பவளவிழா காணும் திருவேலன் இலக்குவனாரின் பணியாளுமைகள்

 

  ‘திருவேலன் ஒரு  பொறியாளர்’ என்று மட்டும் அறிந்திருப்போம். ஆனால் விரிந்து பரந்த அறிவு மிக்கவர். தரக்கட்டுப்பாட்டை நிலைப்படுத்தல், மேம்படுத்தல், ஆய்விடல், பயிற்சி யளித்தல் எனப் பல்துறைத் தொழில் நுட்பட அறிவராகத் திகழ்கிறார். வெளிநாடுகளில் பணியாற்றியதால் ஆங்கிலம்,செருமானியம், சப்பானியம்முதலான பல மொழிகள்  அறிந்தவர். பன்மொழிகள் அறிந்திருந்தாலும் தாய்த்தமிழை மறக்காதவர்.

  பொறியாளராகப் பல நாடுகளில் பணியாற்றியவர் எனப் பொதுவாக எண்ணுவதைவிட அவர் எத்தகைய பணியாற்றிவர், ஆற்றிவருபவர் என்பதை அறிந்தால்தான் அவரின் சிறப்பை உணர முடியும். எனவே,  அவரின் பணிச்சிறப்பில் ஒரு பகுதியைக் காண்போம்.

 திருவேலன் இலக்குவனார் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் உருவான பொறியாளர். படிப்பு முடிந்ததும் பணியில் சேர்ந்தவர் மின்னியல்  பொறியாளராகப் பட்டம் பெற்றவர், பிற துறைகளிலும் தன் படிப்பறிவை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டார். படிப்பறிவும் பணியறிவும் பணிச் செம்மையும் இவரை மேலும் மேலும் உயர்த்தின.

  இயந்திரஅகச் செயற்பாங்கு மேலாண்மை உட்பட கொள்முதல் ஆய்வு,  தரப்பாட்டு முறைமைகள், நெறிப்படுத்தல், பயிற்சி யளித்தல் முதலியவற்றில் 17 ஆண்டுகள் பட்டறிவு மிக்கவர் பொறியாளர் திருவேலன்.

 பொறியியலகங்கள் ஆய்வு, தரக்கட்டுப்பாடு, அணுத்திறன் உட்பட இயந்திரத்தொகுதிகள் செயற்பாங்கில் தர உறுதிப்பாடு அளித்தல் முதலானவற்றில் 28 ஆண்டுகள் பட்டறிவு மிக்கவர். இவற்றுள் 13ஆண்டுகள் இங்கிலாந்து, மேற்கு ஐரோப்பிய நாடுகள், சப்பான் ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

  மின்கலன்கள், மாழைகள்(உலோகங்கள்) அரிமானம் தொடர்பான மின்வேதியியலில் ஆராய்ச்சி மேம்பாட்டுப்பணிகளில் 5 ஆண்டு பட்டறிவு,  இந்திய அணுவாற்றல் துறையில், தரக்கட்டுப்பாடு, ஆய்வு, வடிவமைப்பு, உற்பத்தி,  கட்டமைப்புகளில்   தர உறுதிப்பாடு,முதலிய பணிநிலைகளில் ஓராண்டு(1969-70) பணியறிவு மிக்கவர்.

    தர உறுதிப்பாடு, தரக்கட்டுப்பாடு,  இயந்திரப்பொறியாளர் அமெரிக்கக் கழகத்திற்கான(ASME)  இயந்திரத்தொகுதிகள், கருவிகள் தொடர்பிலான சிதைவுறா மதிப்பீடும் பற்ற வைப்பில் ஆய்வுப்பணியும் மேற்கொண்டு திறம்படச் செயலாற்றியவர்.  நிகழ்முறை இடைமுகப் பயனீட்டிற்கான(API)   பூசிய, பூசா நேரிய, வளைகுழாய்கள் தொடர்பான பணிகளும் இவற்றில் அடங்கும்.

  சப்பான், மேற்கு ஐரோப்பியநாடுகளில் உள்ள  பேரளவு எஃகு, பைஞ்சுதை(cement) ஆலைகள், உற்பத்தி ஆலைகள், மீ உயர் அழுத்த பரப்பகங்கள்(transmissions), பகிர்மான முறைமைகள், பாறைவேதியல்(petrochemical) ஆலைகள்  ஆகியவற்றுக்கான முழுமையான தளவாடகங்களையும் கருவிகளையும் அளிப்பதற்கான தர மேலாளராகவும் தனிநிலை ஆய்வுப் பொறுப்பாளராகவும் விற்பனைக் கணக்கீட்டு மதிப்பீட்டாளராகவும் திகழ்ந்துள்ளார்.

. இந்தியத் தொழிற்காலைகளின் செய்முறைத் தளவாடங்களைப் பேணுவதற்கான முறைமை, தொழில்நுப்பத் தணிக்கையாளராகச் சிறந்துள்ளார்.

   பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள் ஆகியோருக்குப், பயனர் தளங்கள், பெருநகர மையங்கள், பணியகப் பயிற்சிமையங்கள்  ஆகியவற்றில்  புதுப்பாணி மேலாண்மைக் கோட்பாடுகள், பேணுகைப் பொறியியலில் திறன் மேம்பாடு,  ஆகியவற்றில் பயிற்சித் திட்டங்களும்  பட்டறைகளும்  அமைப்பதில் வல்வலவராக விளங்குகிறார்.

  2003 முதல் தனிப்பட்ட பொறியியல் நெறியுரைஞராகச் செயல்பட்டுப் பல நிறுவனங்களின் தரமான உற்பத்திக்குக் காரணமாகவும் இவற்றால் வாடிக்கையாளர்கள் நற்பயன் அடையவும் காரணமாக விளங்கி வருகிறார்.

 தொடக்கத்தில் மதுரை தியாகராசர் ஆலையில் சில மாதங்கள் பணியாற்றிவிட்டு,    மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Electrochemical Research Institute) தன் பணியைத் தொடங்கினார்; இரும்பில்லா மாழை உற்பத்தியிலும் வழிமுறை எறிகணை மின்னழுத்தத் தொகுதியிலும் ஆராய்ச்சி, மேம்பாட்டுப்பணிகளில்  சிறப்பாக ஈடுபட்டிருந்தார்.

 அதன்பின்னர் 1969 இல் இந்திய அரசின் அணுஆற்றல் துறையில் தம் பணியைத் தொடர்ந்தார். கல்பாக்கத்தில் உள்ள இதன்  அலுவலகத்தில் தரக்கட்டுப்பாடு, ஆய்வுப்பிரிவில் முதுநிலை பொறியாளராகப் பணியாற்றினார்.

  இதன் மூலம், வடிவமைப்பு, கொள்முதல் ஆகியவற்றில் தர உறுதிப்பாட்டை வழங்கி, விற்பனைத்தரக் கடுங்கண்காணிப்பிலும் கட்டமைப்பு மேற்பார்வையிலும் கருத்து செலுத்தினார்.  பற்றுவிப்பிலும் (welding)சிதைவுறாஆய்வு,  விற்பனை மதிப்பீடு ஆகியவற்றிலும் முதன்மை அளித்துத்  தர உறுதிப்பாடு, தரக்கட்டுப்பாடு,ஆய்வு முதலான துறைகளின் எல்லா நிலைகளிலும் பணியாற்றினார்.

  இத்தாலி என்சிகோ-மிலான் நிறுவன அழைப்பில் 1977 முதல் இங்கே பணியாற்றினார்.   இந்நிறுவனம் சார்பில் உறைவிடப் பொறியாளராக, முதலில்   இந்தியாவில் பணியைத் தொடங்கியவர்(5/77-10/78) அடுத்து ஈரானிலும் (10/78-2/79),  பின்னர் மேற்கு செருமனியிலும் (10/79-5/80) தொடர்ந்து  சப்பானிலும் (6/80-5/87),    நிறைவாக இங்கிலாந்திலும் (5/87-101/88) பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்திலேயே  இன்காக்கு (INCOK )என்னும் கொரிய நிறுவனம் சார்பில் உறைவிடப் பொறியாளராகப் பணியாற்றினார்.( 11/88-1/1992, 1-6/1994).

  அனைத்து இடங்களிலும் பயனுறுவோருக்கான முழுமையான தளவாடங்கள், கருவிகள் ஆகியவற்றின் தரக்கட்டுப்பாட்டிற்குத் திறம்பட வழிவகுத்தார். அதனால் இந்நிறுவனங்களுக்கும் இந்நிறுவனங்களின் வாடிக்கயைாளர்களான பிற அயலக நிறுவனங்களுக்கும் நற்பெயர் கிட்டியது என்று  சொல்லவும் வேண்டுமோ?

.  இப்பன்னாட்டு நிறுவனங்கள் சார்பில் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் பணியாற்றித் தம் திறமையால் அந்நிறுவனங்கள் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருந்து, நற்பெயர் ஈட்டியுள்ளார்.

  தாயகம் திரும்ப விரும்பி 1992 இல்  ஆஃபின்கான் நிறுவனத்தில் (2/1992 – 3/2003 ;  1994 இல் 7 திங்கள் நீங்கலாகப்) பணியாற்றினார். கோட்ட மேலாளராகச் சேர்ந்து செயல் இயக்குநர் வரை இங்கே உயர்வடைந்தார்.  இங்கே இந்தியாவில் செயல்நிலைத் தளவாடங்களின் பேணுகைக்கான ஒரே அமைப்பான ஆஃபின்கான்  பொறியியல்  பேணுகை-ஆராய்ச்சியகத்தை     (Hofincons Institute of Maintenance Engineering & Research)  நிறுவித் தலைமை தாங்கினார்.

  14 ஆண்டிற்கும் மேலாக அயலக நிறுவனங்களின் நெறியுரைப் பொறியாளராக (consultant – engineer)   இந்நிறுவனப்பணிகளை ஆற்றுப்படுத்தி வருகிறார். இவற்றின் மூன்றாம் தரப்பு ஆய்வாளராகவும் தர உறுதிப்பாட்டுப் பொறியாளராகவும் குழுத் தலைவராகவும் செயல்பட்டு நன்னிலையில் பொருள்கள் உற்பத்தி ஆக உழைப்பை நல்கி வருகிறார்.

  அமெரிக்க நிறைநிலை ஆய்வுக் கழகத்தின் (ASNT) மேனாள் முதுநிலை உறுப்பினர்,

 இங்கிலாந்து பற்றகத்தின் (Welding Institute, UK)  மேனாள் முதுநிலை உறுப்பினர்

 முதலான  பொறுப்புகளின் மூலம் பன்னாட்டுப் பொறியாளர்களுடன் கலந்து பட்டறிவைப் பகிர்ந்து கொண்டார். இப்பொழுது இங்கிலாந்திலுள்ள  கட்டுப்பாட்டு பட்டய நிலையத்தின் பட்டயத் தரத் தொழில்நெறிஞராகத் (Chartered Quality Professional of the Chartered Quality Institute, UK ) திகழ்கிறார்.

  பொருள்கருவி காலம் வினைஇடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயலாற்றும் (திருக்குறள் 675) திறம் மிக்கவராகத் திருவேலன் திகழ்ந்தமையால். பணியிடங்களில் எல்லாம் பாராட்டும் சிறப்பும் பெற்றார்.

  இலக்குவனார் – மலர்க்கொடி இணையருக்கு  ஐப்பசி 24, 1973 / நவம்பர் 09, 1942 இல்  நன்மகனாய்ப் பிறந்தார். மரபில் பற்று மிக்கவரான பேராசிரியர் இலக்குவனார் தம்தந்தையின் பெயரான சிங்கார வேலன் என்பதையே அழகுதமிழில் திருவேலன் எனத் தம்மகனுக்குச்சூட்டினார். (தம் தந்தையின் பெயருடன் தம் தாத்தாவின் பெயரையும் சேர்த்துத் தம்முதல் பேரனுக்கு முத்துவேலன் எனப் பெயர் சூட்டினார்.)

  இவருக்கு முன் பிறந்த முதல் மகன் 2 அகவையிலேயே இயற்கை எய்திவிட்டார். எனவே, திருவேலன் வளர,வளர, தலைமகனுக்குரிய பொறுப்பும் சுமையும் இவரை வந்தடைந்தன.

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல் என்னும் (திருவள்ளுவர்)

திருக்குறளுக்கு (எண்1026) ஏற்பத் தன்னை அவர் தலைமகனுக்குரிய கடமையாளராக மாற்றிக் கொண்டார்.

  மாணவப்பருவத்திலேயே தந்தையின் இ்லக்கியப்பணிக்கு முகவர்கள் கணக்கு வழக்கு, பதிவேடுகள் பேணல் முதலான பணிகளைப்பார்த்துத் துணை நின்றுள்ளார்.

 பல்வேறு வெளிநாடுகளில் பணி புரிந்தாலும் தமிழுணர்வுடனே வாழ்ந்தவர். மொழிக்கொலையைக் காணும் பொழுதெல்லாம் நம்நாடு நம்மொழியை அழிவுப்பாதையில் கொண்டுசெல்கிறதே என வேதனையால் வாடியவர்.

  செயல்திறனால் பெருமை பெற்று உயர்பவர் தலைவரால் மதிக்கப் பெறுவார் என்கிறார் திருவள்ளுவர்.

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்

ஊறெய்தி உள்ளப் படும் (திருக்குறள் 665).

அதற்கேற்ப இவர் பணித் தலைவர்களால் பெருமை படுத்தப்பட்டுள்ளார்.

 இவரது பணிச்செம்மைக்கும் எழுத்துவன்மைக்கும் எடுத்துக்காட்டாக “நெகிழ வைத்த அயல்நாட்டார் பண்புகள்” – என்னும் தலைப்பில் அகரமுதல இதழில் வந்துள்ள கட்டுரையைக் குறிப்பிடலாம்.

  தான் சார்ந்த பணிகளில் வாய்ப்புள்ள இடங்களில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக்குபவர். இதனால் நண்பர்களையும் தமிழ்ப்பற்றில் ஆற்றுப்படுத்துபவர்.

  தமையனாக மட்டுமல்லாமல் உடன்பிறப்புகளுக்குத் தந்தையுமானவர். அன்பும் பண்பும் கொண்டு அனைவரையும் அரவணைத்துச் செல்பவர். செல்லம்மாள் என்னும் மங்கை நல்லாளைக் கைப்பிடித்த இவருக்கு முத்துவேலன், மலர்க்கொடி என்னும் மக்கட்செல்வங்களும் அவர்கள் வழிப் பேரச் செல்வங்களும் உள்ளனர்.

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். (திருவள்ளுவர்)

 என்னும் திருக்குறளுக்கு(1021) எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்.

அறிவார்ந்த ஆசானாய், ஆற்றல்மிகு வழிகாட்டியாய்த் திகழும் பொறி.இ.திருவேலன்
எல்லா நலமும் வளமும் இனிதே பெற்று நூறாண்டு வாழ்க! .

-இலக்குவனார் திருவள்ளுவன்