புறுத்தியிருப்பின் மறுத்திருக்க மாட்டார். இத்தகைய பொறுப்புகள் உடன்பிறவாத் தமக்கையின் நலனைக் கவனிப்பதில் இருந்து விலகச் செய்துவிடும் என்பதாலேயே  விரும்பாமல் இருந்திருப்பார். எனவே, செயலலிதா மறைந்ததும் இடைக்கால முதல்வரைப் பொறுப்பேற்கச் செய்து பின்னர், இவரை முதல்வராகத் தேர்ந்து எடுத்திருக்கலாம். ஆனால், ஓ.பன்னீர் செல்வம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் பொறுப்பை வகிக்கும் சூழலில் இத்தகைய முழக்கங்கள் எழுவது நாட்டு நலனுக்கு நல்லதல்ல.

  அவரும் எப்பொழுது பதவி காலியாகும் என்ற எண்ணத்தில் முழு ஈடுபாடுகளிலிருந்து விலகலாம். பிறரும் இவர்தான் மாறப்போகிறாரே, வரப்போகிறவருக்குத் துதி பாடுவோம் என்று எண்ணி இவரை அலட்சியப்படுத்தலாம். அமைச்சர் பெருமக்கள் மட்டுமில்லாது அதிகாரிகள் மட்டத்திலும்  இந்நிலை தோன்றுவது  இயற்கையே. இதனால் அரசின் பணிகளில் சுணக்கமும் குழப்பமும் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. எனவே, அவர் முழுமையாகப் பணியில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும்.

  சசிகலா போட்டியிடுவதாக இருந்தால், பலர் பதவி விலக முன்வருவர் என்பதால், அவர் எப்பொழுதும்  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இயலும். எனவே,  இப்பொழுது  மேனாள் முதல்வர் செயலலிதா மறைவால் வெற்றிடமான இராதாகிருட்டிணன் நகர்த் தொகுதியில் போட்டியிடாமல் இருத்தல் நன்று. இதனால் இவர் முதல்வராவார் என ஊடகங்கள் கிளப்பும் புரளிகள் அடங்கும்.

  அதே நேரம் மத்தியில் ஆட்சியில் பங்கேற்கும் சூழல் வந்தால்,  ஓ.பன்னீர்செல்வத்திற்கு மூத்த அமைச்சர் பொறுப்பு கிடைக்கச்செய்து, அதனால் ஏற்படும் வெற்றிடத்தின்பொழுது சசிகலா முதல்வராகலாம்.  இத்தகைய பெருந்தன்மை சசிகலாவிற்குப் பெருமையையும் புகழையும் சேர்க்கும். எனவே, இப்போதைய புரளிகளுக்கு முற்றப்புள்ளி இடும் வகையில் அவர் பன்னீரே முதல்வராகத் தொடருவார் என அறிவிக்க வேண்டும்.

  ஒருவரிடம் ஒரு பொறுப்பை  ஆராய்ந்து ஒப்படைத்த பின்பு, அவரை அதற்குரியவராக முழுமையும் ஆக்குதல் வேண்டும். உரியவராக ஆக்குதல் என்றால் கட்டுப்பாட்டைத் திணிக்காமல் அவராகச் செயல்படும்வகையில் விட்டுவிட வேண்டும். இவ்வாறு தெய்வப்புலவர் திருவள்ளுவர் நமக்கு அறிவுரை  வழங்கியுள்ளார்.

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரிய னாகச் செயல். (திருவள்ளுவர், திருக்குறள்:518)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை : அகரமுதல 165,  மார்கழி 03, 2047 /  திசம்பர் 18, 2016