செஞ்சீனா சென்றுவந்தேன் 10 – பொறி.க.அருணபாரதி
(ஆவணி 1, 2045 /ஆகத்து 17, 2014 இதழின் தொடர்ச்சி)
மன்னராட்சி ஒழிந்தது..
மன்னர் இன்னும் வாழ்கிறார்..
சியான்(Xi’an) என்றழைக்கப்படும் இந்நகரம் முன்பு சங்கன்(Chang’an) என அழைக்கப்பட்டுவந்துள்ளது. கி.பி. 618இலிருந்து 904 வரை (இ)டாங்குஅரசகுடும்பத்தினர், சங்கன்பகுதியைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சிபுரிந்துள்ளனர். முந்தைய மன்னராட்சிக் காலங்களைவிட, (இ)டாங்கு மன்னராட்சிக் காலத்தில்தான் சீனாவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதெனப் பலவரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மன்னராட்சி கோலோச்சிய இந்நகரத்தில், மன்னராட்சி மரபின் அடையாளமாகக் காணப்படும் சில இடங்களைச் சுற்றிப் பார்க்கும் ஆவலுடன் நகரப் பேருந்துக்காக நின்றோம். பேருந்துக்காகக் காத்திருப்போர் வரிசையாக நிற்க, பேருந்து வந்தவுடன் ஒவ்வொருவராகப் பேருந்தில் ஏறினோம்.
அரசுப்பேருந்துகள் இயங்கும் முறை அருமையாக உள்ளது. பேருந்துக்குநடத்துநர்கிடையாது. பயணம் செய்யும் ஒவ்வொருவரும், ஓட்டுநருக்கு இடப்பக்கம் உள்ள உண்டியல் ஒன்றில் 1 யான் போட்டுவிட்டே பேருந்தில் ஏற வேண்டும். முன்பக்கம் உள்ள ஒரே வழியில்தான் பேருந்தில் ஏற முடியும். நடுப்பகுதியில் இறங்கமட்டுமே முடியும். எனவே, உள்ளே இருப்பவர்கள் அவரவர் பகுதி வந்தவுடன் கதவு திறந்தவுடன் நடுப்பகுதி மூலமாக இறங்குகிறார்கள். கூட்ட நெரிசலிலும் முன்பக்கம் வந்து காசைப் போட்டுவிட்டுத்தான் பேருந்தில் ஏறுகிறார்கள்.
(இ)டாங்கு(Tang) மன்னராட்சியின் தலைநகரமாக விளங்கிய இன்றைய சியான் நகரம், இன்றைக்கும் அந்த (இ)டாங்கு மன்னர்களின் மரபுப் பெருமிதங்களை மறந்துவிடவில்லை என்பதை இந்நகரைச் சுற்றிப் பார்க்கும்போது புரிந்தது. பல இடங்களில் பல கடைகள்’ (இ)டாங்குமரபு’ / ‘Tang Dynasty’ என்றபெயரைத்தாங்கிநிற்கின்றன.
மன்னராட்சியை ஒழித்துக் கட்டிய சீனப் பொதுவுடைமைப் புரட்சியாளர்கள், தமிழகத்திலுள்ள பொதுவுடைமை/ திராவிட இயக்கவாதிகள் போல, அந்த மன்னர்மரபினருக்கு எதிராகக்குரல் கொடுத்து, அவர்களை இழிவுபடுத்துவதில்லை. 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு, (இ)டாங்கு மன்னர்களின் ஆட்சிமுறை முதலான அருமை பெருமைகளை விளக்கும் வகையில் சியான் நகரில் (இ)டாங்கு மன்னர்களின் கலைப்படைப்புகளை இன்றைக்கும் அழகுறக் காட்சிப்படுத்தியுள்ளது சிறப்பாக இருக்கிறது. அவ்வாறு காட்சிப்படுத்தியிருக்கும் இடங்களில் ஒன்றுதான்‘(இ)டாங்கு பூங்கா’!
சீனாவின் ஃகன் தேசிய இன மக்களின் மரபுப்பெருமைகளைப் பாதுகாத்துவைக்கும் காரணத்தால், சீனாவில் மீண்டும் மன்னராட்சி எழுந்துவிடவில்லை. ஆனால், தமிழ்நாட்டிலோ இராசராச சோழனின் சிறப்புகளைக் கூறினாலே, நீங்கள் மன்னராட்சி முறையை மீண்டும் கொண்டுவர முற்படுகிறீர்கள் என நகைக்கத்தக்கவகையில் குற்றச்சாட்டு வாசிக்கிறார்கள்.
கி.மு. 221இலிருந்து 207 வரை சங்கன்(சியான்) நகரை ஆட்சி செய்த குவின்(Qin) பேரரசு, அங்கிருந்த நகரின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த ஒரு ஏரியைப் பூங்காவாக புனரமைத்தது. பின்னர், கி.பி. 618இலிருந்து 907 வரை ஆண்ட(இ)டாங்கு (Tang) பேரரசு அந்தப் பூங்காவை மக்கள் பார்வைக்கான பொது இடமாக மாற்றி வடிவமைத்தது. அந்த ஏரியின் கரையில் கவிஞர்கள் கவிதைகள் எழுதியதும், மக்கள் ஆடிப் பாடியதும் எனப் பல நிகழ்வுகள் சீன இலக்கியங்களில் பதிவாகின. 2008ஆம் ஆண்டு சீன அரசு, இந்த இரண்டு பேரரசுகளின் காலத்திலும் அந்த ஏரி எப்படி இருந்ததோ அவற்றையெல்லாம் சான்றுகளோடு பதிவு செய்து, அந்தப் பூங்காவைப் புதுப்பித்தது.
ஒரு கவிஞர் எந்த இடத்தில் நின்று கொண்டு கவிதை இயற்றினாரோ, அதே இடத்தில் அவர் கவிதை எழுதுவதைப் போல ஒரு சிலை எழுப்பி, அங்கு அந்த கவிதையையும் எழுதி வைத்துள்ளனர். அங்குள்ள புல்வெளிகளின் மறைவிடத்தில், பதியப்பட்டுள்ள ஒலிபெருக்கியின் வழி அந்தக் கவிதை இசையுடன் வாசிக்கப்படுகின்றது. நமக்கு அந்த மொழி புரியவில்லை என்றாலும், அந்த இசையும் இராகமும் அப்பூங்காவை சுற்றியிருந்த பனியும் குளிரும் மனத்தை விட்டு அகலாமல் இருக்கின்றன.
(இ)டாங்கு மன்னராட்சியின் இரண்டாம் பேரரசர் தைய்சங்(கு) என்றழைக்கப்பட்ட (இ)லீ சிமின் என்ற மன்னர்,(Emperor Taizong, Li Shimin–李世明) சீன வரலாற்றில் குறிப்பிடத்தகுத்த மனிதராவார். சீனாவின் முக்கிய அரசராகப் போற்றப்படும் இவர் தமது அரசின் அலுவலகக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தது பல ஆராய்ச்சியாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
செங்குவான் என்ற மரபில் வந்த மன்னர் ஒருவர் தனது படை பரிவாரங்களுடன் கோபத்துடன் போருக்குச் செல்லுவது போல் மிகப்பெரிய அளவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மன்னருக்கு முன் போர்ப்பறை அறைந்து கொண்டு இருவர் செல்லும் சிற்பம் என்னை மிகவும் கவர்ந்தது. மிக ஆவேசத்துடன் போர்ப்பறையை வீரர்கள் இருவர் அடிக்கும்படி அச்சிற்பம் அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு, மன்னர்களின் வீரம், ஆட்சித்திறன், ஆட்சிமுறை ஆகியவற்றை இப்பூங்காவில் ஆங்காங்கு காட்சிப்படுத்தியிருந்த சீனஅரசு, ஓரிடத்தில் கவிஞர்களுக்காகவே ஒரு பூங்காவைக் கட்டியிருப்பது அதனினும் சிறப்பாக இருந்தது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் நிகழ்கால உண்மைகள் நெஞ்சில் நிழலாடின. தஞ்சையில் உலகமே வியக்கும் வண்ணம் ஒரு மாபெரும் கலைப்படைப்பை உருவாக்கிய மன்னர் இராசராசனின் சிலையை , இன்றுவரை அந்தக் கோயிலுக்குள் நம்மால் வைக்க முடியவில்லை. இராசஇராச மன்னனின் குடவோலை முறை, பறையருக்கும் இறையிலி வழங்கிய அவரது சமத்துவப் பார்வை, நில அளவீ்ட்டு முறை என இராச இராசனின் எத்தனை அருவினைகளை நாம் காட்சிப்படுத்தி யிருக்கவேண்டும்?
இராசராசச் சோழன்
Leave a Reply